வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

பத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ... வினவு


னநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ! என்ற தலைப்பின் கீழ் சென்னையில் 21.01.2018 அன்று மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர், பேராசிரியர் என பலரும் நீதித்துறையின் இன்றைய நெருக்கடி நிலை குறித்து பேசினர்.
பத்திரிக்கையாளர் மணி அவர்கள் பேசுகையில்; “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கண்ணையா குமார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, “நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் முடிந்த பிறகு இதுவரையில் நடக்காத விசயங்கள் நடக்கின்றன” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். பல ஊடகங்கள் இதை பற்றி பெரியதாக பேசவில்லை .


பத்திரிக்கையாளர் மணி
டெல்லியில் இருக்கும் எனது நண்பர்களிடம் விசாரித்த போது, இப்போது நான்கு நீதிபதிகள், தலைமை நீதிபதியின் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளில் மருத்துவமனை ஊழல் போன்ற விசயங்கள் மட்டுமே பிரதானமானது இல்லை என்றும்; கடந்த ஆறு, ஏழு மாதங்களாக கொலிஜிய முறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விசயத்தில், மத்திய அரசு கூறிய 90% ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களை தான் தீபக் மிஸ்ரா நியமித்துள்ளார், இதுவே முக்கியமான குற்றச்சாட்டு என கூறுகின்றனர்.”
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார். 2003 -ல் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு வழக்கில் இவர் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு வருகின்றது, அந்த வழக்கிலும் இவரே நீதிபதியாக இருக்கிறார். இப்படி சட்டத்திற்கும் அப்பாற்பட்டும், இயற்கை நீதிக்கு அப்பாற்பட்டும் எல்லா விசயங்களும் இப்போது நடக்கின்றது.
குஜராத் கலவரத்தில் 3000 முஸ்லிம்கள் வெட்டி கொல்லப்பட்டார்கள். இந்த கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம், மகாராஷ்ராவிற்கு மாற்றுகிறது. இதில் மோடியை ‘நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல’; என்று விமர்சித்த நீதிபதிகள் பின்பு ஆதரவாக பேசுகிறார்கள். இப்படி நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மாறி கொண்டே வருகிறது.
இந்த விவாதம் நாடு தழுவில் அளவில் நடக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியல் நடத்த கூடியவர்கள் கண்டிப்பாக இதை செய்ய மாட்டார்கள். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் தான் செய்ய வேண்டும். எல்லோரும் கரம் கோர்த்து போராட வேண்டிய நேரம் இது, இதில் கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள், காந்தியவாதிகள் என அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் கண்டிப்பாக பி.ஜே.பி போன்ற மதவாத சக்திகள் இருக்க கூடாது.” என தனது உரையில் கூறினார்.
அவரைத் தொடர்ந்து என்.ஜி.ஆர் பிரசாத் – மூத்த வழக்கறிஞர், அவரது உரையில் “நீதிமன்றம் மாற வேண்டுமென்றால் மக்களுடைய போராட்டங்கள் இருக்க வேண்டும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் வெளியே போராடினால் தான் நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி ஜெயிக்க முடியும். நாங்கள் வாதாடியதால் தான் ஜெயித்தோம் என்று சொன்னால் நாங்கள் பொய் சொல்கிறோம் என்று அர்த்தம். மக்கள் போராட்டமே தீர்ப்பை தீர்மானிக்கிறது.

என்.ஜி.ஆர் பிரசாத் – மூத்த வழக்கறிஞர்
நீதிமன்றத்தில் நடக்கும் ஊழலை பற்றி சாந்தி பூஷண் போன்றோர் நீண்ட காலமாக பேசி கொண்டிருக்கின்றனர். தலைமை நீதிபதிகளில் 50% பேர்கள் ஊழல்வாதிகள் என்றார். அவர் சொன்னதற்கு இன்றுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை.
பிரசாந்த் பூஷண் மருத்துவக் கல்லூரி வழக்கில் ஊழல் இருக்கிறது. தலைமை நீதிபதி மீதே குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் தலைமை நீதிபதி விசாரிக்க கூடாது என்றார். தலைமை நீதிபதியோ “இந்த வழக்கில் தலையிடவில்லை” என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரே ஒரு பென்ச் யை நியமித்து, வழக்கை தள்ளுபடி செய்கிறார்.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கிறார். அப்படி நீதிமன்றம் வசூல் செய்தால் நாங்கள் எல்லோரும் திருப்பதி உண்டியல் போல் சில்லறைகளை அனுப்பலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். ஏனெனில் எந்த தவறும் செய்யாதவர் எதற்கு அபராதம் கட்ட வேண்டும்?
நீதிமன்றத்தில் பேச்சுரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றால் நீதிமன்ற அவமதிப்பு பிரிவை முதலில் நீக்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. பிரசாந்த் பூஷண் போன்று துஷ்வந் தவே, இந்திராஜி, காமினி ஜேஸ்வாக் போன்றோர், வெளியில் இருந்து இந்த பிரச்சனைகளை தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

நான்கு மூத்த நீதிபதிகள் வெளியே வந்து சொன்ன பிறகு தான் மக்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. மக்கள் தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். எல்லா இடங்களிலும் பிரச்சனை செய்ய வேண்டும். மக்கள் தான் போராடி சரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும். இங்கு நடந்து கொண்டிருக்கும் கூட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதே போல வழக்கறிஞர்கள் கூட்டம் நடத்த வேண்டும். நீதிமன்றத்திற்கு அப்பால் தான் நீதி இருக்கிறது.” எனக் கூறினார்.
பின்னர் பேசிய பேராசிரியர் கருணானந்தம் (ஓய்வு); “நீதிமன்றம் புனிதமானது என்று கூறி மாயையை உருவாக்க விரும்புகிறார்கள். இந்து நாளிதழில் உஜ்ஜல் நிகாம் என்பவர் எழுதிய கட்டுரையில் “நீதிமன்றத்திற்குள் பிளவு வந்தால் ஜனநாயகம் நிலைப்பதே சிரமமாகிவிடும்” என்று ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு பிறகு நீதிபதிகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை பற்றி பொதுமக்களிடம் பேசுவது தவறு என்றும் கூறிகிறார்.

பேராசிரியர் கருணானந்தம் (ஓய்வு)
மேலும் இந்த நாட்டின் நிலைப்பு இரண்டு அடைப்படைகளை கொண்டது, நாட்டினுடைய நாணயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும், இரண்டாவதாக, நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டு மக்களுக்கு நாணயத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்துவிட்டது.
நீதித்துறையின் மீது நம்பிக்கை வையுங்கள், நீதிபதிகளை கடவுளாக பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
ஜனநாயகத்திற்கு பேராபத்து – ஜனநாயகம் என்றால் இவர்கள் என்ன நினைக்கிறார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை தெளிவாக்கி விட வேண்டும். ஜனநாயகம் என்றால், முதலாளிகளை உருவாக்க ஒரு கட்டமைப்பு என்று நினைக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்பதற்கு ஒரு எஜமானன் தேவை, அதற்காக ஒட்டு போட்டு தேர்ந்தேடுப்பது மட்டும் தான் ஜனநாயகம், மற்றவற்றை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
ஆனால் ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள் என்று நினைக்கிறோம். இறுதி என்பது மக்களிடம் தான் இருக்கிறது. மக்கள் தான் அடிப்படையில் அதிகாரம் படைத்தவர்கள். இவர்கள் தான் தெய்வங்களை உருவாக்குகிறார்கள். அரசியலைப்பு கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மக்களால் உருவாக்கப்பட்ட அரசியலைப்பை கண்காணிக்காவிட்டால் எப்படி ஜனநாயகமாக இருக்கும். சாமானிய மக்களின் கடைசி புகளிடம் என்கிறார்கள், பணம் இல்லாமல் உச்சநீதிமனறம் செல்ல முடியுமா? பூசாரிகளாகதான் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.
அனிதா விசயத்தில் எப்படி உச்சநீதிமன்றம் போக முடிந்தது என்று கிருஷ்ணசாமி கேட்கிறார். அப்படி என்றால் சாமானிய மக்கள் போக முடியாத இடம் என்று இவர்களே ஏற்று கொள்கிறார்கள். 50% மக்களுக்கு எட்டாத இடம் எப்படி ஜனநாயக அமைப்பாக இருக்க முடியும். நீதிமன்றம் அனைவரும் அனுக கூடியதாக இருக்க வேண்டும். இவர்கள் தெய்வ குற்றம், தேச குற்றம் , தெய்வ விரோதிகள், தேச விரோதிகள் என்பார்கள். தெய்வங்களே பல தீர்ப்புகளை தவறாக எழுதியதாக புராணங்கள் இருக்கின்றன. சிவபுராணத்தில் நக்கீரனுக்கு நேர்ந்தது என்ன?
உச்சநீதிமன்றத்தில் நடப்பது சகோதர சண்டை என சிலர் கருதுகிறார்கள். சில நெறிகள் தெரிந்தே மீறப்படுகின்றன. தீபக் மிஸ்ரா, அவர் சார்ந்த வழக்கை அவரே விசாரிக்க கூடாது என்பது அடிப்படை அறம், விழுமியம், இது தெய்வத்திற்கு பொருந்ததா? நீதிமன்ற நெறிமுறைகள் நியாயமாக இருக்கிறதா? அப்படியில்லை, தீபக் மிஸ்ரா தெய்வமில்லை என்பது தெரிகிறது. பொதுமக்கள் என்றால் ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். நீதிமன்ற விசயங்களை பொதுப்படையாக விவாதிக்க வேண்டும். விமர்சனத்திற்கு உட்படாத எதுவும் ஜனநாயகமல்ல. எதுவும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். .
1951 -ல் அரசியலைப்பு சட்ட திருத்தம், இடஒதுக்கீடு சம்பந்தமாக வந்த பொழுது நீதிமன்றத்தில் சட்டவிரோதம் என்று தீர்ப்பு வந்தது. பெரியார், மக்கள் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என போராடி, பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வர செய்தார். நீட் தேர்வை நீதிமன்றம் தான் கட்டாயப்படுத்தியது. போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டத்தில் மந்திரியை போல நீதிபதிகள் பேசுகிறார்கள்.
பி.ஜே.பி -க்கும் நீதித்துறைக்கும் கூட்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் தீர்ப்புகள் விளக்கப்படுவதில்லை. எதையும் தீர்ப்பாக சொல்லி விட்டு தப்பித்து கொள்கிறார்கள். இது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும். ஜனநாயகத்தில் நீதிமன்றங்கள் மக்களுக்கான அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர மக்களை ஒடுக்கும் அமைப்பாக இருக்க முடியாது. ஒடுக்குபவர்களுக்கு துணை போக கூடாது. சாமானிய மக்கள் என்பவர்கள் அம்பானி, அதானி அல்ல! சாமானிய மக்களை பற்றி அக்கறையில்லாத நீதிமன்றங்களாக இருக்கிறது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா நீதிமன்றம்? நீதித்துறை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் அதை பற்றிய விவாதங்கள் துவங்க” வேண்டும் என பேசினார்.
(தொடரும்)
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு : 91768 01656,
E-mail: ppchennaimugmail.com

கருத்துகள் இல்லை: