ஞாயிறு, 28 ஜனவரி, 2018

யார் அந்த 2G ஒப்பந்த கொலையாளி? திமுகவை தீர்த்துகட்ட சதி தீட்டிய ... சண்டே கார்டியன் பத்திரிகை ...

திமுகவை அழிக்க முயன்ற ஒப்பந்த கொலையாளியை தேர்வு செய்தது யார்?மின்னம்பலம்: பங்கஜ் வோரா
இந்தியாவில் இருந்து வெளியாகும் சண்டே கார்டியன் நாளிதழில் வெளியான கட்டுரை தமிழாக்கம் செய்து வெளியிடப்படுகிறது
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை நிர்மூலமாக்கிய ஒப்பந்தக் கொலையாளி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டவர் முன்னாள் மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத்ராய். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு அந்தப் பதவிக்கு தகுதியானவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்வு செய்தபோது, அந்தப் பட்டியலில் வினோத்ராயின் பெயர் முதலிடத்தில் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
’2ஜி அவிழ்க்கப்படாத முடிச்சுகள்’ (2G Saga Unfolds) ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில், வினோத்ராயை மத்திய தணிக்கை மற்றும் தலைமைக் கணக்காளர் பதவியில் அமர்த்தியது யார் என்று விரிவான விசாரணை செய்யப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. அவருக்கு அந்த பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது யாரென்று, இந்திய மக்களுக்குத் தெரிய வேண்டுமென்றார். ஆனால், தனது பேச்சில் வினோத்ராய்க்கு உதவிய நபர் யார் என்று ராசா குறிப்பிடவே இல்லை.

அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கின் தலைமைச்செயலாளர் டிகேஏ நாயர் மற்றும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மட்டுமே, தணிக்கை மற்றும் தலைமைக்கணக்காளராக வினோத்ராய் நியமிக்கப்படக் காரணம் என்பது மத்திய அமைச்சரவை சார்ந்த அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இதனை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அருண் பட்நாகர். இவர், சோனியா காந்தி தலைவராக இருந்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகப் பணியாற்றியவர். ’இந்தியா: சிந்திய கடந்தகாலம், தழுவும் வருங்காலம்’ (India: Shedding the Past, Embracing the Future) என்று இவர் எழுதிய புத்தகத்தின் 140-141வது பக்கத்தில், வினோத்ராய் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார். ”ஒருநாள் நள்ளிரவில், பிரதமரின் வீட்டில் அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சக்திவாய்ந்த அந்த நிதியமைச்சரும் உடனிருந்தார்” என்று கூறியிருக்கும் பட்நாகர், அந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டது டிகேஏ நாயர் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு, சூழ்ச்சிக்காரர்களில் பெயர்பெற்றவர் நாயர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகத்தில் அனுபவமிக்கவராக இருந்த புலோக் சாட்டர்ஜி என்ற அதிகாரி, பீகாரைச் சேர்ந்த 1972ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான எம்என் பிரசாத் என்பவரை அந்த பதவிக்குப் பரிந்துரைத்துள்ளார். பிரசாத் மன்மோகன்சிங்குக்கும் மிக நெருக்கமானவர் என்பதால், அவரே அடுத்த தணிக்கை மற்றும் கணக்குத்துறையின் தலைவராவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இப்படியொரு நேரத்தில்தான், நிதியமைச்சகத்தில் செயலாளராக இருந்த வினோத்ராய் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். டிகேஏ நாயர், புலோக் சாட்டர்ஜி, மத்திய அமைச்சக செயலாளர் கேஎம் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த விருந்தில் பங்கேற்றிருக்கின்றனர். அதில் கலந்துகொண்ட அனைவரும், வினோத் ராய் நிதியமைச்சகத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அவருக்குப் பெரிதாக ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று விருப்பப்பட்டிருக்கின்றனர்.
அப்போது, அந்த விவாதத்தினுள் நுழைந்த டிகேஏ நாயர், மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரே தேர்வு வினோத் ராய் தான் என்று உறுதியளித்திருக்கிறார். அதன்பிறகு, அதனை ஈடுகட்டுவதற்காக உலகவங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எம்என் பிரசாத். பட்நாகரின் புத்தகத்தில், இந்த விவரங்கள் பதிவாகியிருக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மேல்மட்டத்தில் நடந்த இந்த விவகாரம், இப்போது வெளிச்சம் பெறுகிறது என்பதோடு இது முடிந்துவிடவில்லை. வினோத்ராயின் நியமனத்தில் யாருக்கு தொடர்பிருக்கிறது என்று விசாரணை செய்யுமாறு ஆ.ராசா வேண்டுகோள் விடுத்ததற்கு, அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வீழ்த்தியதோ, மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தியதோ காரணம் கிடையாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா மட்டும்தான், 15 மாதங்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு மே 15ஆம் தேதியன்று, அவர் சிறையில் இருந்து வெளிவந்தார். அதன்பிறகு, 2ஜி வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று, 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக உத்தரவிட்டார் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி.
அதன்பிறகு, தன்னை இந்த சதியில் சிக்க வைத்ததற்குப் பின்னால் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள், அதிகாரமிக்க அதிகாரிகள், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் சில ஊடகங்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார் ஆ. ராசா. தனது அமைச்சரவை சகாக்கள் பற்றிய கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தார். உண்மை என்னவென்று தெரிந்தபோதும் பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் தன் விஷயத்தில் அமைதி காத்தது பற்றி கேள்வி எழுப்பினார்.
அந்த காலகட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் தலைமையைக் கைப்பற்றுவதற்கான அதிகார மோதல் இருந்தது பற்றி, தனது பேச்சில் கோடிட்டுக் காட்டுகிறார் ராசா. ஓய்வுக்குப் பின், இப்போதும் உத்வேகத்துடன் இயங்கி வருகிறார் வினோத் ராய். இப்போதிருக்கும் மத்திய அரசினால், வங்கிகள் வாரியக்குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ, கேரள மாநில முதலீட்டுக்குழு என பல விஷயங்களில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதன்மூலமாக, ஏதோ ஒருகட்டத்தில் இப்போதுள்ள மத்திய பாஜக ஆட்சியோடு வினோத்ராய் கைகோர்த்ததும் தெரியவருகிறது. ஆனாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்துகொண்டே தன்னை சதியில் சிக்கவைத்தது யார் என்று வெளிப்படையாகச் சொல்வதற்குத் தயக்கம் காட்டுகிறார் ராசா.
பட்நாகரின் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்கள், ஆ.ராசாவின் வார்த்தைகளைக் கூர்மைப்படுத்துகின்றன. அந்த காலகட்டத்தில், பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்தவற்றைக் காட்டுகின்றன. தனது புத்தகத்தில், தற்போது இங்கிலாந்தில் ஒளிந்துகொண்டிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கிய கடன்கள் முதல்கட்டமாக தள்ளுபடி செய்யப்பட்டது எப்போது என்பது பற்றி கூறியிருக்கிறார் பட்நாகர்.
நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் அலுவலகத்தில், செயலாளராக வினோத் ராய் பணியாற்றியபோது இது நிகழ்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு, மல்லையாவுக்கு சிறு லாபம் கூட கிடைக்கவில்லை என்று 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் மட்டுமே விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கினார் என்று சொல்லியிருந்தார்.
நம்பர் 10, ஜன்பத் சாலையில் நற்பெயர் பெறமுடியாத அந்த அதிகாரியை, பீகார் மாநில அரசின் ஆலோசகர் ஆக்கினார் மன்மோகன்சிங்; அவர், இப்போது பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கிறார். இதேபோல, சிங்குக்கு நெருக்கமான முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஒருவர் காமன்வெல்த் செயலாளராக நினைத்தார்; அது நிகழவில்லை. காந்தி குடும்பத்தினரால் பரிந்துரை செய்யப்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவிட்டது என்று தனது புத்தகத்தில் கூறுகிறார் பட்நாகர்.
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் புத்தகம் எல்லோராலும் அறியப்படும் நிலையில் இருக்க, இந்த முன்னாள் அதிகாரவர்க்க பிரதிநிதியின் எழுத்துகளோ மவுனமாக எல்லாவற்றையும் கலைத்துப்போடுகிறது. இதுவரை, பட்நாகரின் புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைகளுக்கு முந்தைய மத்திய அரசில் அங்கம் வகித்த எவரும் பதிலளிக்கவில்லை. ஆனாலும் என்ன, உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வந்துதானே ஆகவேண்டும்!?
தமிழில்: உதய் பாடகலிங்கம்

கருத்துகள் இல்லை: