சாமியார்களை ஏமாற்றியவர் கைது: ரூ.32 லட்சம் கொடுத்து ஏமாந்த நித்யானந்தா ஆசிரமம்
பிரபல சாமியார்கள் மற்றும் ஆசிரமம், மடங்களுக்கு சொகுசு கார்களை இலவசமாக தருவதாக கூறி, பல லட்சம் மோசடி செய்த என்ஜீனியர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ரமணா கேந்திரா அறக்கட்டளைக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில் அறக்கட்டளை பயன்பாட்டிற்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட டெம்போ டிராவலர், விலை உயர்ந்த பென்ஸ் கார் போன்றவற்றை இலவசமாக தருவதாக பிரகாஷ் என்ற இன்ஜீனியர் தெரிவித்திருந்தார்.
இந்த வாகனங்களை எடுத்துச் செல்ல போக்குவரத்துச் செலவு, காப்பீடு போன்றவற்றை நீங்களே கட்டிக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நம்பிய அறக்கட்டளை நிர்வாகிகள், 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் முன்பணமாக செலுத்தியுள்ளனர். ஆனால் உறுதி அளித்தப்படி வாகனங்கள் வந்து சேரவில்லை.
ஏமாற்றம் அடைந்த ஆசிரம நிர்வாகிகள், சென்னை சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஆந்திராவில் பதுங்கி இருந்த பிரகாஷ் என்பவரை கைது செய்தனர்.
பெங்களூர் நித்யானந்தா ஆசிரமம், கல்கி ஆசிரமம், ஆந்திராவில் உள்ள விவேகானந்தா ஆசிரமம் உள்ளிட்டவைகளிலும் இதேபோல் பிரகாஷ் ஏமாற்றிவிட்டு தலைமறைவானது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரகாஷ் வாக்குறுதியை நம்பி நித்தியானந்தா ஆசிரமம் 32 லட்சம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டது குறித்து பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரகாஷ் தந்தை லோகநாதன் ஓசூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதாக மதுரையை சேர்ந்த சாமியார் ஒருவர் உறுதி அளித்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் லோகநாதனும், அவரது மனைவி லலிதாவும் இறந்துள்ளனர். தனது தாய் தந்தை இறப்புக்கு சாமியார் காரணமாக இருந்ததோடு, மோசடி செய்துவிட்டார் என்ற வெறுப்பில், சாமியார்களை மோசடி செய்ய திட்டம் வகுத்ததாக கூறியுள்ளார். இதுவரை 100 சாமியார்கள் மற்றும் ஆசிரமம், மடங்களுக்கு சொகுசு கார்கள் தருவதாக மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிரகாஷ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் உள்ள அவரது இல்லத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரகாஷின் வங்கி கணக்கையும் போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக