சனி, 22 டிசம்பர், 2018

ஜெயரஞ்சன் : விவசாயம் .. காவு வாங்குவதைக் கைவிட்டால் மட்டுமே வேளாண் துறை உயிர்த்தெழும்

சிறப்புக் கட்டுரை: கடன் ரத்து மட்டும் தீர்வாகுமா? ஜெ.ஜெயரஞ்சன்மின்னம்பலம்:  கடந்த சில ஆண்டுகளாகவே வேளாண் துறையினர் பேரணிகள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள், உண்ணா நோன்புகள் எனப் பல வழிகளிலும் அரசின் கவனத்தை ஈர்க்கப் போராடி வருகின்றனர். கோவண ஊர்வலம், எலிக் கறி தின்னும் போராட்டம் என என்னென்னவோ செய்தும் தலைமை அமைச்சரோ, மற்ற ஒன்றிய அமைச்சர்களோ அவர்களை என்ன, ஏது, என்று கேட்கவில்லை. நாட்டில் பெரும்பாலான மக்கள் ஈடுபடும் ஒரு தொழிலில் நசிவு என்று அவர்கள் கதறும்போது ஆளும் அரசினர் கதைகளை அளந்தனர். தேர்தல்களில் தொடர் வெற்றியில் இருமாந்தும் இருந்தனர். ஊரகப் பிரச்சனைகள் தங்களை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை; அதற்கான மாற்றுக் கதையாடல்கள் தங்கள் கைவசம் உள்ளன; அவை வெற்றியும் பெறும் என உறுதியாக நம்பினர். அப்படியே நடந்தும் வந்தது.
ஆனால், விவசாயிகளின் அதிருப்தி நாளும் வளர்ந்தது. விளையும் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை. மானிய வெட்டு, சீர்திருத்தம் என்ற பெயரில் நடந்தேறியது. இதன் காரணமாக இடுபொருட்களின் விலை உயர்ந்தது. விவசாயிகளின் கடன் தொடர்கதையாயிற்று. அவன் கடனில் தத்தளித்தான். தனது பாரத்தைக் குறைக்கும்படியும், தன் பொருள்களுக்கு தகுந்த விலை வேண்டும் என்று மன்றாடினான்.
தலைமை அமைச்சரும், அவரது அமைச்சர்களும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று எந்த அடிப்படையும் இல்லாமல் கதைகளை அளந்தனர். மிகவும் ‘புரட்சிகரமான திட்டம்’ என்று கூவிக் கூவி விவசாயிகளின் பெயரால் தனியார் பயிர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடிகளை வாரி வழங்கினர். விளையும் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாகக் கண்கட்டி வித்தை காட்டினர். பல பொருட்களுக்கு விலையை அறிவித்ததோடு சரி, கொள்முதல் செய்யவே இல்லை.

கூடுதல் விலையை அறிவித்ததால், விவசாயி உற்சாகமாக அப்பொருளைக் கூடுதலாக விளைவித்ததால், அறுவடைக் காலத்தில் அப்பொருள் சந்தையில் விலையின்றிச் சீரழிந்தது. இது ஒருபுறமென்றால், மறுபுறம் கூடுதல் விளைச்சல் காலத்திலும் இறக்குமதியைத் தடையின்றி அனுமதித்து உள்நாட்டு விளைபொருள்களுக்கு விலையில்லாமல் செய்தனர். இதுபோதாதென்று பணமதிப்பழிப்பு என்ற மாபெரும் பொருளாதாரக் குற்றத்தை மக்களுக்கு எதிராக இழைத்தனர். சந்தையில் பணமில்லாமல் விளைபொருட்களை வாங்க ஆளில்லை.
இதையெல்லாம் எப்படிச் சரி செய்யலாம் என்று யோசிக்காமல் நிலத்திற்கு மண் அட்டை வழங்கினர். அந்த மண் அட்டையின்படி, விவசாயி இடுபொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டான். இடுபொருள் மானியங்களை நேரடியாகப் பயனாளிக்கு அளிக்க ஆதார் இணைப்பு தேவை என மேலும் ஒரு சூழலில் சிக்க வைத்தனர் அவனை. மேலும், பஞ்ச காலங்களில் அவனைக் காப்பாற்றிய வேளாண் அல்லாத பிற துறைகளான கட்டிட வேலைகள் போன்ற துறைகள் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் செயலிழந்தன. இதனால் மாற்று வேலைகளும் இல்லாமல் போனது.
நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிகரமான தோல்விகளைத் தழுவிய பாஜக, தாங்கள் ஆளும் குஜராத் மாநிலத்தில் விவசாயிகளின் மின் கட்டண பாக்கியைச் செலுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் வென்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளன.
இத்தகைய கடன் தள்ளுபடிகள் எல்லாம் ஒரு மோசமான கடன் பழக்கத்தை (CREDIT CULTURE) உருவாக்கும் எனவும், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் பல பொருளாதார நிபுணர்கள்.
இந்த நிபுணர்கள் தங்களது நிபுணத்துவத்தை எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? மக்கள் நலனுக்கு அல்ல, மாறாக முதலாளிகள், முதல், அந்நிய முதலீடு, பங்குச் சந்தை ஆகியவற்றைப் பேணிக் காப்பதில்தான் அவர்களது முழுக் கவனமும். அதுதான் சரியான பொருளாதார முடிவு எனவும், மற்றவை எல்லாம் மலிவான அரசியல் முடிவுகள் எனவும் அவர்கள் மேடைதோறும் பேசுவதும், எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுவதும் தொடர்கிறது. தோல்வியால் மோடி துவளக் கூடாது எனவும், சீர்திருத்தப் பாதையிலிருந்து விலகிக் கடன் ரத்து போன்ற எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர். அவர்களா தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள்? மோடி தானே சந்திக்க வேண்டும். பெரு முதலையும், அந்நிய முதலீடுகளையும் காக்கத் தன்னையே பலி பீடத்தில் ஏற்றுவாரா மோடி?

இது ஒருபுறமிருக்க, கடன் ரத்தும், கூடுதலான அதிகபட்ச ஆதரவு விலையும் விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க உதவுமா? இவையெல்லாம் ‘புண்ணுக்குப் புனுகு பூசுவதற்கு ஒப்பானதே’ என வாதிடுகிறார் ஹிமான்சு என்ற பொருளாதார அறிஞர். அவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ‘மின்ட்’ என்ற தினசரியில், ஊரகச் சிக்கல்கள் குறித்துப் பத்தி எழுதுகிறார். டிசம்பர் 21 அன்று வெளியாகியுள்ள பத்தியில் அவர் முன்வைக்கும் வாதத்தின் சுருக்கம் இதுதான்.
கடன் சுமைக்குக் காரணம் தொடர்ந்து நிலவும் கட்டுப்படியாகாத விலையே. ஏன் கட்டுப்படியான விலை விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை? அரசு தனது நிதி மற்றும் பணக் கொள்கையை, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் வேளாண் பொருட்களுக்குச் சரியான விலையைக் கொடுக்காமல் தவிர்க்கிறது. நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்கம் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறது. குறிப்பாக உணவுப் பொருட்களுக்கான விலையைக் குறைவாக வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனினும் விலைவாசி ஏற்றத்தையோ, பற்றாக்குறை அதிகரிப்பையோ முற்றிலும் விரும்பாதவர்கள் அந்நியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள். அவர்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் தங்கள் மதிப்பை இழக்காமல் இருக்க வேண்டுமானால் பணவீக்கம் அறவே ஆகாது. பணவீக்கமோ அல்லது அரசின் நிதிப் பற்றாக்குறையோ அதிகரித்தால் இந்தியாவின் தர மதிப்பீட்டைத் தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்துவிடும். அப்படிக் குறையும்போது வெளிநாட்டு மூலதனச் சந்தையில் கடன் பெறும் இந்திய முதலாளிகள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டிவரும்.
ஆகவே, இந்திய அரசு உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக்கொள்கிறது. தவிர, செலவைக் குறைக்க மானியத்தை வெட்டுவது என்பதும் தொடர்கிறது. இதன் விளைவாக, விளைபொருட்களுக்கு விலையும் கிடைக்கவில்லை. இடுபொருட்களின் விலையும் கூடி, விவசாயிகள் கழுத்தை நெரிப்பது தொடர்கிறது. இப்போக்கு 1990களுக்குப் பிறகு தொடர்கிறது. விவசாயமும், மற்ற துறைகளும் தங்கள் பொருட்களை எந்த விகிதத்தில் வாங்கி விற்கின்றன என்பது தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராகவே இருந்து வருகிறது. இது சரி செய்யப்படாமல் எந்தக் கடன் ரத்தும் விவசாயிகளுக்கு உதவப் போவதில்லை. நடுத்தர வர்க்கத்தைக் காக்கவும், அந்நிய முதலீட்டாளர்களின் நலனைக் காக்கவும் இந்திய விவசாயி பலியிடப்படுகிறான். அவனைக் காப்பாற்ற அந்தப் பொருள் மாற்று விகிதம் (TERMS OF TRADE) அவனுக்குச் சிறிதேனும் சாதகமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவனது சீரழிவு தொடரும்.
ஆக, இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒன்றியத்தை ஆள்பவர் எவராக இருந்தாலும் விவசாயியை மற்றவர்களுக்காகக் காவு வாங்குவதைக் கைவிட்டால் மட்டுமே வேளாண் துறை உயிர்த்தெழும் என்பதே...

(கட்டுரையாளர் : ஜெ.ஜெயரஞ்சன் - பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி,எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.)
நேற்றைய கட்டுரை : மோடியின் வரிக் குறைப்புத் தந்திரம்!

கருத்துகள் இல்லை: