திங்கள், 29 ஜனவரி, 2018

போலீஸ் காவலர் 6 கள்ள துப்பாக்கிகள் விற்றதாக .. 2 பணியிடை நீக்கம் பெற்றவர்

tamilthehindu :பரமேஸ்வரன் அ.வேலுச்சாமி திருச்சி கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்றபோது திருச்சியில் கைதான சென்னை காவலர், ஏற்கெனவே அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதாகி 2 முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், 6 கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர் நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் 5-வது தெருவைச் சேர்ந்த பரமேஸ்வரன் (32). பேசின்பிரிட்ஜ் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது உறவினரான சென்னை வில்லிவாக்கம் குபேரன் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் (30), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள டாக்டர் காலனியைச் சேர்ந்த சிவா (32) ஆகியோருடன் திருச்சி வந்து, கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்ய முயன்றார்.
இதுபற்றி அறிந்த தஞ்சை ஓசிஐயூ போலீஸார், திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பரமேஸ்வரன் உள்ளிட்ட மூவரையும் துப்பாக்கி முனை யில் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7.65 எம்எம் ரக 2 துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், ரூ.15 ஆயிரம் பணம், 7 செல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, மாநகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். துணை ஆணையர் சக்தி கணே சன் தலைமையிலான போலீஸார், மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து ஆயுதச் சட்டம் 25 (1-ஏ), 25 (1-பி), இந்திய தண்டனைச் சட்டம் 399, 402 ஆகிய 4 பிரிவுகளின்கீழ் கன்டோன்மென்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, காவலர் பரமேஸ்வரன் ஏற்கெனவே 6 பேரிடம் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதாகவும், அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதாகி 2 முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:
பரமேஸ்வரன், சிறப்புக் காவல் படையில் பணிபுரிந்த போது அடிதடி வழக்கில் கைதாகி 2013-ல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 6 மாதங்கள் கழித்து மீண்டும் பணியில் சேர்ந்த அவர், 2016-ல் வழிப்பறி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், 6 மாதங்கள் கழித்து மீண்டும் பணியில் சேர்ந்து கடைசியாக பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.
இவர், கள்ளத் துப்பாக்கிகளை பிற மாநிலங்களில் இருந்து வாங்கி, இதுவரை 6 பேரிடம் விற்றதாக தெரியவந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சென்னையில் பணிபுரிந்த மற் றொரு காவலர் தற்போது இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக ஒவ்வொருமுறையும், தலா ஒரு துப்பாக்கியை மட்டும் எடுத்துச் சென்று, வெளியூர்களில் விற்று வந்துள்ளார்.
இவரிடம் இருந்து இதுவரை கள்ளத் துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டவர்கள், திருச்சியில் யாருக்கு கொடுக்க இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரி கிறது

கருத்துகள் இல்லை: