செவ்வாய், 16 மே, 2017

மீண்டும் எஸ்மா... அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நீதிமன்றம் உத்தரவு!

விகடன் :கடந்த மூன்று நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல மனு மீது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாள்களாக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. மாநிலம் தழுவிய அளவில் நடந்த இந்தப் போராட்டத்தால் கிட்டத்தட்ட 80 சதவிகித போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் எஸ்மா சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில்குமாரய்யா தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 'தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் நடப்பதை ஊக்குவிக்க முடியாது. பணிக்குத் திரும்பாவிடில் 'எஸ்மா' சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நீதிபதிகள் முரளிதரன், சேஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: