ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கலைஞர் சிலை: சோனியா திறந்துவைத்தார்!

மின்னம்பலம் : கலைஞர் சிலை: சோனியா திறந்துவைத்தார்!சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.
கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (டிசம்பர் 16) மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், நாராயணசாமி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரும் வரவேற்றனர். சோனியா, ராகுல் கார் செல்லும் வழிநெடுகிலும் திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிண்டியிலுள்ள சோழா நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த சோனியா, ராகுல் ஆகியோர் 5மணிக்கு அண்ணா அறிவாலயம் புறப்பட்டனர். மூன்று மாநில வெற்றிக்குப் பிறகு, தமிழகம் வரும் சோனியாவை பெண்கள் முளைப்பாரியுடன் வரிசையாக நின்று வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் ஆகியோரை திமுகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர்.

தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கூடியிருக்க, சரியாக 5.20 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த சோனியாகாந்தி, ராகுல் காந்தியை ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஸ்டாலின் வரவேற்புரையாற்ற, அடுத்த சில நொடிகளில் கலைஞரின் சிலையை சோனியா காந்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்தார். அப்போது, கலைஞருக்கு பிடித்தமான அவர் ரசித்து ரசித்து எழுதிய ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடல் அரங்கில் ஒலிபரப்பப்பட்டது. சிலை திறப்பு நிகழ்வானது சில நிமிடங்களில் நடைபெற்று முடிந்தது.
கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி
அதனைத் தொடர்ந்து நேரடியாக மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்துக்குச் சென்ற சோனியா காந்தி, அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கலைஞர் மறைந்தபோது சோனியாவால் சென்னை வர இயலாத நிலையில், தற்போது அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்டோரும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

விழாத் துளிகள்
சிலை திறப்பு விழாவில் முன்பக்கத்தில் கி.வீரமணி வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.கே.வாசன், டி.ராஜா, சத்ருகன் சின்கா, நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நாசர், வடிவேலு, விவேக், மயில்சாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் அமர்ந்திருந்தனர். நெடு நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை திமுக நிகழ்ச்சியில் காண முடிந்தது.

ரஜினி வந்தவுடன் அவரை ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சிரித்தபடியே கைகுலுக்கி வரவேற்றனர். முதல்வரிசையில் அமர்ந்திருந்த வைகோ உள்ளிட்டோருக்கு கைகுலுக்கிவிட்டு, சத்ருகன் சின்கா அருகில் சென்று அமர்ந்துகொண்டார் ரஜினி.

திமுக முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் அரங்கின் ஒரு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்வரிசையில் அமர்ந்திருந்தார். ஓய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டத் திரையில் தொண்டர்கள் சிலை திறப்பு விழாவை நேரடியாகக் கண்டு மகிழ்ந்தனர்.

உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், சிலை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். அவரை டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் அழைத்து வந்தனர்.
கலைஞரின் சிலை திறந்துவைக்கப்பட்ட பின் ராகுல் தனது செல்போனில் சிலையை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விழாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக பத்திரிகையாளர்களிடம் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேட்டு, எஸ்பிஜி அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். பல பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

சிலை திறப்புக்குப் பின்னர் தலைவர்கள் வெளியேறிய பிறகு அறிவாலயத்தின் கேட் மூடப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு கேட் திறக்கப்பட்ட நிலையில், அங்கு குவிந்த திமுக தொண்டர்கள் கலைஞரின் சிலையை பார்த்து வருகின்றனர்.
சிலைத்திறப்பு விழாவையடுத்து இந்திய அளவில் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. கலைஞர் குறித்த சிறப்புகள், அவர் தொடங்கி வைத்த திட்டங்கள், அவரது சாதனைகளை #StatueOfKalaignar ஹாஷ்டேக்கில் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: