வியாழன், 20 டிசம்பர், 2018

பாஜகவின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பெரியார் பேரணியா?

தமிழ் மறவன் : யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு
செய்தவர் தந்தை பெரியார்!
அதற்காக கடுமையான உழைப்பை தன்னலமின்றி, தயக்கமின்றி செலுத்தியவர் தந்தை பெரியார்.
கருஞ்சட்டைகளின் ஒன்று கூடலில் தங்களின் அரசியல் நிலைப்பாடுகளை வெளியிடாமல் ஒன்று கூடுவதின் பயன் என்னவாக இருக்கும்?
தன் வாழ்நாளில் இன்றைய வாக்கரசியலின் யோக்கியதையை வெளிப்படையாக விமர்சித்த பெரியார், அரசியல் அதிகார தேர்தல் முறைமையில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதில் எப்போதும் கவனமாகவே இருந்தார்.
யாரை நாம் ஆதரிக்க வேண்டும்?
இன்றைய சூழலில் பார்ப்பனீய ஆதிக்க அரசியலை எதிர்கொள்ள யார் வெற்றி பெறுவது அவசியம் என்பதை நேர் பொருளில் குறிப்பாக பேசாமல்
பா.ஜ.க எதிர்ப்பு,
தமிழர் விரோத கட்சிகள் எதிர்ப்பு என்பதெல்லாம் எதையோ பூசி மொழுகும் செயலாகவே தோன்றுகிறது.
யார் வரலாம் என்பதைக் காட்டிலும் "யார் வரக்கூடாது" எனும் செயல் திட்டத்தை பேசப்படாத உட்கருவாய் பலர் வைத்திருப்பதை தோழர் அரங்க.குணசேகரன் அவர்களின் கைப்பேசி உரையாடல் அம்பலப்படுத்தி விட்டது.
தந்தை பெரியாரின் வழி என்பது பெரியாரை மட்டுமே பேசுவதல்ல!
நீதிக்கட்சி முதற்கொண்டு தி.மு.க வரையிலான திராவிடக் கோட்பாட்டை முன்னெடுக்கும் வாக்கரசியல் அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக பெரியாரியலை நடைமுறைப்படுத்திய செயல்பாடுகள் மகத்தானது.
நீதிக்கட்சியின் தலைவர்கள்,

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகமும், பெரியாரியலும் தொய்வில்லாமலும், இன்னும் வீச்சாக மக்களிடம் சென்றடைய போர் குணத்தோடு போராடிய மானமிகு மணியம்மையார்,
வாக்கரசியலின் வெற்றியை தந்தை பெரியாரின் காலடியில் கொண்டு வந்து சமர்ப்பித்த பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா,
மானமிகு சுயமரியாதைகாரராய் தன் வாழ்வியலை அமைத்துக் கொண்டு தந்தை பெரியாரின் கொள்கைகளை தம் ஆட்சி அதிகாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்திய தலைவர் கலைஞர்
இவர்களைக் குறித்தெல்லாம் மாநாடு பேசுமா?
குறைந்தபட்சம் இத்தலைவர்களைக் குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பார்களின் பார்வை தன்னாய்வாக மாறியிருக்கிறதா?
தமிழ் மண்ணில் சாமான்ய மக்கள்கூட பா.ஜ.க - அ.தி.மு.க வை எதிர்கவே செய்கிறார்கள்! அவர்களை எதிர்ப்பதற்காக இவ்வளவு பெரிய மாநாடு என்பதைவிட இவர்களுக்கு எதிரான சரியான மாற்று யார் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இம்மாநாட்டுக்கு உண்டா? இல்லையா?
பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியத்தை பேசுமளவிற்கு அவர்தம் திராவிடக் கோட்பாட்டை மாநாடு முன்னெடுக்குமா?
திராவிடக் கோட்பாட்டை முன்னெடுக்காத தமிழ் தேசிய ஒருங்கிணைப்பாளர்களின் முழக்கங்கள் என்னவாக இருக்கும்?
சமகாலத்தில் இன்றளவும் பெரியாரியலாளர்களாய் வாழும்..
மானமிகு ஆசிரியர், அய்யா ஆனைமுத்து ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கிறார்களே அன்றி தொடர்ச்சியாக அவர்களின் ஆலோசனைகளோ, அறிவுறுத்தலோ, வழிகாட்டலோ பெறப்படவேயில்லை என்பது உண்மைதானா?
கருஞ்சட்டைகள் என்றாலே தன் தலைமையின் கீழ் இராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கும். இப்பேரணி மாநாட்டிற்கு பல்வேறு அமைப்புகள் பங்கேற்கும் நிலையில் எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள்?
கடந்த காலங்களில் இப்படி வாக்கரசியலாரை புறக்கணித்த கூட்டியக்கங்களின் முடிவுகளை கவனத்தில் கொண்டே இக்கேள்வியை முன்வைக்கிறேன் (ஜல்லிக்கட்டு)
இப்பேரணி நமக்கானதோ, இல்லையோ கருஞ்சட்டைப் பேரணி என்று சொல்லி விட்டதால் மகத்தான வெற்றி பெற வேண்டுமென தன்னலமில்லாமல் வரப்போகிற ஆயிரக்கணக்கான பெரியாரிய தோழர்களின் உணர்வுகளாய்தான் இக்கேள்விகளை முன் வைக்கிறேன்.
இதோ, இப்பதிவு எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடிவரை அண்ணன் வே.மதிமாறன் அழைக்கப்படவேயில்லை!
அவர் பா.ஜ.கவா?
சாதி வெறியரா?
பெரியாரை விமர்சிக்கும் தமிழ் தேசியரா?
குளுகுளு அறையில் அமர்ந்து அரசியல் செய்யும் கோடீஸ்வர இணையதள புலியா?
ஏன் அவர் அழைக்கப்படவேயில்லை?
அவரிடம் உள்ள குறைபாடு என்ன?
அவரிடம் என்ன முரணைக் கண்டீர்?
வேறென்றுமில்லை தோழர்களே!
மிக முக்கியமாக அவர் தி.மு.க விற்காக பேசுகிறார்,
பெரியாரியலை திராவிடக் கோட்பாட்டிலிருந்து பேசுகிறார், குறிப்பாக
அவரோடு எண்ணிக்கையில் பலம் காட்ட ஆட்களில்லை என்பதைத் தவிர வேறென்றுமில்லை.
அண்ணன் மதிமாறன் அவர்களை ஓர் எடுத்துக்காட்டாகத்தான் சொன்னேன்.
இவரைப்போல் இன்னும் எத்தனை,எத்தனை தோழர்கள் புறக்கணிக்கப்பட்டனரோ!
தன் பேச்சாற்றலாலும்,
எழுத்தாற்றலாலும், அன்பான அணுகுமுறைகளாலும் ஏராளமான இளைஞர்களை பெரியாரியலின் பக்கம் ஈர்த்தவர் அல்லவா?
அண்ணன் வே.மதிமாறன் அவர்களின் தத்துவ அரசியலால் இச்சமூகத்திற்கும், இத்தலைமுறைக்கும் அவர் ஆற்றிய பங்கு புறக்கணிப்பதா பெரியாரியல்?
மாநாட்டில் திராவிட இயக்கத் தலைவர்களை அழைப்பதும், சமூக வலைதளங்களில் தமிழீழ படுகொலை தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை பகிர்வதும், பேசுவதும் பாசிச பா.ஜ.கவிற்கு பலம் கூட்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
தி.மு.க, அ.தி.மு.க இரண்டையும் ஒரே தட்டில் வைப்போரை கவனமுடன் கையாள வேண்டிய தேவையின் அடிப்படையிலேயே இதைக் குறிப்பிடுகிறோம்.
மேலும்..,
எம் பொதுச்செயலாளர் அய்யா சுப.வீ குறித்தும், தி.மு.கவைக் குறித்தும் பேசிய தோழர் அரங்க.குணசேகரன் அவர்களின் பேச்சு பொதுவெளிக்கு வந்த பின் குறைந்தபட்ச வருத்தமும் தெரிவிக்காத அவரின் செயலுக்கான எதிர்வினையே என் பதிவு!
இப்பதிவு முழுக்க, முழுக்க என் தனிப்பட்ட சொந்த கருத்தே!
என் மனதில் தோன்றிய ஆதங்கத்தை பொதுவெளியில் நேர்மையாக தெரிவித்தேன்.
மற்றபடி, இம்மாநாடு மற்றும் பேரணி தன்னலமற்று போராடும் இலட்சக்கணக்கான எம் கருஞ்சட்டைகளின் வெற்றிப்பாதைக்கு வலுவூட்டும் எனும் நம்பிக்கையோடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை: