செவ்வாய், 18 டிசம்பர், 2018

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
திரிணமுல் காங்கிரஸ் -சுப்ரதா முகர்ஜி
மாலைமலர்:  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் காங்கிரசுடன் கூட்டணி சேர மாட்டோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டணி தொடர்பாக தீர்மானிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கொல்கத்தா: 2019- பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து மாநிலங்களை கட்சிகளும் காங்கிரசுடன் கரம்கோர்க்க தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டங்களில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சிலமுறை பங்கேற்றுள்ளார். எனினும், மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள 42 பாராளுமன்ற தொதிகளிலும் பா.ஜ.க.வை எதிர்த்து நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம் என்று முன்னர் மம்தா குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு வங்காளம் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி, தற்போதைய நிலையில் பா.ஜ.க.வை வீழ்த்த என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து பாராளுமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்வோம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அனைவருடனும் ஆலோசனை செய்து கூட்டணி தொடர்பான எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து பதில் அளித்துள்ள அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அப்துல் மன்னான், ‘எங்களுடன் கூட்டணி வைத்துகொள்ளுமாறு உங்களை யார் அழைத்தார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணாமுலுடன் முன்னர் நாங்கள் வைத்த கூட்டணிக எல்லாமே பேரழிவாகவே வாய்த்தது. இந்த மாநிலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய திரிணாமுல் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ள அவர், நாங்களும் தனியாகவே தேர்தலை சந்திக்க விரும்புகிறோம் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: