ஞாயிறு, 14 மே, 2017

BBC: பேருந்துகள் ஓடவில்லை ... மக்கள் அச்சப்பட தேவையில்ல அமைச்சர் உறுதி!

தமிழக அரசு போக்குவரத்து துறையில் உள்ள சில தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால்,;பொது மக்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இன்று ஞாயிற்றுகிழமை திடீரென துவங்கியுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க தனியார் பேருந்துகளை முழுமையாக இயக்கவும், ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர்களை தற்காலிக பணி நியமனம் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து , இதனால் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதியளித்தார்.

இன்று இது தொடர்பாக நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுடனான கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், 20 ஆண்டு கால நிலுவைத்தொகையை ஒரே நாளில் ஒதுக்க வேண்டும் என சில சங்கங்களின் நிர்வாகிகள் கோருவதாக கூறினார்.< /> அது ஒரே நாளில் சாத்தியமில்லை என்கிற விளக்கத்தை தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளிடம் தான்தெரிவித்ததாகவும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய விஜய பாஸ்கர், அரசு பேருந்துக்களை இயக்குபவர்களை தடுத்து நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்கள் மீது தமிழக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அதே போல, மொத்தமுள்ள 47 தொழிலாளர்கள் சங்கங்களில் 37 சங்கங்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பணிமனைகள் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய போக்குவரத்து பணிமனைகளில் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.>இருந்தபோதும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வார இறுதியில் ஊருக்கு சென்றுவிட்டு பணிக்குத் திரும்ப முடியாமல் பலர் தவிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் இன்றைய நடவடிக்கை குறித்து குறிப்பிட்டு கருத்து வெளியிட்ட போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் சில அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள், அடக்குமுறை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்கள்.
வாய்மொழியாக வாக்குறுதி அளிப்பதை ஏற்க முடியாது என்றும், தமிழக அரசு தங்கள் கோரிக்கையை முழுமையாக ஏற்கும் வரை தங்கள் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பின் காரணமாக நாளை திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே வேளையில், தனியார் பேருந்துகள் திடீரென பயணக் கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன

கருத்துகள் இல்லை: