செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பொன்சேகாவிற்கு எதிராக நீதிமன்றில் UNP யின் பாராளுமன்ற உறுப்பினர் இன்று சாட்சியம் அளித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களை கொலை செய்து இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் நாட்டின் ஆட்சியை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்தின இன்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டார் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கு சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசின் பக்கம் தாவியுள்ள குருநாகல் மாவட்ட பா.உ ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோவும் சாட்சியளித்துள்ளார். ஜெனரல் பொன்சேகா சேவையில் இருந்து கொண்டு அரசியலில் நுழைவதற்கான பேச்சுவார்த்தைளில் ஈடுபட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட ஊடகவியலாளர் ஜெனரல் பொன்சேகாவிற்கு தனது சீடிஎம் தொலைபேசியை வழங்கி தொடர்பாளராக செயற்பட்டார் எனக் கூறப்படுகின்றது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தபோது , ஜெனரல் தரப்பு வக்கீல்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை என தெரியவருகின்றது. வக்கீல்களுக்கான விடுமுறை நாட்களாகையால் அவர்கள் மன்றுக்கு ஆஜராக முடியாது என அறிவித்திருந்தும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: