செவ்வாய், 30 ஜனவரி, 2018

எடப்பாடியின் டெல்லி கப்பம் நிறுத்தம் ? குருமுர்த்தி + எடப்பாடி Gang இற்கு குழிபறிக்கும் சுப்பிரமணியன் சாமி

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒருவாரத்தில் நாம் எதிர்பார்க்கின்ற தீர்ப்பு நிச்சயம் வரப்போகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் மாதக்கணக்கிலோ -வாரக்கணக்கிலோ அல்ல, ஒரு சில நாட்கணக்கில் இந்த ஆட்சி கவிழப்போவது உறுதி'
பல கட்சிகளிலிருந்தவர்கள் கடந்த 23-ந் தேதி தி.மு.க.வில் இணைந்த விழாவின்போது அறிவாலயத்தில் இப்படிப் பேசியவர் மு.க.ஸ்டாலின். அரசியல் சாசனத்தை சுட்டிக்காட்டி அவர் இப்படிப் பேசினாலும், அதற்கு முந்தைய நாள் (ஜன.22) சென்னை -கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் டாக்டர் மோகன் காமேஸ்வரனின் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலினுடன் கலந்து கொண்ட சுப்பிரமணிய சாமி தந்த உறுதிதான் ஸ்டாலின் பேச்சுக்கு கூடுதல் பலம் சேர்த்தது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

;அந்தத் திருமண விழாவுக்கு மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி வந்திருந்தார். சுப்பிரமணியசாமியுடன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா வருகை தந்தார். மணமக்களை வாழ்த்திய பிறகும், ஸ்டாலினும் சாமியும்  பேசிக் கொண்டிருந்ததை கவனித்த மாநில உளவுத்துறையினர் அதனை மோப்பம் பிடித்து நோட் போட நினைத்தனர். கடைசிவரை முடியவில்லை. "ஜெ. ஆட்சியாக இருந்தால் அரை மணிநேரத்தில் முழு விவரமும் மேலிடத்திற்குப் போயிருக்கும். இப்போது அப்படி இல்லை' என்கிறது காவல்துறை தரப்பு.

திருமண விழா சந்திப்பு குறித்து சாமியின் நெருங்கிய நண்பர்களிடத்தில் நாம் விசாரித்தபோது, ‘’""கலைஞரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் சாமி. அவரிடம் ஸ்டாலின், "எடப்பாடி அரசுக்கு பா.ஜ.க. முட்டுக்கொடுத்து வருவதை மக்கள் சகிக்கவில்லை' என சொல்ல... "மோடிக்கு சில உண்மைகளைப் புரிய வைத்திருக்கிறேன். அதனால் மேலே நிறைய மாற்றம் தெரியுது. பழனிச்சாமியும் அவரது அமைச்சர் சகாக்களும் செய்திருக்கும் ஊழல்களைத் திரட்டி மோடியிடம் கொடுத்துவிட்டேன். ஜெயலலிதா மீது எப்படி சொத்துக் குவிப்பு ஊழல் வழக்குப் போட்டேனோ அதேபோல எடப்பாடி பழனிச்சாமி மீதும் ஊழல் வழக்குப்போட ரெடியாகிக்கிட்டிருக்கேன். கவர்னர் என்னோட நண்பர்தான். விரைவில் அவரை சந்தித்து முதல்வர் மீது வழக்குப்போட அனுமதி கேட்பேன். அது கிடைத்ததும் சட்டரீதியா இந்த ஆட்சியைக் கவிழ்க்கிறதுதான் என் வேலை' என சாமி சொல்லியிருக்கிறார். "தமிழ்நாடே அதைத்தான் எதிர்பார்க்குது' என  கமெண்ட் பண்ணியிருக்கிறார் ஸ்டாலின்''‘என்கின்றனர்

எடப்பாடிக்காக கேரள கவர்னர் சதாசிவமும், ஓ.பி.எஸ். சகாக்களுக்காக அருண்ஜெட்லியும் பிரதமரிடம் பேசி வருகின்றனர். அமைச்சர் தங்கமணிக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்கள் எடுக்கும் முயற்சிகளினால் தமிழக அரசியலை கவனிக்கும் மத்திய அமைச்சர்கள் சிலரும் இந்த ஆட்சி நீடிக்க உறுதுணையாக இருக்கின்றனர். அருண்ஜெட்லிக்கும் சாமிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அதனாலேயே இந்த ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார் சாமி. அதற்கேற்ப மோடியிடம் மெல்ல காய் நகர்த்தி வருகிறார். அதைப் புரிந்ததால்தான் சசிகலா தரப்பு சாமியை வளைத்து வைத்திருக்கிறது.

சமீபத்தில், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது பற்றி விவாதிக்க எடப்பாடி பழனிச்சாமியிடம், பட்டுக்கோட்டை சாமிநாதன் மூலம் நேரம் கேட்டிருந்தார் சாமி. அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த எடப்பாடி, குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டு மறுநாளே கேன்சல் செய்துட்டார். டென்ஷனான சாமி, ""எடப்பாடிக்கு நான் யாருன்னு காட்டுறேன்னு கோபமா சொன்னாரு'' என்கிறார்கள் அவரைச் சார்ந்தவர்கள். இது குறித்து பட்டுக்கோட்டை சாமிநாதனிடம் நாம் பேசியபோது, ‘’சாமிக்காக நான்தான் அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். கொடுத்த அப்பாயிண்ட்மென்ட்டை முதல்வர் ரத்து செய்ததற்கான காரணம் எனக்குத் தெரியாது. அதே சமயம், அப்பாயிண்ட்மென்ட் ரத்தானதில் சாமிக்கு கோபம் இருந்தது உண்மைதான்'' என்றார் அழுத்தமாக.

22-ந் தேதி நடந்த திருமண விழாவில் சாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஜுடீஷியல் கிருஷ்ணமூர்த்தி. ஒரு காலத்தில் சங்கரமடத்தில் கோலோச்சிய கிருஷ்ணமூர்த்தி, டெல்லிக்குப் போய் உச்சநீதிமன்ற வட்டாரத்திலும் அரசியல்வாதிகளிடையிலும் பாலமாக மாறியவர். அதனாலேயே "ஜுடீஷியல்' என்கிற அடைமொழி அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. அவரை அமீத்ஷாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் சதாசிவம். அதன்மூலம் அமீத்ஷாவுக்கும் எடப்பாடிக்கும் இடையே பாலமாகவும் மாறினார் கிருஷ்ணமூர்த்தி. திருமண விழாவில் கிருஷ்ணமூர்த்தியிடம் சாமி, "ஆட்சி எவ்வளவு நாளுக்கு ஓடும்?' எனக் கேட்டபோது, "தமிழக  பட்ஜெட் முடியற வரைக்கும் ஓடும். அதன்பிறகு சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்வதற்கான சூழல் உருவாகும்' என டெல்லி சிக்னல்களை கிருஷ்ணமூர்த்தி சொல்ல... அதைக்கேட்டு சிரித்துக்கொண்டார் சாமி''’என்கின்றன விபரமறிந்த வட்டாரங்கள்.

இதற்கிடையே, ஒரு நிறுவனத்தின் மூலமாக டெல்லிக்கு ஆட்சியாளர்கள் கட்டி வந்த கப்பம், திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறது. நிறுத்தச்சொல்லி டெல்லியே கட்டளை பிறப்பித்திருக்கிறது என்கிறார்கள்.  இந்த நிலையில், தனது ஆட்சிக்கு எதிராக பின்னப்படும் வலைகளை அறிந்து, அதனை அறுத்தெறியும் வேலைகளை தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக டெல்லிக்கும் சென்னைக்கும் ரகசியமாகப் பறந்துகொண்டிருக்கிறார் எடப்பாடிக்கு நெருக்கமான மூத்த அமைச்சர் ஒருவர்.&">-இரா.இளையசெல்வன்& நக்கீரன்

கருத்துகள் இல்லை: