அந்தண சிரேஷ்டர்கள் அத்தனை பேருக்கும் முதலில் அன்பு வணக்கம். சில வருடங்களுக்கு முன்பும் உங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம்.கடிதம் எழுதியதன் முடிபு எம்மீதான கோபமாகவே இருந்தது. பரவாயில்லை. சரியைச் சரியெனவும், பிழையைப் பிழையயனவும் கூறிவிடுவது பாவத்திலிருந்து நாம் விடுபடுவதற்கான வழியாகும்.
எனவே சிலவற்றைக் கூறித்தான் ஆக வேண்டும். நேற்று முன்தினம் கீரிமலைக்குச் சென்றோம் ஆடி அமாவாசை. தந்தையர்க்கும் அவர்தம் முந்தையர்க்கும் பிதிர்க்கடன் செய்யும் நாள். ஏகப்பட்டவர்கள் பிதிர்க்கடன் செய்யவந்திருந்தார்கள். கீரிமலை உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த போதிலும், அந்த புண்ணிய சமுத்திரத்தில் நீராடி பிதிர்க்கடன் தீர்க்க வேண்டும் என்ற பேரவா அவர்களிடமிருந்ததை காண முடிந்தது.
இதைப் பார்த்தபோது எங்கள் சைவ சமயத்திற்கும்-அதன் மீது கொண்ட நம்பிக்கைகளுக்கும் எந்தப்பழுதும் ஏற்படாதென்ற தென்பு உற்சாகத்தைதந்தது.கீரிமலைக் கடலில் நீராடுவதற்கு முன்பதாக சிவாச்சாரியர்களிடம் தர்ப்பை பெற்றுக்கொள்வது வழக்கம். நீராடிய பின்பு அதே சிவாச்சாரியரிடம் தந்தையர் அவர் தந்தை அவரின் முன்னோரின் நாமங்களைக் கூறி, பிதிர்க்கடன் செய்ய வேண்டும்.
இந்தச் சடங்குகளை செய்த சிவாச்சாரியர்களின் ஒழுங்கு முறைகளை கண்டபோது வேதனை விக்கித்தது. வருமானம் ஈட்டுவதைத்தவிர வேறு எதுவும் அவர்களின் சிந்தையில் இருக்கவில்லை. மனம் அங்கலாய்த்துக் கொண்டது. அவருக்குத் தர்ப்பை கொடுப்பது, இவரைச் சமாளிப்பது, மற்றவருக்கு சைகை காட்டுவது இப்படியாக சிவாச்சாரியர்கள் நடந்து கொண்டனர்.
இவர்களிலும் ஒரு சிலர் இறைநம்பிக்கையோடு பிதிர்க்கடனை சரியாக நிறைவேற்றும் குருவாக இருந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்.இதற்கப்பால் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வர பெருமானுக்கு தீர்த்த மண்டபத்தில் அர்ச்சனை நடந்தது.இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் ஐம்பது ரூபாயை கொடுத்து மோட்ச பூசை என்றான். இளம் அர்ச்சகர் ஒருவர் பணத்தை எடுத்து பெட்டிக்குள் போட்டார். அவ்வளவுதான் வேறு எதனையும் அவர் கூறவில்லை.
இளைஞன் தனது தந்தையின் பெயரை சொல்வதற்காக காத்திருந்தான். அர்ச்சகர் அதைக் கண்டு கொள்ளவில்லை அவ்வளவுதான். நகுலேஸ்வரப் பெருமானைபார்த்துவிட்டு இளைஞன் அந்த இடத்தைவிட்டு வெளியேறினான். அந்த இளம் அர்ச்சகர் வாயில் போட்ட சுவிங்கத்துக்காக அலகை அசைத்துக்கொண்டே இருந்தார்.
நிலைமை இதுவாயின் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆடி அமாவாசைக்காக மக்கள் கீரிமலைக்கு செல்லமாட்டார்கள். மாறாக கிணற்று நீரில் அள்ளித்தோய்ந்து பிதிர்க்கடன் செய்து கொள்வர். மக்களின் சமய நம்பிக்கைகளுக்கேற்றவாறு சிவாச்சாரியர்கள் நடந்துகொள்ளா விட்டால் சமய நம்பிக்கையிலிருந்து மக்கள் விலகிக் கொள்வர்.
இதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்.
www.salasalappu.com