வியாழன், 1 பிப்ரவரி, 2018

இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி ... ராஜஸ்தான் மே.வங்கத்தில் காங்கிரஸ் திரினாமுல் வெற்றி

இடைத்தேர்தல் முடிவுகள் - பாஜக தோல்வி!மின்னம்பலம் :ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜகவை எதிர்த்து காங்கிரசும் , மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரசும் வெற்றி பெற்று உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர், அல்வார் மக்களவைத் தொகுதி மற்றும் மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களின் மறைவினால் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த திங்கட்கிழமை ( 29 ,ஜனவரி) அன்று நடந்தது . அன்றைய தினமே மேற்குவங்கத்தின் உல்பெரியா மக்களவைத் தொகுதி மற்றும் நோவபாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களும் நடைப்பெற்றன.
இந்த ஐந்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் இன்று (1,பிப்ரவரி) காலை 7 மணியளவில் தொடங்கியது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கயிருப்பதால் அங்கே ஆட்சியிலிருக்கும் பாஜக விற்கு இது மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டது .

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியபோது அல்வார் மற்றும் அஜ்மீர் தொகுதிகளைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. மண்டல்கர் தொகுதியில் பாஜகவே முன்னிலை வகித்தது. ஆனால் கடைசிக்கட்ட வாக்கு முடிவில் 12,976 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விவேக் தகார் பாஜக வின் சக்தி சிங் ஹதாவைத் தோற்கடித்தார்.
​அல்வார் தொகுதியிலும் பாஜக வின் ஜஸ்வந்த் யாதவ், காங்கிரசின் கரன் சிங் யாதவிடம் 1,56,319 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார் .
அஜ்மீர் தொகுதியில் அரையிறுதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும் காங்கிரசே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே இரண்டு தொகுதிகளிலும் திருணமூல் காங்கிரஸ் முன்னிலையிலே இருந்தது . நோவபரா சட்டப்பேரவைத் தொகுதியில் திருணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் சிங் 70,000 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக கட்சியின் சந்தீப் பானர்ஜியை வென்றுள்ளார் .

உல்பெரியா மக்களவைத் தொகுதியில் திருணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சஜ்தா அஹ்மத் பாஜக வின் அனுபம் மாலிக்கை விட அதிகபட்சமாக 4,74,000 வாக்குகள் அதிகமாக பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள் திருணமூல் காங்கிரசுக்கு ஆதஇரவாக எதிர்பார்க்கப்பட்டது தான் . ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் மத்திய அரசுக்கு கண்டிப்பாக ஒரு பெரும் அடியாக இருக்கும்.
பல கோடியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற பாஜக வின் எந்த தேர்தல் வாக்குறுதியும் அங்கே செல்லுப்படியாகவில்லை. குஜ்ஜார்கள் மற்றும் ராஜ்யப்புத்திரர்கள் தாங்கள் மத்திய அரசினால் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்ததன் விளைவு தான் பாஜக விற்கு ஏற்பட்டிருக்கும் இந்த படுதோல்விக்குக் காரணம்.

கருத்துகள் இல்லை: