வியாழன், 20 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் திறப்பு!.. வேதாந்தா குழுமம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் திறப்பு!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மூன்று வாரத்திற்குள் அதற்கான அறிவிப்பாணையும், மின்சார வசதியையும் ஏற்படுத்தித் தர மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 20) சென்னையில் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “ஸ்டெர்லைட் வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு பெரிய இடையூறாக இருந்தாலும், ஆலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதமாக ஆலை இயங்கவில்லை. முதலில் 500 பணியாளர்கள் கொண்டு ஆலையில் பராமரிப்புப் பணி நடைபெற்ற பிறகு, ஆட்களை எடுக்கும் பணி தொடங்கும். இதில் நேரடியாக 4,000 பேருக்கும், மறைமுகமாக 25,000 பேருக்கும் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஆலையில் ஏற்கனவே இரண்டு ஜிப்சம் குளம் இருக்கையில், மேலும் ஒரு ஜிப்சம் குளம் அமைக்க 2019ஆம் ஆண்டு அக்டோபர் வரை கால அவகாசம் வழங்கியுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தூத்துக்குடியில் 10 லட்சம் மரங்கள் நடவும், குடிநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 15 கிராமங்களுக்கு ஸ்மார்ட் பள்ளி, சர்வதேசத் தரம் பெற்ற மருத்துவமனை போன்றவை செய்து தரப்படும். இதற்காக, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்த ஆய்வகத்தில்தான் நடைபெறும். 22 ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
இது தொடர்பாகத் தொடுக்கப்படும் வழக்கை சந்திக்கத் தயாராக உள்ளோம். இந்தியாவில் உற்பத்தியாகும் காப்பர் அளவில் இருந்து தற்போது 5 முதல் 10 மடங்கு காப்பர் தேவை இருக்கிறது. பல அனுமதிகள் பெற வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியும் மின்சார இணைப்பும் வழங்கியவுடன் ஆலை திறப்பதற்கான பணிகள் தொடங்கும். இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் செயல்படுவோம்” என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: