திங்கள், 4 ஜூலை, 2011

பழைய காருங்க எந்த ஊர்ல இருந்தாலும் போய், லாரியில அள்ளிட்டு வந்து இங்க வெச்சு சரி

பழைய கார் மெக்கானிக்


தூத்துக்குடியில் மெக்கானிக் தனஞ்ஜெயன் என்று கேட்டால், யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பழைய கார் மெக்கானிக் என்றால், உடனே அவருடைய கேரேஜுக்கு வழி காட்டுகிறார்கள். பழைய கார் மெக்கானிக் என்று குறிப்பிடுவதற்கு அர்த்தம்... இவர் வின்டேஜ் கார் மெக்கானிக் என்பதுதான். தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் இருக்கும் 'அமிர்தம் ஆட்டோ கேரேஜ்’ முழுக்க ஆஸ்டின், மோரீஸ் மைனர், பிளைமவுத் என வின்டேஜ், கிளாஸிக் கார்களாக நிற்கின்றன. பாரம்பர்யம் மிக்க வின்டேஜ் கார்களை மட்டுமே சர்வீஸ் செய்வதை ஹாபியாகக் கொண்டவர் இந்த தனஞ்ஜெயன்.

வின்டேஜ் கார் ரசிகர்கள் அதிகம் இல்லாத தூத்துக்குடியில், இப்படி ஒரு மெக்கானிக் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்தோம். எடுத்தவுடன் 'அந்த காலத்திலேயே...’ என்று ஆரம்பிக்கிறார். ''எங்க தாத்தா அந்தக் காலத்துல கார் டீலர். அப்பாவும் கார் டீலராகவும், கார் மெக்கானிக்காவும் இருந்தவங்க... எனக்கு சின்ன வயசுல இருந்தே கார்ல போறதுன்னா ரொம்பவும் பிடிக்கும். ஸ்கூல்ல படிக்கும்போதே ஏதாவது நட்டு, போல்ட்டைக் கழட்டி மாட்டிட்டு இருப்பேன். அப்பா வேலை செய்றதைப் பார்த்துப் பார்த்து எனக்கு கார் சர்வீஸ் செய்யக் கத்துக்கணும்ன்னு ஆசை வந்திருச்சு. அதுவும் வின்டேஜ் கார் சர்வீஸ் செய்றதுன்னா கொள்ளைப் பிரியம். என்னோட இந்த கார் பைத்தியம்தான் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வெச்சது.

பழைய காருங்க எந்த ஊர்ல இருந்தாலும் போய், லாரியில அள்ளிட்டு வந்து இங்க வெச்சு சரி பண்ணி, திரும்பவும் கொண்டு போய் ஒப்படைச்சிருவேன். ரொம்பவும் மோசமா இருக்குற சில காரைச் சரி செய்ய குறைஞ்சது ரெண்டு வருஷம் ஆயிடும். சில்லறை வேலை, சர்வீஸ், பெயின்டிங்னா சீக்கிரம் முடிஞ்சிடும். ஆந்திரா, கேரளா, திருவனந்தபுரம், பெங்களூரு... இப்படி எல்லா இடத்துல இருந்தும் கார்களை எடுத்து வந்து சர்வீஸ் பண்ணியிருக்கேன். இது போக டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னைன்னு எந்த இடத்துல 'வின்டேஜ் கார் ஷோ’ நடந்தாலும் நான் கலந்துக்குவேன். கல்கத்தா ஷோவுல என்னோட வேலையைப் பாத்துட்டு, குஜராத்துல இருந்து பழைய கார் ஒண்ணை அனுப்பி சர்வீஸ் பண்ணித் தரச் சொன்னாங்க. அதை அம்சமா முடிச்சுக் கொடுத்தேன்.

ஒரு தடவை மோரீஸ், ஆஸ்டீன் காருங்கள எடுத்துக்கிட்டு குடும்பத்தோட புதுச்சேரி, கேரளான்னு டூர் போனோம். ரோட்ல பழைய கார் ஓட்டிட்டுப் போனாலே எல்லாரும் புதுசா பார்ப்பாங்கதான். ஆனா, எங்களை கேரளா ஸ்டேட்டே வேடிக்கைப் பார்த்துச்சு! புதுசா சர்வீஸுக்கு கார் வந்திருக்குன்னு தெரிஞ்சா போதும், ஸ்கூல் ஸ்டூடன்ஸ் கிளம்பி வந்திருவாங்க. 'என்ன கார், எந்த வருஷம் தயாரிச்சது, இன்ஜின், பவர்’னு கேட்டுக் கேட்டுத் துளைச்சுடுவாங்க. பாலிடெக்னிக், இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கிற ஸ்டூடன்ஸ் சிலர் எங்கிட்ட சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் போவாங்க. தமிழ்நாட்டோட பல மாவட்டங்களில் படிக்கிற மாணவர்களுக்கும் என்னோட கேரேஜ் ஒரு களஞ்சியமா இருக்கிறதை நெனைச்சா பெருமையா இருக்கு!

வின்டேஜ் கார்களோட அருமை நெறைய பேருக்குத் தெரியலை. சில வீடுகள்ல அவங்க தாத்தா காலத்துல பயன்படுத்துன காரை எந்தப் பராமரிப்பும் இல்லாமப் போட்டு வெச்சிடுறாங்க. மழையிலயும் வெயில்லயும் கெடந்து துருப்பிடிச்சுப் போய் கிடக்கும். அவங்ககிட்ட போய் வின்டேஜ் காருங்களோட மதிப்பப் பத்தியும், முக்கியத்துவம் பத்தியும் சொல்லுவேன். சில பேரு ஆர்வமா சரி பண்ணித் தரச் சொல்லுவாங்க. சில பேரு ஏதாவது காசுக் கொடுத்துட்டு அள்ளிக்கிட்டு போன்னு சொல்லிடுவாங்க. அந்த மாதிரி காருங்களை எல்லாம் அள்ளிட்டு வந்து சரி பண்ணி, ஸ்பேர் பார்ட்ஸ் நெறைய சேகரிச்சு வெச்சிருக்கேன்.

வின்டேஜ் கார்களைப் பொறுத்தவரைக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கிறதுதான் குதிரைக் கொம்பு. ஒரு போல்ட்டோட விலை 100 ரூபாய்னா... அது யார்கிட்ட இருக்கு, எந்த ஊர்ல இருக்குன்னு கண்டுபிடிச்சு வாங்க 500 ரூபாய் செலவாகும். இருந்தாலும், செலவைப் பத்திக் கவலைப்படாம வாங்கிடுவேன். 1920-ல் இருந்து இப்போ லேட்டஸ்ட் கார் ஹெட் லைட், ஹாரன், மோனோ கிராம் எல்லாமே கலெக்ஷன் வச்சிருக்கேன். பழைய மாடல் கார்னா இப்படித்தான் இருக்கும்னு எல்லாரும் தெரிஞ்சிக்கணும்.

சாதாரண காருங்களுக்கு எவ்வளவோ மெக்கானிக்குங்க இருக்கிறாங்க. ஆனா, வின்டேஜ் காருக்கு இருக்கிற மெக்கானிக்கை விரல் விட்டு எண்ணிடலாம். அந்த லிஸ்ட்ல நானும் இருக்குறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என்று சொல்லி விட்டு, போல்ட்டை 'டைட்’ செய்கிறார் மெக்கானிக் தனஞ்ஜெயன்

கருத்துகள் இல்லை: