திங்கள், 3 அக்டோபர், 2011

ஜெயலலிதாவின் கூட்டணி தலைவர்களுக்கு, சரத்குமார்தான் நாட்டாமை!

சென்னை, இந்தியா: யார் சொன்னார்கள், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தனித்து விட்டது என்று? இதோ அவர்களுக்கும் தேர்தல் கூட்டணி இருக்கிறது, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கூடவே வருவதற்கு கூட்டணிக் கட்சியும் இருக்கிறது என்று காட்டுவதற்காக வந்திருக்கிறது ஒரு அறிக்கை.
“கூட்டணி தர்மத்தின்படி (!) அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம்” என்ற அறைகூவலுடன் வந்துள்ள அறிக்கை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிடம் இருந்து வந்திருக்கிறது. கட்சியின் பெயரை ஐடென்ஃபை பண்ணுவது சிரமமாக உள்ளதா? சரி. ‘நடிகர் சரத்குமார் கட்சி’ என்று வைத்துக் கொள்வோம்.

கட்சித் தலைவர் சரத்குமார் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும், திருச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் சமயத்தில், “அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள்” என்ற சொற் பதத்தை இவர்தான் முதன்முதலில் கூறியிருக்கிறார்.
கூட்டணி என்றால், கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் அல்லவா? அ.தி.மு.க. தலைமை இவரது கட்சிக்கு, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளிலும், மற்றய மாவட்டங்களிலும், நகராட்சிகளிலும் இடங்கள் ஒதுக்கிக் கொடுத்துள்ளதாக குறிப்பிடுகிறார். அங்கெல்லாம் எத்தனை இடங்களில் இவர்களது கட்சி போட்டியிடுகின்றது என்பதைத் தெரிவிக்கும் தரவுகள் ஏதும் கிடையாது.
சரத்குமாரின் அறிக்கையைப் பார்த்தால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு, தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிட  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது அல்லவா? சரி. தற்போதைக்கு அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
தேர்தல் முடிவுகள் வரும்போது, இவரது கட்சி எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று தேர்தல் கமிஷன் அறிவிக்கும் அல்லவா? அப்போது கால்குலேட் பண்ணிக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: