வியாழன், 18 மே, 2017

பெண் டாக்டர் தற்கொலை? மகனை பார்க்க முடியாமல் மன உளைச்சல் காரணம் ...

பணி சூழல் காரணமாக பிஞ்சு மகனை பிரிந்திருக்க முடியாத ஏக்கத்தில் சென்னையில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
By: Mayura Akilan சென்னை: வேலை பளுவினால் குடும்பத்தை கூட கவனிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைக்கு பல பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. பெண் மருத்துவர் சுதா மல்லிகாவிற்கோ, பணி சூழலினால் தனது மகனை பிரிந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஏக்கமே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. ஆசையாய் பெற்றெடுத்த மகனை உடனிருந்து பார்த்து கவனித்து வளர்க்க முடியவில்லையே ஏன்ற ஏக்கத்தில் மகனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் சுதா மல்லிகா. சென்னை சூளை மாணிக்கம் தெருவில் உள்ள ரூபி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்குமார்,30, அரசு மருத்துவர். இவருக்கும் ஈரோடு பவானியை சேர்ந்த டாக்டர் சுதாமல்லிகா,28 என்பவருடன் எம்பிபிஎஸ் படிக்கும் போதே காதல் ஏற்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.


சுதாமல்லிகா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வந்தார். மேலும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இதயவியல் துறையில் மேற்படிப்பு படித்து வந்தார். அதேபோல், கணவர் சதீஷ்குமாரும் நரம்பியல் துறையில் மேல் படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். தனது ஆசை மகனை போட்டோ எடுத்து முகநூலில் பதிவிட்டு அழகு பார்த்தார் சுதா. தம்பதியர் இருவரும் அன்றாடப் பணிக்குச் சென்று விடுவதோடு, மேற்படிப்பும் படித்து வருவதால் குழந்தையைப் பராமரிக்க ஆள் இல்லாமல் திணறினர்.

ஈரோட்டில் இருக்கும் சுதா மல்லிகாவின் பெற்றோர், குழந்தையைப் பார்த்துக்கொள்ள முன்வந்ததால் குழந்தையை தனது தாய் வீட்டில் விட்டார் சுதா. மகனை வேறு இடத்தில் விட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். தினசரியும் மகனின் மழலை குரலை கேட்காமல் தூக்கம் வராது சுதாவிற்கு. நேற்று வழக்கமான நேரத்தில் தாயாருக்கு சுதா மல்லிகா போன் செய்யவில்லை. இதனால் குழப்படைந்தார் சுதாவின் அம்மா. சதீஷ்குமார் பணியை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

இருவரிடமும் வீட்டின் சாவி உள்ளதால் சதீஷ் குமார் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது படுக்கை அறையில் மனைவி சுதா மல்லிகா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுதா மல்லிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவர் பணியாற்றிய ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், கணவர் சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே தனது தற்கொலைக்கான காரணமாக, ஒரு கடிதத்தையும் சுதா மல்லிகா எழுதியுள்ளார். அதில், 'தாய்ப்பாசத்தில் ஒவ்வொரு நாளும் துடிக்கிறேன் மகனே', என்று தொடங்கி மகனின் பிரிவால் படும் துயரத்தை மட்டுமே எழுதி வைத்துள்ளார். வீட்டில் ஆட்டோமேடிக் பூட்டு பொருத்தப்பட்டுள்ளதால் கொலை செய்யப்பட்டு, அவர் தூக்கில் தொங்க விடப்பட்டார என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை என்றாலும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, சுதா மல்லிகாவுக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது< tamiloneindia

கருத்துகள் இல்லை: