திங்கள், 15 மே, 2017

மேலும் 900 ரயில் நிலையங்களில் சிசிடிவி! .. ஏற்கனவே 344 ரயில் நிலையங்களில் .. நாட்டில் மொத்தம் 8000 ரயில்வே நிலையங்கள் உள்ளன!

நாடு முழுவதும் 900 ரயில் நிலையங்களில் சுமார் 19 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கு, நிர்பயா நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான கொலை,கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் ரயில் பயணங்களில் நடக்கின்றன. இதனால், அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட்டின்போது நிர்பயா நிதி என்ற பெயரில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படுத்த வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் 983 ரயில் நிலையங்களில் 19 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிர்பயா நிதியின் கீழ் சுமார் ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர், 'சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படும். அதனை, ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். இதுபோன்று, சிசிடிவி கேமராக்களை பொருத்தி, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்ற வாசகம் இருந்தால், தவறு செய்பவர்களுக்கு அச்சம் ஏற்படும். குற்றம் ஏதேனும் நடந்தால், இந்த சிசிடிவி கேமராக்களைக் கொண்டு எளிதில் கண்டுபிடிக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 8,000 ரயில் நிலையங்களில் ஏற்கனவே 344 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் மட்டுமல்லாமல், ஹம்சாபார் எக்ஸ்பிரஸ் மற்றும் விரைவில் இயக்கவிருக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை புறநகர் ரயிலின் பெண்கள் பெட்டியிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: