திங்கள், 15 மே, 2017

Flashback :ஜெயலலிதா திமுகவுக்கு கோரிக்கை :மெட்ரோ ரெயில் திட்டம் சென்னைக்கு ஒத்து வராது.. கைவிடுங்கள் வீம்பு வேண்டாம்!

;1 ஆகஸ்ட் 2006: சென்னை நகருக்கு மோனோ ரெயில்தான் நல்ல திட்டம். அதை கைவிட வேண்டாம் என்று ஜெயலலிதா பேசினார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா பேசினார்.
அவர் கூறியதாவது :- மோனோ ரெயில் திட்டம்.. மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறீர்கள். எனது ஆட்சியில் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. வேண்டும் என்றே, வீம்புக்காக, நல்ல திட்டமான மோனோ ரெயில் திட்டத்தை நிராகரித்து, சென்னை மாநகருக்கு எந்த வகையிலும் ஒத்து வராத, பொருந்தாத மெட்ரோ ரெயில் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாக, தெரிவித்திருக்கிறீர்கள்.> மக்கள் பணத்தை ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள்? மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த, ஒரு கிலோ மீட்டருக்கு, 250 கோடி ரூபாய் செலவாகும்.ஆனால் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த, ஒரு கிலோ மீட்டருக்கு, 50 கோடி ரூபாய் தான் செலவாகும்.

ஆபத்தானது
மெட்ரோ ரெயில் திட்டத்தை முடிக்க, 15 ஆண்டு காலம் ஆகும்.
ஆனால் மோனோ ரெயில் திட்டத்தை, 1 ஆண்டுகளில் முடித்து விடலாம் -
முதல் கட்டப் பணிகளை 1 ஆண்டுகளிலும், முழுமையான திட்டத்தை 5 ஆண்டுகளிலும் முடித்துவிடலாம். நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் சென்னை உள்ளதாக, விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு உள்ளது.
எனவே பூமியைத் தோண்டி, பூமிக்கு அடியில் மேட்ரோ ரெயிலுக்கு தேவையான சுரங்கப் பாதையை அமைப்பது என்பது, அபாயம் நிறைந்ததாகும் - அதன் வழியே பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பிற்கு, ஊரு விளைவிக்கும் - பயணிகளின் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்க முடியாது, என்று கருதப்படுகிறது. கடல் அருகே இருப்பதால், சுரங்கப் பாதைக்குள் நீர் கசிவு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் மோனோ ரெயில் திட்டத்தில், பூமியை தோண்டி, பூமிக்கு அடியில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. பயணிகளின் பாதுகாப்பிற்கு, முழு உத்தரவாதம் அளிக்க முடியும்.
இடைனிறு ஏற்படாது
மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால், மிகவும் அகலமான சாலை, இன்றி அமையாததாகும். அத்தகைய அகலமான சாலைகள் சென்னை மாநகரில் மிக மிகக் குறைவு. போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலைகள், குறுகிய சாலைகளாகவே உள்ளன. சாலைகள் ஏற்கனவே குறுகலாக உள்ள நிலையில், மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக, அந்தச் சாலைகளையும் தோண்டும் போது, பல ஆண்டுக்கணக்கில் பணி நடைபெற்று முடியும் வரை, போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாது.
ஆனால் மோனோ ரெயில் திட்டத்தைப் பொறுத்தவரை, அகலமான சாலைகள் தேவை இல்லை. போக்குவரத்து நின்று போகும் வகையில், சாலையை தோண்ட வேண்டிய அவசியமும் இல்லை. பூமிக்கு மேலே உயரத்தில் ரயில் பாதை அமைப்பதால், பணி முடியும் வரை, போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், எந்தவிதமான இடைனிறும் இருக்காது.
2 ஆண்டில் முடிக்கலாம்
மெட்ரொயில் திட்டம், சுற்றுப்புறச் சூழலை கடுமையாக மாசுபடுத்தும் - இதனால் மாநகர மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல நோய்கள் ஏற்படும்.மோனோ ரெயில் திட்டத்தினால் சுற்றுப்புறச் சூழல் எந்த வகையிலும் மாசுபடாது - இதனால் மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு, எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த தேவையான மொத்த நிதியையும், அரசே வழங்கி செலவழிக்க வேண்டியிருக்கும். மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த, தேவையான நிதி முழுவதையும், தனியார் நிறுவனமே செலவு செய்யும். அரசுக்கு எந்த செலவும் வைக்காமல், தனியார் நிறுவனமே, 100 சதவீத நிதியையும் முதலீடு செய்து, பிஓடி அடிப்படையில், 2 ஆண்டு காலத்திற்குள் திட்டத்தை நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும்.
கைவிடுங்கள்
மெட்ரோ ரெயில் திட்டம் ஏன் சென்னைக்கு ஒத்து வராது, அதைவிட மோனோ ரெயில் எவ்வாறு சிறந்தது என்பதற்கு, இன்னும் ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். நேரத்தைக் கருதி, இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.
வெறும் வீம்புக்காக, வீணான வரட்டுக் கவுரவத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, மோனோ ரெயில் போன்ற சிறந்த திட்டத்தை, கைவிட வேண்டாம் என்றும்; மெட்ரோ ரெயில் போன்ற உருப்படாத திட்டத்தை, செயல்படுத்த வேண்டாம் என்றும், இந்த தி.மு.க. அரசுக்கு, வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.  கூடல்.  .koodal.com/news/world.asp?id=19077&title

கருத்துகள் இல்லை: