வெள்ளி, 19 மே, 2017

1121 பொருட்களுக்கு வரி நிர்ணயம் செத்து ஜி எஸ் டி ஆணையம்

புதுடெல்லி: உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள், டூத்பேஸ்ட், ஹேர் ஆயில், சோப் விலை குறையும்.  நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி  5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக வரி விதிப்பு இருக்கும். இதில் எந்த சதவீதத்துக்குள் எந்த பொருள் அல்லது சேவையை கொண்டுவருவது என, இதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி வந்தது. மாநில பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த ஆலோசனைகள் நடந்தன. மேலும் தொழில்துறைகள் சார்பில் தங்கள் துறைக்கு வரியை குறைக்க வேண்டும் அல்லது வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.


 தற்போது மத்திய அரசு வரியில் 299 பொருட்களுக்கும், மாநில அரசு வரியில் 99 பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பால், காய்கறி, உப்பு, டீ, காபி போன்றவை அடங்கும். இந்நிலையில், வரி விதிப்பை இறுதி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நகரில் நேற்று துவங்கியது. இதில் மாநில அரசு சார்பில் பங்கேற்ற அமைச்சர்கள் சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பட்டு நூல், பூஜை பொருட்கள், கைவினை பொருட்கள் ஆகியவற்றுக்கு முழு விலக்கு தர வேண்டும் என கோரப்பட்டது.  இதுபோல் தங்கம் அத்தியாவசிய பொருள் அல்ல என்பதால் இதற்கு 5 சதவீத வரி விதிக்கலாம் என்று பரிந்துரை செய்தனர்.   உத்தர பிரதேசம் சார்பில், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களுக்கு 18 சதவீதத்துக்கு பதிலாக முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சில மாநில பிரதிநிதிகள் 12 மற்றும் 18 சதவீத பிரிவில் அடங்கக்கூடிய சேவை வரி தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

 ஆனால், அத்தியாவசிய பொருட்களாக இருந்தால் மட்டும் ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கலாம். குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டுமே இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளையுடன் நிறைவடைகிறது. எனவே, இதன் பிறகு அனைத்து பொருட்களுக்குமான வரி விதிப்பு இறுதி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கலால் வரி, சேவை வரி உள்ளிட்ட 7 மத்திய வரிகள், வாட், பொழுதுபோக்கு வரி உள்ளிட்ட 9 மாநில வரிகள் என 16 வரிகளுக்கு மாறாக ஒரே வரியாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட இருக்கிறது. முதன் முதலாக பிரான்ஸ் நாடுதான் 1954ல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதன்பிறகு ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, தென் கொரியா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவை அமல்படுத்தின சீனா 1994ம் ஆண்டும், ரஷ்யா 1991ம் ஆண்டும் அமல்படுத்தின. சவுதி அரேபியா 2018ல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்திற்கு பிறகு ஜெட்லி கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி கவுன்சில் 7 விதிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சரக்கு அனுப்புதல் மற்றும் திரும்ப பெறுதல் தொடர்பான 2 விதிகள் பற்றி சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 1,211 பொருட்களுக்கு வரி விதிப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வரி வரம்பில் எந்த பொருளை கொண்டுவருவது என இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. தங்கம் மற்றும் பீடி சேவை இனங்கள் மீதான வரி விதிப்பு நாளை முடிவு செய்யப்படும். நாளை (இன்று) இறுதி முடிவு எட்டப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை கவுன்சில் கூட்டம் நடத்தப்படும். ’’ என்றார்.

 மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா கூறுகையில், ‘‘வரி விதிப்பு முடிவு செய்யப்பட்ட பொருட்களில் 81 சதவீத பொருட்கள் 18 சதவீதத்துக்கு கீழ் உள்ள வரியில் சேர்க்கப்படும். 19 சதவீத பொருட்களுக்கு மட்டும்தான் 18 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படும்.
 நிலக்கரி மீதான வரி 11.69 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். சர்க்கரை, டீ, காபி (இன்ஸ்டன்ட் தவிர), சமையல் எண்ணெய் ஆகியவை 5 சதவீத வரி விதிப்பில் அடங்கும். ஹேர் ஆயில், சோப்பு, டூத்பேஸ்ட் 18 சதவீத வரி விதிப்பிலும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், பால் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் ’’ என்றார்.

*  டூத்பேஸ்ட், ஹேர் ஆயில், சோப் விலை குறையும்.
*  பால், உணவு தானியங்களுக்கு வரி விலக்கு.
*  நிலக்கரி வரி 5 சதவீதமாக குறைப்பு
*  உற்பத்தி மூலப்பொருட்களுக்கு 18% வரி.
*  வீட்டு உபயோக பொருட்கள் விலை குறையும்

*  கார், உயர் ரக பைக்குகள் உச்ச பட்ச வரியுடன் செஸ் வரியும் விதிக்கப்படும்.
*  55% பொருட்களுக்கு கூடுதலாக செஸ் வரி
*  பீடி, சிகரெட், பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்படலாம்.
*  தங்கத்தின் மீது வரி உயரலாம். இதுபற்றி இன்று முடிவு செய்யப்படுகிறது.

காலணி, டெக்ஸ்டைல், கைவினை பொருட்கள், மின்சாரத்தில் இயங்கும் விவசாய கருவிகள் மீதான வரி பற்றி இறுதி செய்யப்படவில்லை.  தினகரன்

கருத்துகள் இல்லை: