வெள்ளி, 21 டிசம்பர், 2018

திருமாவளவன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!மின்னம்பலம் : திமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில், அதனை வழிமொழிவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (டிசம்பர் 20) மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் நடைபெறும் ‘தேசம் காப்போம்’ மாநாடு ஜனவரிக்குத் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் பங்கேற்பதற்கான தேதியை உறுதி செய்வதற்காகவே இந்தச் சந்திப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்புக்குப் பிறகு, புதிதாக திறக்கப்பட்ட கலைஞரின் சிலைக்கு அருகே சென்ற திருமாவளவன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.


முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தாங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளிலேயே பாஜக ஆட்சியைப் பறி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க நினைப்பது விநோதமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. யாரோடு கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்” என்று தெரிவித்தார்.
மேலும், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டணி வலிமை பெற்றுவருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்த பகீரத முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், காங்கிரஸ் - திமுக உறவு வலுவாக இருக்கிறது என்பதை கலைஞர் சிலை திறப்பு விழாவில் உணர்த்தியிருக்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: