வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

வாக்காளர்களிடம் மன்னிப்பு கோருகிறார் மனோ கணேசன் எங்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும்

"எங்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் எங்கள் தலைவருக்கு அளிக்கப்படும் வாக்கு" என பகிரங்கமாக கூறி மக்களிடம் வாக்குகளை வாங்கி பதவிகளை பெற்ற ஒருவர், இன்று கட்சித் தலைவரான எனதும், நமது கட்சியினதும் முடிவுகளுக்கு மாறாக தன்னிச்சையாக செயற்பட்டுள்ளமை தொடர்பில் வாக்குகளை வாங்கித்தந்த கட்சித் தலைவர் என்ற முறையில் வாக்களித்த கொழும்பு மாவட்ட மக்களிடம்  நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரசுடன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இணைந்துகொண்டது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது:
 "ஆளுகின்ற அரசுடன் இணைந்துகொள்வது என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கின்றது. பல்வேறு சிறுபான்மை கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியிருக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்களும் தங்களது கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆளுந்தரப்பிற்கு தாவியுள்ளார்கள்.
இன்னும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விரைவில் தாவ இருப்பதாக சொல்லப்படுகின்றது. இவ்வரிசையில் இன்று எமது கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியினதும்இ தலைவரினதும் நிலைப்பாடுகளுக்கு மாறாக தனது சொந்த முடிவுகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார்.
இவரது கட்சி மாறுதலுக்கு எமது கட்சியினதும், தலைவரான எனதும் ஒப்புதல்கள் இருக்கின்றன என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டது. ஆனால், இன்று எனதும், நமது கட்சியின் நிலைப்பாடும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கொழும்பிலும், நாடு முழுக்கவும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களும், அங்கத்தவர்களும் தெளிவடைந்துள்ளார்கள். சம்பவம் நடைபெற்ற வேளையிலே  வெளிநாடு சென்றிருந்த நான் திரும்பி வந்தப்பிறகு என்னை சமாதானப்படுத்தலாம் எனவும், பிறகு என்னையும், கட்சியையும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் இந்த நாடாளுமன்றஉறுப்பினர் அரசாங்கத்திற்கு உறுதியளித்திருக்கலாம். அதேபோல் எமது கட்சி, இவரது நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாக இருக்கும் என இவர் கனவு கண்டிருக்கலாம். இன்று இவை வரலாறு ஆகிவிட்டன.

தன்னிச்சையாக கட்சிக்கட்டுப்பாட்டை மீறியுள்ள காரணத்தால் குறிப்பிட்ட நாடாளுமன்றஉறுப்பினரின் கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் வகித்த கட்சி பதவிகளில் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னர் அரசிலிருந்து வெளியேற வேண்டும் என எமது பொதுச்செயலாளரினால் இவர் கோரப்பட்டுள்ளார்.

இவை அனைத்தும் எனது தலைமையில் நடைபெற்ற அரசியற்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுகளாகும். இவை ஒரு கட்சி என்ற முறையில் நாங்கள் எடுக்கக்கூடிய ஒழுங்கு நடவடிக்கைகளாகும். இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் 23ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ள காலகெடுவிற்கு பிறகு அடுத்தகட்டத்தை அடையும்.
 அரசுடன் கைகோர்த்த அன்றைய தினத்திலேயே குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எமது கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அரசியல் ரீதியாக இணைந்துவிட்டதாகவே நான் கருதுகின்றேன். கட்சிக்கட்டுப்பாடு என்பது என்ன என்று அவர் தனது புதிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுத்தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கடந்த காலங்களிலே நாடாளுமன்றத்தில் பிரதமராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், சாதாரண அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் இவரது கட்சியின் அன்றைய தலைவர்களினால் பல்வேறு அவமானங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். ஆனால் அதற்காக மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைவிட்டு வெளியேறவில்லை. வெளியேறிவந்து தன்னை வளர்த்துவிட்ட கட்சியின் தலைவரை தரக்குறைவாக பேசவும் இல்லை. அனைத்தையும் பொறுமையாக சகித்துக்கொண்டு அரசியல் தொலைநோக்கோடு செயற்பட்ட காரணத்தினாலேதான் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய ஜனாதிபதியாக திகழ்கின்றார்.
 ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் எனக்கு பாரிய அரசியல் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி தனது கட்சியின் மீது வைத்திருக்கும் பற்றையும், கட்சித் தலைவரான ஜனாதிபதியின் மீது அவரது சகோதரர்கள் வைத்திருக்கும் பாசத்தையும் நான் எப்போதுமே மிகவும் மதித்து வந்திருக்கின்றேன். இன்று எங்களது கட்சியிலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்டுள்ள புதிய உறுப்பினருக்கு இவைப்பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதுவே எனது விருப்பமாகும்.
எங்களது அரசியல் பயணத்திலிருந்து இடைநடுவில் தான்தோன்றித்தனமாக விலகி வேறு பயணம் செல்ல முயல்பவருக்காக நான் நின்று காத்திருக்கப்போவதில்லை. தனது சொந்த நலன்கருதி இவர் செய்துவிட்ட காரியத்தினால் என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் ஒருபோதும் ஆறவும் போவதில்லை."

கருத்துகள் இல்லை: