வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரசாதத்தில் விஷம்! – 15 பேர் உயிரழப்பு . சாலூர் இளைய மடாதிபதி கைது

குற்றம்சாட்டப்பட்டவர்கள்
இம்மடி மாதேவ்சாமி
இளையமடாதிபதி மாதேஸ்சாமி
அம்பிகா
மாதேஷ் மனைவி அம்பிகா
விகடன் : கர்நாடகாவின் சுள்ளுவாடி கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சாலூர் இளைய மடாதிபதி இம்மடி மாதேவ்சாமி உள்ளிட்டோர் மீது சாம்ராஜ்நகர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கர்நாடகாவின் சுள்ளுவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதில், பக்தர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக, சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி இம்மடி மாதேவ்சாமி உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். முடிவில் இதுதொடர்பாகப் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், மாதேவ்சாமியை முதல் குற்றவாளியாகவும், கோயில் ஊழியர் மாதேஸின் மனைவி அம்பிகா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கர்நாடகப் போலீஸார்.


சுள்ளுவாடி கிச்சுகிச்சு மாரம்மா கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்ட பக்தர்கள் திடீரென மயக்கமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் பல்வேறு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 கோயில் திருப்பணிகள் முடிந்தநிலையில், கடந்த 15-ம் தேதி நடைபெற்ற விழாவில் நடந்த இந்தச் சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இறுதிக்கட்ட விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் அதுகுறித்த முழு தகவல்களும் வெளியிடப்படும் எனவும் மாவட்ட எஸ்.பி தர்மேந்திரகுமார் மீனா தெரிவித்திருந்தார். சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி இம்மடி மாதேவ்சாமி தூண்டுதலின்பேரில் கோயில் ஊழியர்கள், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் விஷம் கலந்ததாகப் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.



இதையடுத்து, இம்மடி மாதேவ்சாமி, கோயில் ஊழியர் மாதேஸ், அவரின் மனைவி அம்பிகா உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக 35 பேரிடம் விசாரணை நடைபெற்றது. போலீஸ் விசாரணையின்போது கோயில் டிரஸ்டிக்களுக்கு இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடு குறித்து அம்பிகா தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் இம்மடி மாதேவ்சாமி, அம்பிகா உள்ளிட்ட 5 பேருக்கு நேரடித் தொடர்பிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
vikatan.com

கருத்துகள் இல்லை: