ஞாயிறு, 28 ஜனவரி, 2018

பஸ் கட்டணத்தை சிறிய அளவில் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு.. கண் துடிப்பு நாடகம் என ..

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: பஸ் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு
மாலைமலர் :தமிழக அரசுப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் கனிசமாக உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது கட்டணங்களை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.> சென்னை: தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மாநகர பஸ்களில் 3 ரூபாயாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாகவும் அதனுடன் விபத்து காப்பீடு மற்றும் சுங்க வரிக்காக கூடுதலாக 1 ரூபாயும் சேர்த்து 6 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள், குளிர் சாதன பஸ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் இறங்கினர். மேலும், தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.>
வரும் திங்கள் அன்று பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர். இது மட்டுமல்லாமல் கட்டண உயர்வுக்கு பின்னர் அரசுப்பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால், தினமும் 10 கோடி அளவில் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இன்று தேனியில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சிகள் போராட்டம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கட்டண உயர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என அவர் கூறினார்.

இந்நிலையில், துணை முதல்வர் பேட்டியளித்த சில மணி நேரங்களில் பஸ் கட்டணத்தை குறைத்து அரசு அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட கட்டணங்களின் விபரங்கள் பின்வருமாறு:-

மாற்றியமைக்கப்பட்ட புறநகர் கட்டணம் (மொபசல்):-

தற்போது சாதாரண பேருந்துகளில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்படுகிறது. விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன சொகுசு பேருந்துகளில் (அல்ட்ரா டீலக்ஸ்) 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்படுகின்றது.



மாற்றியமைக்கப்பட்ட நகர் மற்றும் மாநகர் பேருந்துக் கட்டணம் (டவுண், நகரம், சென்னை):-

சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5லிருந்து ரூ.4ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது. அதேபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புற பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.4ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது.


                                                  
மாற்றியமைக்கப்பட்ட இப்புதிய கட்டணங்கள் நாளை (29.1.2018) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: