புதன், 31 ஜனவரி, 2018

தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே: சிறப்பு மாநாடு!

தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே: சிறப்பு மாநாடு!மின்னம்பலம் :‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே - வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!’ என்ற தலைப்பில், வரும் பிப்ரவரி 3 – சனிக்கிழமையன்று, சென்னையில் மாநாட்டை அறிவித்திருக்கிறது தமிழ் தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) உள்ளிட்ட மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018 அன்று நடத்துகிறது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ளவர்களும், நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாகிஸ்தான், வங்காளதேசம், திபெத், மியான்மர், இலங்கை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களும் கலந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தனது அறிவிக்கையில் (14.11.2017) அழைத்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழகத்தில் வேலையின்றி இருக்கும் 90 லட்சம் இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்குமுன், தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்களுக்கான தேர்வில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை அனுமதித்ததால், பல நூறு பணி இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்குக் கிடைத்தது. அதில் தேர்வுத்தாள் திருத்துவதில் ஊழல் செய்தவர்கள் இப்போது பிடிபட்டுவருகிறார்கள். அம்முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் தமிழக அரசின் வேலைகள் தமிழ்நாட்டில் இருப்போர்க்கே வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாநாட்டை அறிவித்துள்ளது தமிழ் தேசியப் பேரியக்கம்.
நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தின் தலைவர் பெ, மணியரசன், “ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல் மின் நிலையம், ரயில்வே, படைக்கலத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் போன்றவற்றில் 100க்கு 80 பேர் என்ற அளவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்துகிறார்கள். 1956இல் மொழியின மாநிலமாக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு! அரசமைப்புச் சட்டப்படி உள்ள தமிழர் உரிமைகளை மறுக்கும் வகையில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வேலை வாய்ப்புகளில் கொண்டுவருவது மிகமிகத் தவறு!
மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில், அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து வேலை ஒதுக்கீடுகளுக்கான சட்டங்களும், அரசு ஆணைகளும் இருக்கின்றன.
எனவே, தமிழ்நாட்டிலும் அதுபோல் அரசுத்துறை வேலைகளில் 100 விழுக்காடும், நடுவண் அரசு வேலைகளில் – தனியார் வேலைகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கான மாதிரிச் சட்ட வரைவு 03.02.2018 அன்று சென்னையில் தமிழ் தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்படும். வரும் 11.02.2018 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்மாநாட்டில் இயற்றப்படும்’’ என்று தெரிவித்தார் பெ., மணியரசன்.
இந்த மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மஜக கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன், இயக்குநர் மு. களஞ்சியம், இயக்குநர் வ. கௌதமன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை: