புதன், 31 ஜனவரி, 2018

ஒரே தேசம்.. ஒரே தேர்தல்" : நாடு முழுவதும் சட்டசபைகள் அதிரடி கலைப்பு? தேர்தல் போர்வயில் சர்வாதிகாரம்?

 Mathi - Oneindia Tamil டெல்லி: ஒரே தேசம்...ஒரே தேர்தல் என்ற புதிய முழக்கத்தை முன்வைத்துள்ள மத்திய அரசு நாடு முழுவதும் அதிரடியாக சட்டசபைகளை எந்த நேரத்திலும் கலைக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி ஆதாயம் அடையலாம் என்பது மத்திய பாஜக அரசின் வியூகம். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி 282 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. ஆனால் கடந்த 4 ஆண்டுகாலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதனையும் பாஜக நிறைவேற்றவில்லை. குறிப்பாக பாஜகவை நம்பிய கிராமப்புற வாக்காளர்களை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளும் வகையில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. நடுத்தர மக்களை நையப்புடைக்கும் வகையில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என அத்தனையையும் திணித்து பிழிந்துவிட்டது. 
 இதனால் கிராமப்புற, நடுத்தர மக்கள் மிகக் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனைத்தான் கடந்த 4 ஆண்டுகாலத்தில் 15 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த காலத்தில் பல மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்திருந்தாலும் ஆட்சியை பிடித்திருந்தாலும் அனைத்தும் நூலிழையிலும் வன்முறை வியூகத்தின் அடிப்படையிலும்தான் நடந்தேறியது. 

தற்போதைய நிலையில் பாஜக லோக்சபா தேர்தலை மட்டும் சந்தித்தால் நிச்சயம் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்பதாலேயே முன்கூட்டியே தேர்தல் நடத்திவிடலாம் என்கிற தகவலை கசியவிட்டது. இதனால்தான் இப்போது செலவுகளைக் குறைக்கிறோம் என்ற ஒப்பாரியை முன்வைத்து 'ஒரே தேசம்... ஒரே தேர்தல்' என்கிற பல்லவியைப் பாட தொடங்கியுள்ளது பாஜக.
இதைத்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்., 
 
 அனைத்து மாநிலங்களின் சட்டசபைகளையும் அதிரடியாக கலைத்துவிட்டு லோக்சபாவுக்கும் தேர்தல் நடத்தினால் நிச்சயம் தங்களுக்கு சாதகம் என்பது பாஜகவின் வியூகம். இதனை உடனே செயல்படுத்தினால் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் அனைத்து தரப்பினது ஆலோசனைகளையும் கேட்கிறோம் என்கிற ஓரங்க நாடகங்களை நடத்த தொடங்கியுள்ளது டெல்லி. 
 
 தற்போதைய நிலையில் எதையாவது அதிரடியாக செய்து ஆட்சியைத் தக்க வைக்க முடியுமா என பதற்றத்தில் இருக்கிறது பாஜக. 2004-ம் ஆண்டு இதே போல் இந்தியா ஒளிர்கிறது என்கிற ஆரவார முழக்கத்துடன் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொண்டு படுதோல்வியை சந்திக்க நேர்ந்ததே என்கிற வரலாற்று நிகழ்வும் பாஜகவை தடுமாற வைக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை: