புதன், 31 ஜனவரி, 2018

3,300 சிறுமிகளுக்கு பாத பூஜை .. அரசு பள்ளி மாணவர்கள் மீது பூஜை’ திணிப்பு...


thetimestamil :இனியன் : பிள்ளையார் பொறந்த நாளுக்கு பிள்ளையாரு வேசம், கிருஷ்ணன் பொறந்த நாளுக்கு கிருஷ்ணன் வேசம், விவேகானந்தா பொறந்த நாளுக்கு விவேகானந்தா வேசம், ஆசிரியர் தினத்துக்கு ஆசிரியரின் காலை கழுவி சுத்தம் செய்து சந்தனம, குங்குமம் தடுவுதல் எனத் தொடர்ந்து இப்போ ஏதோ “கன்யா பாத பூஜை” தினம்னு பத்து வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு சம வயதுடைய ஆண் குழந்தைகளை வைத்து பாத பூஜை செய்ய வைத்திருக்கிறது இந்துத்துவ அமைப்பு.
இதில் இன்னொரு கூடுதல் அயோக்கியத் தனம் என்னான்னா மேற்சொன்ன அனைத்தும் முழுக்க, தனியார் இந்துத்துவ பள்ளிக் குழந்தைகளிடம் மட்டுமே திணிக்கப்பட்டு வந்த திணிப்புகள். ஆனால், இறுதியாகச் சொன்ன “கன்யா பாத பூஜை” க்கு அரசு பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச் சென்று செய்துள்ளனர். (மோடியின் துப்பாக்கி  பூஜை ஒருபுறம் கன்னி பூஜை மறுபுறம் என்னடா சம்பந்தம்?)

இதைவிட மிகப்பெரிய அபாயகரமானப் போக்கு வேறில்லை. இதற்காவது பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகள் தெரிவித்திருப்பது ஒரு ஓரமாக சின்னதிலும் சின்ன மகிழ்வைத் தந்தாலும், மேற்சொன்ன அனைத்துக்கும் மிகத் தீவிரமான முறையில் எதிர்வினையாற்ற வேண்டும்.
மாறாக என்ன நடைபெறுகிறது இங்கு. பலத் தோழர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத்து பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகள் வேடமிட்டு நிற்கும் புகைப்படங்களை பதிந்து குழந்தைகளின் அழகை வர்ணிப்பதைக் காண்கிறோம். கேட்டால் பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. அனைத்துக் குழந்தைகளும் வேடமிடும் போது நம் குழந்தை ஏங்கி விடும் போன்ற பதில்களும், அந்தப் பதில்களுக்கான சண்டைகளும் போட்டிருக்கிறேன். அவர்களின் வெற்றியில் இந்த மனோபாவத்தை உருவாக்குதலும் ஒன்று.
இந்துத்துவத் தனியார் பள்ளிகளில் நடைபெறும் போது கேட்கத் தவறியதன் விளைவு இன்று அரசாங்கப் பொதுப்பள்ளிகள் வரை அணிவகுத்திருக்கிறது.
புத்தக கண்காட்சியின் இறுதிநாளில் சற்றே நீண்ட உரையாடலின் போது இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். “பெரும்பாலான முற்போக்கு அமைப்புகள் குழந்தைகளிடம் அணுகுவதில் மிகப்பெரிய வெற்றிடத்தை வைத்துள்ளனர். பெற்றோர்கள் தான் சார்ந்த இயக்கங்களின் கொள்கைகளைத் தட்டையானத் திணிப்பை திணிகின்றனர். அந்த திணிப்பில் வளரும் குழந்தைகளால் இயக்கங்களுக்கு எண்ணிக்கை கூடுமே தவிர தன்னுடன் வெளியிடங்களில் பழகும் சக குழந்தைகளுடன் உரையாடல்கள் நிகழ்த்துவதோ, அபத்தங்களை கேள்வி கேட்பதோ என எதுவுமே பெரியளவில் இல்லாமல் வெறுமென வரட்டுவாதமாக மட்டுமே இருக்கிறது. ஆனால், இந்துத்துவதை கவனியுங்கள் மிக அழகாக, வண்ணமயமாக, புத்துணர்வுடன் ரசனையான வடிவங்களில் புதிதுபுதிதாகத் திணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவற்றிற்கு இணையாக இல்லாவிடிலும் குறைந்தபட்சம் புதுப்புது வடிக்கங்களிலால் குழந்தைகளிடம் அணுகாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் சமத்துவங்கள் இல்லாமல் காவிகளுக்கு அடிமை சாசனம் எழுதி வைத்துக் கொள்ளவேண்டியதுதான்.”
இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் தினம் ஒரு வடிவில் “கன்யா பாத பூஜை” போன்று அனைத்து சமூகநிலையிலும் வந்து நின்று கையசைத்துக் கொண்டிருப்பார்கள். நாம் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இனியன், பாரம்பரியமான விளையாட்டுகள் ஆவணப்படுத்தும் “பல்லாங்குழி” என்ற அமைப்பின் நிறுவனர். இந்த அமைப்பின் மூலம் குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று அறிமுகப்படுத்தி விளையாட்டுகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி வருகிறார்.

கருத்துகள் இல்லை: