செவ்வாய், 30 ஜனவரி, 2018

கனடாவில் பழங்குடி இன பெண்கள் சிறுமிகள் காணமல் போவதும் கொலையுண்டு போவதும்


Janaki Karthigesan Balakrishnan :  காணாமல் போன அல்லது கொலையுண்ட ஆதிகுடி பெண்கள், சிறுமிகளுக்கான விசாரணை
கனடாவின் வடமேற்குப் பிரதேசத்திற்கான காணாமல் போன அல்லது கொலையுண்ட ஆதிகுடி பெண்கள், சிறுமிகளுக்கான விசாரணை, திங்கட்கிழை, ஜனவரி 22, 2018 தினம் யெலோனைஃப் எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வடமேற்குப் பிரதேசத்தில் வாழும் ஆதிகுடி மக்களின் குடும்பத்தினரினாலும், கனடாவின் வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டவர்களாலும், மண்டபம் நிறைந்து ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்ச்சி வடமேற்குப் பிரதேசத்தில் வாழும் ஆதிகுடி மக்களின் மூன்று பிரிவினரான டெனே (Dene), மேறி (Metis), இனுயிற் (Inuit) ஆகியோரின் வழிபாடு முறைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. அவை டெனே யெலோனைஃப்ஸ் மேளம் (ட்ரம்) அடித்தல் கூடிய வழிபாடு, மேறி தேவாலய முறையான வழிபாடு, இனுயிற் குலிக் என அழைக்கப்படும் விசேஷ விளக்கு ஏற்றலுடன் கூடிய வழிபாடாக அமைந்தன. ஏற்கனவே ஒரு பதிவில் விளக்கியது போல் மணிகள் கோர்த்தும், வேறு வேலைப்பாடுகளுடனும் அமைந்த இருதய வடிவிலான கலைவடிவங்கள், தத்தம் இழந்த குடும்ப அங்கத்தவர் நினைவாக தயாரிக்கப்பட்டு, பல ஆதிகுடி பெண்களாலும், ஆதிகுடி அல்லாத ஏனைய பெண்களாலும், சில ஆண்களாலும் அனைத்தும் ஒருங்கே ஒரு பதாகையில் பொருத்தப்பட்டு, இந்த விசாரணைக்காக காத்திருந்தது.


அனைத்து காணாமல் போன அல்லது கொலையுண்ட ஆதிகுடி பெண்கள், சிறுமிகள் நினைவாக அவர்களை கனம் பண்ணி அப்பதாகையின் விரிப்பும், திறப்பும் விசேஷ அம்சமாக இந் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. இப்பதாகை யெலோனைஃபில் விசாரணை முடியும்வரை வைக்கப்பட்டு, வடமேற்குப் பிரதேசத்தில் விசாரணை இடம்பெறும் மற்றும் இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.
ஆதிகுடி மக்கள் இந்த விசாரணையும், அது முற்றுப்பெற்று அதன் விளைவுகளும், தமது நீண்டகால மனத்துயரிலிருந்து ஆறுதலடைய (healing) உதவுமென நம்புகிறார்கள். வடமேற்குப் பிரதேசத்தின் முந்நாள் கமிஷனர், தனது தலைமையுரையில் மனத்துயரிலிருந்து ஆறுதலடைவதென்பது, ஏற்பட்ட இழப்புகளும், மனவலிகளும் இடம்பெறவில்லை என அர்த்தமாகாது. மனத்துயரிலிருந்து ஆறுதலடைவதென்பது பாதிக்கப்பட்டவரையும், பாதிப்பிலிருந்து விடுபட்டோரையும் மேற்கொண்டு நல்ல மனநிலையுடன் வாழ்க்கையை எடுத்துச் செல்ல உதவும் என்றார்.
கனடாவில் வழமையாக நடாத்தப்படும் விசாரணைகளை விட மிகவும் வேறுபட்ட முறையில் இந்த விசாரணை இடம் பெற்றது. இது ஆதிகுடி மக்களின் பண்பாட்டு, கலாச்சார முறைகளை அனுசரித்து, அதற்கேற்ப சாட்சிகள், குடும்பத்தினர், பார்வையாளர் அனைவருக்கும் உடனுக்குடன் உடல்நல, உளநல ஆதரவு வழங்கக் கூடிய ஒழுங்குகளுடன் நடாத்தப்பட்டது. பாதிக்கப்பட்டோரும், பாதிப்பிலிருந்து விடுபட்டோரும் என சாட்சிகளாக பிரசன்னமான குடும்பத்தினருக்கு, அவரது வேறு குடும்பத்தினரும், நண்பரும் ஆதரவாக அவர்களுடன் அமரந்திருந்தனர். ஒரு விசாரணைக் கமிஷனர் தான் தனது சிந்தனை, மனம், உள்கிடக்கை (spirit) அனைத்தையும் திறந்து ஒவ்வோரு சொல்லையும் அவதானமாகக் கேட்டேன் என்றார்.
லிஸா செம்லர் எனும் பெண்மணி, 32 ஆண்டுகளுக்கு முன்பாக தனது எட்டாவது வயதில் தனது தாயார் கொலையுண்டது பற்றி மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் பேசினார். அவருடைய பரிந்துரைகளில் ஒன்றாக குடும்பங்கள் ஒருமித்து செயற்பட்டு ஆண்பிள்ளைகள் பெண்களையும், சிறுமியரையும் மதித்து, மரியாதையாக, பண்போடு பழக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதாகும். அனைத்தையும் பேசி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு பாதுகாப்பான வெளியுடன் அமைந்த இந்தப் பயணத்தின் போது, அவரது வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை, மனதைத் தொட்டவை, அதேவேளை எமக்கு பல விடயங்களையும் கற்றுத் தந்தவை எனக் கமிஷன் ஏற்றுக் கொண்டது.
ஒவ்வொரு சாட்சியினருக்கும் ஆதிகுடியினரின் கலாச்சாரப் பிரதிபலிப்பாக, வடபிரதேச ஆதிகுடி பெண்கள் நிறுவனத்தினரால் கழுத்தில் அணியும் தாவணி/சால்வை (scarf) ஒன்றும், கனடா மாகாணங்களில் அல்லது பிரதேசங்களில் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கழுகு இறகும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
கனடா நாடு நிர்மாணிக்கப்பட்ட 150 வருடங்களுக்கு முன், பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்து வந்த ஆதிகுடி மக்களின் இந்த தீவிரமான, மனவலியை ஏற்படுத்தும் விடயத்தை அணுக, இவ்வாறான முறையில்தான் கையாள வேண்டும் என உணர இத்தனை வருடங்கள் எடுத்தன என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.

கருத்துகள் இல்லை: