தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பதவிகளை முன்பு வகித்திருந்தவர்களும்,ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தற்போது அடைத்து வைக்கப்பட்டிக்கின்றவர்களுமான ஈழ தம்பதிகளின் குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டு அரச அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். ஓசியானிக் வைக்கிங் கப்பலில் கடந்த ஒக்டோபர் மாதம் இரு பிள்ளைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார். இவரும் இரண்டு பிள்ளைகளும் விமானம் மூலம் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இவரது கணவர் இவருக்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டு வந்து கிறிஸ்மஸ் தீவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இக்குடும்பம் அங்கு மீண்டும் ஒன்றிணந்தது. இப்போது அந்த பெண்ணுக்கு பிரசவம் நெருங்கி விட்டது. ஆனால் கிறிஸ்மஸ் தீவில் பிரசவ வசதிகள் எதுவும் இல்லை. கடந்த 15 வருடத்துக்கும் மேலாக அத்தீவில் பிரசவமே நடந்தது இல்லை.
இந்நிலையில் கணவருடன் இப்பெண் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்று பிள்ளையைப் பெற்றெடுக்க அதிகாரிகள் விசேட அனுமதி வழங்கி உள்ளார்கள். அதிகாரிகள் இந்த அனுமதியை வழங்கி உள்ளமையானது ஆஸ்திரேலிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தம்பதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார்கள்.
இப்பெண் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீதித் துறையில் உயர் பதவி வகித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இவரது குடும்பம் அச்சுறுத்தலாக அமையலாம் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் இவர்களை அகதிகளாக அங்கீகரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக