புதன், 17 மே, 2017

அருண் ஜெட்லி :லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம் வீடுகளில் ... பழிவாங்குதல் நடவடிக்கை அல்ல!

சிதம்பரம் வீட்டில் ரெய்டு : அருண் ஜெட்லி பதில்!லாலு பிரசாத் யாதவ் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரது வீட்டில் வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ. நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோரது, வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. அது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதற்குப் பதில் தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று மே 16ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற வருமானவரித்துறை மற்றும் சிபிஐ நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.
ஏற்கனவே, நடைபெற்று வரும் விசாரணையின் தொடர்ச்சிதான் இந்த நடவடிக்கை. போதிய ஆதாரம் இருந்தால்தான், வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் சோதனை மற்றும் பிற நடவடிக்கைகளை எடுக்கும். மத்திய அமைச்சராக அதுவும் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர், கணக்கில் காட்டப்படாத பணத்தை மறைப்பதற்காகப் போலி நிறுவனங்களைப் பயன்படுத்துவது சட்ட விரோத செயலாகும். அதைப்பார்த்துக் கொண்டு மத்திய அரசு சும்மா இருக்காது. அவர்களை விட மாட்டோம். செய்த தவறுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று மே 16ஆம் தேதி டெல்லியில், செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஒப்புதலால் பயன் அடைந்தவர்கள் எதற்காகச் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆதாயமின்றி யாரும் பணம் கொடுப்பார்களா ? எனவே, ப.சிதம்பரம் சொல்வது எடுபடாது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, 3 ஆண்டுகளாக ஊழலற்ற, நேர்மையான அரசை வழங்கி வருகிறோம் என்று கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: