புதன், 11 ஆகஸ்ட், 2010

இலங்கை மீனவர் குழு இந்தியாவுக்கு விஐயம் : தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினரும் சில நேரம் இலங்கை மீனவர்களும் தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகின்றன.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புவதும், இதைத் தடுக்கக் கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை வைப்பதும், இந்திய கடற்படை தமிழக மீனவர்களை பாதுகாக்கும் என மத்திய அரசு உறுதியளிப்பதும் நடந்து வருகிறது. ஆனால், தாக்குதல்கள் நின்றபாடில்லை.
இந் நிலையில் மத்திய அரசின் நெருக்குதலால் தமிழக மீனவர்களுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு 25 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.     இதில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் வரும் 16ம் தேதி ராமேஸ்வரம் வந்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். 17, 18ம் தேதிகளில் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கடலூர் பகுதி மீனவர்களுடன் இந்தக் குழு பேச்சு நடத்தவுள்ளது.
அப்போது மீனவர்கள் மோதல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது, கடலில் எல்லை தாண்டும் பிரச்சனையை தவிர்ப்பது ஆகியவை குறித்து இருதரப்பு மீனவர்களும் சமரச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
19, 20ம் தேதிகளில் இலங்கை மீனவ பிரதிநிதிகள் குழு சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதன் மூலம் தமிழக, இலங்கை மீனவர்களின் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் என்று அரசு கருதுகிறது.
இலங்கை தமிழர் நலன்-உரிய நடவடிக்கை: கிருஷ்ணா
இந் நிலையில் இலங்கையில் தமிழர்களின் மறுகுடியேற்றம் விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் சிவா, பாஜக உறுப்பினர்கள் வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த கிருஷ்ணா, தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். மீனவர் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே கடந்த 2008ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் வெகுவாகக் குறைந்துள்ளது (!!).
அண்மையில் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது இந்த பிரச்சனையை மத்திய அரசு எழுப்பியது. இலங்கை அரசிடம் இந்தியா மீண்டும் இது தொடர்பாக பிரச்சனை எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.
இலங்கை தமிழர்களுக்கு அங்கு 50,000 நிரந்தர வீடுகள் கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழர்களின் மறுகுடியேற்றம் தொடர்பாகவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்

கருத்துகள் இல்லை: