செவ்வாய், 30 ஜனவரி, 2018

ஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு மருத்துவம் மறுக்கப்பட்டது .. உபியில்

கர்ப்பிணிக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை!மின்னம்பலம் :ஆதார் இல்லாததால் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நலத் திட்டங்கள், மானியம் என பலவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. சில தனியார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும்கூட ஆதார் எண்ணைக் கேட்கின்றன. அதன்படி, உத்தரப் பிரதேச மருத்துவமனை ஒன்றில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாஜ்கஞ்ச் நகரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று (ஜனவரி 29) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவருடைய உறவினர்கள் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனை ஊழியர்கள் வங்கிக் கணக்கு, ஆதார் இருந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்தக் கர்ப்பிணிக்கு ஆதார் இல்லை என்றும் உடனே மருத்துவம் பார்க்கும்படியும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனைப் பொருட்படுத்தாமல் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டுள்ளது.
இதற்கிடையே மருத்துவமனை வாசலிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சுகாதார நிலையங்களில் சிறந்த முறையில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அரசு மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது.
மருத்துவ கண்காணிப்பாளர் டி.எஸ். யாதவ், “சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: