சனி, 20 மே, 2017

கூடங்குளம் அணுவுலைக்கு கேரள நீரை கொண்டுவாருங்கள்,.. தாமிரபரணி, பேச்சிப்பாறை , பெருஞ்சாணி ,,,

Stanley Rajan தென் தொங்கல் மாவட்டத்தில் சில சலசலபுகள்
ஏற்பட்டிருக்கின்றன‌
அதாகபட்டது கூடங்குள அணுவுலைக்கு தாமிரபரணி நீரினையோ அல்லது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி நீரினை கொண்டு செல்லபோகின்றார்கள் என பல சர்ச்சைகள்
அணுவுலை என்பது பெரும் நல்லநீரினை விழுங்கும் சமாச்சாரம், அந்த நீரை ஆவியாக்கித்தான் மின்சாரம் தயாரிக்க முடியும், அணு என்பது அடுப்பு, நீரே பிராதனம்
இந்த பிரச்சினை முன்பே எழுந்தது, அப்பொழுது அணுவுலை போராட்டமும் நடந்தது, இரு பிரச்சினைகளை ஒன்றாக சமாளிக்க விரும்பாத மேலிடம், தந்திர திட்டமிட்டது
முதலில் நதிநீரை எடுக்கபோவதில்லை , கடல்நீரை நன்னீராக்கி பயன்படுத்துவோம் என்றார்கள், பாதி கூட்டம் அடங்கிற்று, அப்பொழுதும் அணுவுலை போராட்டக்காரர்கள் "அப்படியா எங்கே கூடுதலாக கொஞ்சம் கடல்நீரை குடிநீராக்கி தெற்கு பக்கம் கொடுக்கலாமே" என கேட்டதற்கு இன்றுவரை பதிலில்லை
பின் அணுவுலை போராட்டமும் சாதி, மதம் என அணுவுலை போராட்டமும் முடக்கபட்ட பின் இப்பொழுது மெதுவாக நதிநீருக்கு வருகின்றார்கள்
பெரும் மூளைகளின் நரித்திட்டம் இப்படித்தான் இருக்கும்
கூடங்குள அணுவுலை செயல்பட்டதாக சொன்னாலும் உண்மை நிலவரம் சந்தேகமே, அது தமிழக அரசினை போல பெரும் மர்மம்மாயிற்று, என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை

ஆனால் தாமிரபரணி நீரை கொண்டு செல்ல கால்வாய் தோண்டுவது நிஜம், பேச்சிப்பறை நீரை கொண்டு செல்ல திட்டம் வகுப்பதும் நிஜம்
அப்பகுதியே வறண்ட பகுதி, அங்கு ஓடும் ஒரே ஆறு தாமிரபரணி மட்டுமே, அதற்கும் குறி வைக்கின்றார்கள். மற்றபடி நெல்லையின் மற்ற அணைகள் அல்லாம் பிரமாண்ட நீச்சல்குளம் அல்லது குடிநீர் தொட்டி அவ்வளவுதான் விஷயம், நீர் தேக்கம் என்ற வகையில் வராது, வந்தாலும் நீர் இருக்காது, கொடுமுடியாறு, பச்சையாறு எல்லாம் அந்த ரகம்..
கன்னியாகுமரி செழிக்க பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைநீரே முக்கியம், அவைதான் நாஞ்சில் நாட்டை தாங்கி நிற்பவை
இதில் ராதாபுரம் பகுதி இன்னொரு சிறிய பாலைவனம், அந்த பாலைவனத்தில் நிலத்தடி நீரே பிராதனம், அந்த பாலைவன தொங்கலில்தான் கூடங்குள அணுவுலை இருக்கின்றது
ஆக நெல்லையின் உயிரான தாமிரபரணியினையும், நாஞ்சில் நாட்டு ஆதாரமான அணைகளையும் கொள்ளையடிக்க கிளம்பிவிட்டார்கள்
நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்
இது இந்தியா எனும் நாடு, கூடன்குளம் எனும் உறங்கும் எரிமலையிலிருந்து மின்சாரம் எடுக்கின்றார்கள், அது இந்தியா முழுக்க செல்கின்றது, கேரளத்திற்கும் பங்கு உண்டு
ஆனால் தமிழகத்து நீரைமட்டும், அதுவும் வறண்ட பகுதி நீரினை எடுப்பது என்ன நியாயம்?
கேரளத்தில் மேற்கு நோக்கி பாயும் நதிகளை கிழக்கே திருப்ப கூடாதா? அப்படி திருப்பினால் இப்பக்கம் செழிக்காதா? ராதாபுரம் பகுதி முப்போகம் விளையாதா?
ஏற்கனவே இந்த கூடங்குளம் அணுவுலை நீர் செழிப்புமிக்க கேரளத்தில்தான் அமைய இருந்தது, ஆனால் அணுகழிவினை கூட புதைக்கவிடாத அவர்கள் அணுவுலையினை விடுவார்களா?
அது கூடங்குளம் தலையில் கட்டபட்டது,
கேரளாவில் அனுமதிக்கவும் மாட்டோம் , கேரள நீரினை தரவும் மாட்டோம் ஆனால் மின்சாரம் மட்டும் வேண்டும் என ஒரு மாநிலம் சொல்வதும், அதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதும் எப்படி சரியாகும்?
அணுவுலையின் எண்ணிக்கை 5,6 என அதிகரிக்கின்றது, இவர்கள் கடல் நீரினையும் சுத்தபடுத்தியதாக தெரியவில்லை, மாறாக ஆற்று நீரே தீர்வு
அதற்கு கேரள நீரை கொண்டுவரட்டும், போராட்டம் வெடித்தால் கூடன்குள இடிந்தகரை மக்களை அடித்து அடக்கியது போல அடக்கட்டும்
முடியுமா அரசுகளே? முடிந்தால் அதனை செய்யுங்கள் மாறாக அரை சங்கு தண்ணீருகாக தவமிருக்கும் நெல்லை மக்களிடம் இருக்கும் நீரையும் பிடுங்காதீர்கள்
கேரள நீரை கொண்டுவாருங்கள், அணுவுலைக்கு பாயும் நீர் இப்பகுதி நெல்லுக்கும் பாயட்டும்.

கருத்துகள் இல்லை: