ஞாயிறு, 14 மே, 2017

ஜெயலலிதா இல்லாத மாளிகைகள்! மர்மங்கள் சூழ்ந்த போயஸ்கார்டன், சிறுதாவூர் . கொடநாடு..

படங்கள்: சு.குமரேசன், நிவேதன்..  ஜெயலலிதா தங்கி வாசம் செய்த வீடுகள்  மூன்று. ஆட்சி செய்ய போயஸ் தோட்டம், கொஞ்சம் ஆட்சி - கொஞ்சம் ஓய்வுக்கு கொடநாடு, எப்போதாவது சிறுதாவூர் என அவருடைய கடந்த இருபதாண்டுகளும் இந்த மூன்று வீடுகளுக்குள்தான் கழிந்தன. இந்த மூன்று வீடுகளும் அப்போது எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன?! நேரடி ரிப்போர்ட். ஜெயலலிதாவின் சொத்துகளில் அதிக மதிப்புடையது, சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வேதா நிலையம் பங்களாதான். 1967-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா போயஸ் கார்டன் வீட்டை விலைக்கு வாங்கினார். அப்போது, அந்த வீட்டின் விலை 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். அதன்பிறகு, ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த கணிசமான தொகையை வைத்து, அந்த வீடு மெள்ள மெள்ள மெருகேற்றப்பட்டது. வீடு, தோட்டம் என்று அந்த இடத்தின் மொத்தப் பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடி. அதில் 21 ஆயிரத்து 662 சதுர அடியில் கட்டடம் உள்ளது. ரியல் எஸ்டேட் நிபுணர்கள் அதன் மதிப்பு 90 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். அரசாங்கத்தின் வழிகாட்டு மதிப்புப்படி கணக்கிட்டால் 43 கோடியே 96 லட்ச ரூபாய்.
போயஸ் கார்டன் வீட்டின் பிரமாண்டத்தை நேரில் பார்த்த வர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். முதல் தளத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கான்ஃபரன்ஸ் அறை, இரண்டாவது தளத்தில் சொகுசுத் தியேட்டர், உலகப் புகழ் பெற்ற மார்பிள்களால் இழைக்கப்பட்ட தரைகள் என்று வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட அரண்மனை இது.

சசிகலா நுழைந்தது எப்போது? 

1980-களில் வினோத் வீடியோ விஷன் என்ற பெயரில் கேசட் கடை வைத்திருந்த சசிகலா, ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் கொடுக்கும் வேலையை செய்துவந்தார். படிப்படியாக ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று போயஸ் கார்டனுக்குள் அடிக்கடி சென்றுவரும் நபராக மாறினார் சசிகலா. 1987-ம் ஆண்டு பீமண்ணா கார்டன் தெருவில் இருந்த தன் வீட்டைக் காலி செய்துவிட்டு, ஜெயலலிதாவோடு நிரந்தரமாக போயஸ் கார்டன் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். 1987-ல் இருந்து 2017 பிப்ரவரி 16-ம் தேதி வரை சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் போயஸ் கார்டன் வீடு இருந்தது.

சசிகலா மட்டுமல்ல... சசிகலாவின் உறவினர்கள் பலரும் ஒவ்வொரு காலகட்டத்தில் போயஸ் கார்டனுக்குள் செல்வாக்கு மிக்க மனிதர்களாக வலம் வந்துள்ளனர். சசிகலாவின் கணவர் நடராசனுக்கு போயஸ் கார்டனில் மேல்தளத்தில் அலுவலகமே இருந்தது. ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் கட்டடப் பணியை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதன்பிறகு, ஜெயராமனின் மனைவி இளவரசியும் போயஸ் கார்டனிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். ஆனால், ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறைக்குச் சென்றபிறகு,  இப்போது போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலாவின் உறவினர்கள் யாருமே தங்குவதில்லை.

போயஸ்கார்டனும் பூங்குன்றனும் 

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் புலவர் சங்கரலிங்கம். அவருடைய மகன் பூங்குன்றன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பூங்குன்றன் கார்டனுக்குள் தலைகாட்டுவதோடு சரி. தமிழகத்தின் சக்தி வாய்ந்த அதிகாரப் பீடமாக போயஸ் கார்டன் இருந்ததையும், அதிகாரம் இழந்து, அங்கிருந்த மனிதர்களையும் இழந்து வாழ்ந்து கெட்ட மாளிகையாக போயஸ் கார்டன் இருக்கும் முரண்பட்ட காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சிகளில் முக்கியமானவர் பூங்குன்றன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது...

ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை எப்படியாவது நம் மீது பட்டுவிடாதா என்று போயஸ் கார்டன் தெருவில் கட்சிக்காரர்கள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருப்பார்கள். நேர்த்தியாக அமைக்கப்பட்ட சாலைகளில் வி.ஐ.பி-களின் அணிவகுப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால், ஜெயலலிதா  உயிரிழந்தபிறகு இதுபோன்ற காட்சிகள் போயஸ் கார்டனில் இல்லை.

சென்னையில் அழகான வீதிகளின் பட்டியலில் பின்னி சாலையும் இணைந்ததற்கு ஒரே காரணம் ஜெயலலிதாதான். பின்னி சாலையின் துவக்கம் முதல் முடிவு வரை இரண்டு புறமும் அழகான சில்வர் காடர்களை அமைத்தனர்.டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்பும் பின்னி ரோடு, கஸ்தூரி ரங்கன் ரோடு வளைவு, நடிகர் ரஜினி வீட்டுக்குச் செல்லும் தெருவின் திருப்பத்தில் இருந்த போலீஸ் செக்போஸ்ட் எதுவும் தற்போது இல்லை.

 ஜெயலலிதா வீட்டுக்கு அருகில் சிறிய விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. `ஜெய விநாயகர்' எனப் பெயரிடப்பட்ட இந்த விநாயகர் ஆலயம், ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம். ஜெயலலிதா இருந்த வரை ஜெயலலிதா வீட்டில் பூக்கும் பூக்களைக் கொண்டுதான் ஜெயவிநாயகருக்கு அலங்காரம் நடைபெறும். இப்போது வாரத்தில் ஒருநாள் மட்டும் ஜெயலலிதா வீட்டுப் பூக்களால் அலங்காரம் நடைபெறுகிறது.

 வாடி வதங்கிய நிலையில் பூக்கள்

ஜெயலலிதா பூக்கள் மீது அளவுகடந்த விருப்பம் உடையவர். போயஸ் கார்டனில் குடியேறியதுமே அவர் செய்த முதல் வேலை, வீட்டைச் சுற்றிலும் பூச்செடிகளை நட்டு வளர்த்ததுதான். ஆரம்பத்தில் அவரே பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வழக்கத்தை வைத்திருந்தார். தனது வீட்டில் பூக்கும்  பூக்களைத்தான்,  தனது சாமி அறையிலும் பயன்படுத்திவந்தார். தற்போது அவை வாடிப்போய்க் கிடக்கின்றன.
போர்டிகோவில் இருக்கும் சுவற்றில் கிரானைட் கல்லில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா வீட்டில் இருந்து வாசலை காரில் தாண்டும்போது, தன் முகத்தைத் திருப்பி... காரில் இருந்தபடியே விநாயகரை வணங்கிவிட்டுத்தான் போவார். ஜெயலலிதா இறந்த சமயத்தில், அந்த விநாயகரை மறைத்து பேப்பர் ஒட்டி வைத்திருந்தனர். இப்போது அந்த விநாயகரையே நீக்கிவிட்டனர்.

களை இழந்த கார்ஷெட்

போயஸ் கார்டன் வீட்டைப்போலவே அதற்கு எதிரில் இருந்த ஜெயலலிதாவின் கார் ஷெட்டும், ஊழியர்கள் தங்கும் இடமும் பரபரப்பாகவே இருக்கும். அங்குதான் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்குவார்கள். அதே இடத்தில்தான் ஜெயலலிதாவின் கார்கள் அனைத்தும் நிற்கும். ஜெயலலிதா அவருடைய பயணத்துக்காக டொயேட்டா லேண்ட்க்ரூஸர் கார்களைப் பயன்படுத்தி வந்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அந்தக் காரை சசிகலா பயன்படுத்தினார். அவர் சிறை சென்ற பிறகு, அந்தக் கார்களை யாரும் பயன்படுத்துவதில்லை. அந்தக் கார்களும் தற்போது ஷெட்டுக்குள் அடைத்து பூட்டப்பட்டுவிட்டன. ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் திரும்பப் பெறப்பட்டதால், தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் தற்போது ஜெயலலிதா வீட்டு வாசலில் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்கள் பயன்பாட்டில்தான் ஜெயலலிதாவின் கார்ஷெட் உள்ளது.

புல்லட் ப்ரூஃப் கார்?

இசட் பிளஸ் பாதுகாப்பில் ஜெயலலிதா இருந்ததால், அவருக்கு புல்லட் ப்ரூஃப் காரை மத்திய அரசு வழங்கியிருந்தது. ஜெயலலிதா அந்தக் காரை பயன்படுத்தாமல் இருந்தார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அந்த புல்லட் ப்ரூஃப் காரை மத்திய அரசு வாபஸ் வாங்கிவிட்டது.

முதல் மாடியில் இருந்த ஜெயலலிதா, சசிகலா தங்கியிருந்த அறைகளுக்கு பூட்டு போடப் பட்டுள்ளது. கீழ் தளத்தில் உள்ள வரவேற்பறையை மட்டும் தினமும் திறந்து சுத்தபடுத்திவருவதாக கார்டன் பணியாளர்கள் சொல்கிறார்கள். முப்பது ஆண்டுகளாக இந்த வீட்டில் சமையல் செய்துவந்த ராஜம் அம்மாளை அவருடைய  சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டார்கள் போர்டிகோவில் டிசைனர் லைட், வாயிலில் உள்ள கார்டனில் வரிசையாக விளக்குள், மாடியில் ஃபோகஸ் லைட் என இரவு நேரத்தில் ஒளிவெளிச்சத்தில் ஜொலித்தது வேதா இல்லம். அதேபோல் ஜெயலலிதா வீட்டின் நுழைவு வாயிலின்  ஒருபுறம் வேதா இல்லம் என்றும், மறுபுறம் ஜெயலலிதா என்ற பெயர்ப் பலகைகளும் இருக்கும். `ஜெயலலிதா' என்ற பெயரில் ஒளிவிடும் வெளிச்சத்தில் மட்டும் இப்போது ஜெயலலிதா பளிச்சிடுகிறார்.

 கொடநாடு பங்களா....

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், சசிகலா மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் வாங்கினார் ஜெயலலிதா. அதில் முக்கியமானது கொடநாடு எஸ்டேட்.
கொடநாடு எஸ்டேட்டை வாங்கலாம் என சசிகலா அறிவுறுத்த, 1992ம் ஆண்டு நேரில் பார்வையிட்டார் ஜெயலலிதா. குளிர்ச்சியான காலநிலையும், ரம்மியமான சூழலும் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போக விலை பேசப்பட்டது கொடநாடு எஸ்டேட்.

கிரேக் ஜோன்ஸ் என்பவரிடம் இருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் ராமசாமி உடையார் மூலம் சசிகலா குடும்பத்தினருக்கு கை மாறியது இந்த எஸ்டேட்.

2006 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆட்சியில் இல்லாத அந்த 5 ஆண்டுகளில்  பெரும்பான்மையான நாள்களை கொடநாட்டிலேயே கழித்தார் ஜெயலலிதா. அப்போது கொடநாடு வாசம் மிகவும் பிடித்துப்போக... `மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் இங்கிருந்தே அரசு பணிகளை கவனிக்கலாம்' எனச் சொன்னதோடு, அதற்கேற்ற வசதியுடன் எஸ்டேட்டின் மேல் பகுதியில் பங்களா ஒன்றை கட்டவும் சொன்னார் ஜெயலலிதா.

இரு தளங்கள் தான் என்றாலும்,போயஸ் கார்டன் இல்லத்தை விட கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டது கொடநாடு எஸ்டேட். வி.ஐ.பி. ஹால், சிட்டிங் ஹால், 100 பேர் அமரும் கான்ஃபிரன்ஸ் ஹால், பொது டைனிங் ஹால் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. முதல்வர்  அலுவலகத்தில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இங்கு இருக்கின்றன. கூடவே ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மினி மருத்துவமனையும் உள்ளே இயங்கியது. முதல்மாடியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிரெதிராய் பிரம்மாண்ட அறைகள் இருந்தன. பங்களா முழுக்க விலையுயர்ந்த மரங்களால் பிரம்மாண்டமாக அழகுபடுத்தப்பட்டது.
ஜெயலலிதா சொன்னபடியே 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி அமைத்த பின்னர் கொடநாடு எஸ்டேட் பங்களா, முதல்வர் முகாம் அலுவலகமாக மாறியது. இனி கொடநாடு பங்களாவுக்கு வரும் கடிதங்கள், தமிழக முதல்வர் முகாம் அலுவலகம் என பெயரிட்டே அனுப்ப வாய்மொழி உத்தரவு கூட பிறப்பிக்கப்பட்டது. அதற்கேற்ப அடிக்கடி கொடநாடு வருவதை வழக்கப்படுத்திகொண்டார் ஜெயலலிதா.

கொடநாடு எஸ்டேட்டுக்கு மொத்தம் 13 வாயில்கள். இதில் எந்த வாயிலிலும் அனுமதி இல்லாமல் ஒருவரும் நுழைய முடியாது. 9,10 வது கேட்கள் தான் பங்களாவுக்கு செல்லும் கேட். இதில் கூடுதல் பாதுகாப்பு இருக்கும். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அனுமதி இருந்தால் மட்டுமே இந்த கேட்டை கடக்க முடியும்.

கொடநாடு எஸ்டேட் பகுதியில் ஒருவர் நுழைந்து விட்டால் அவரை கண்காணிக்கும் வகையில் முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். எஸ்டேட்டில் செல்போனில் ஒரு போட்டோவை கூட யாரும் தெரியாமல் எடுக்க முடியாது. அந்தளவு பாதுகாப்பு நிறைந்தது கொடநாடு எஸ்டேட்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாட்டிலும் பாதுகாப்புகள் தளர்த்தப் பட்டன. செக்போஸ்ட் அகற்றப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எஸ்டேட் முழுக்க இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் உயரிய பொறுப்புகளில் இருந்த தலைமை செயலாளரும், தமிழக காவல்துறை தலைவருக்கும் உள்ளே செல்ல அனுமதி தேவைப்பட்ட இந்த கொடநாடு மாளிகையில் தான் இப்போது கொலையும், கொள்ளையும் நடந்துள்ளன.

சிறுதாவூர் பங்களா

ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த இடங்களில் சிறுதாவூர் பங்களாவுக்கும் முக்கியமான இடம் உண்டு. சித்ரா என்பவரின் பெயரில் சிறுதாவூர் பங்களா உள்ளது. பங்களாவை சுற்றியுள்ள இடத்தில் சசிகலா, இளவரசி பெயரிலும் நிலங்கள் இருக்கின்றன. பங்களாவை சுற்றி 116 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில் 36 ஏக்கரில்  அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு நிலுவையில் உள்ளது.
சிறுதாவூர் பங்களாவின் வாயிற் பகுதி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளது. 17,500 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அடுக்கு பங்களா கட்டப்பட்டுள்ளது. ஓய்வு நேரங்களில் ஜெயலலிதா வாக்கிங் செல்வதற்காக வாக்கிங் ட்ராக் ஒன்றும் இருக்கிறது. ஓய்வு நேரத்தில் பேட்டரி காரில் அங்குள்ள தோட்டங்களை ஜெயலலிதா சுற்றிப்பார்ப்பார். பங்களாவை சுற்றியுள்ள நிலங்களில் தர்பூசணி, வேர்கடலை, காய்கறி தோட்டம், மாந்தோப்பு போன்றவை உள்ளன. இவற்றை அப்பகுதியை சேர்ந்த தாண்டவமூர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார்.

2014 தீபாவளியின் போது ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் கடைசியாகத் தங்கினார். சிறுதாவூர் பங்களாவில் வேலை செய்பவர்களோடு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.  அதன் பிறகு அவர், சிறுதாவூருக்கு வரவில்லை.
சிறுதாவூர் பங்களாவின் மூன்று வாயில்களிலும் எப்போதும் இருந்த போலீஸ் பாதுகாப்பு இப்போது இல்லை. ஆனால் வழக்கம் போலவே விவசாயம் நடைபெறுகிறது. இந்த வருடமும் காய்கறி, தற்பூசணி, வேர்கடலை என பயிரிடப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர்கள் இப்போது அடிக்கடி வந்து செல்லும் ஒரே இடம் சிறுதாவூர் பங்களா மட்டுமே! விகடன்

கருத்துகள் இல்லை: