வெள்ளி, 21 டிசம்பர், 2018

டாக்டர் ஜெயச்சந்திரன் ..ஐந்து ரூபாயை தாண்டாத மக்கள் மருத்துவர்…. மறைந்தார்!


jeyachandran
jainakkheeran.in - சந்தோஷ் குமார் : சென்னையில் 44 வருடங்களாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் இயற்கை எய்தினார்.
சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள கொடைப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான இவர், சிறு வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவுடன் வளர்ந்தவர். தனது ஊரில் மருத்துவ வசதி இன்றி பலர் உயிரிழந்ததே மருத்துவம் படிக்க காரணமாக அமைந்தது. பெரியவனாவுடன் மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலேயே ஆழ்மனதில் பதிந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் இவர் மருத்துவரானார்.

கடந்த 1971 ஆம் ஆண்டு அவர் மருத்துவ சேவையை தொடங்கிய போது, நோயாளிகளிடம் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்துள்ளார். ஆனால், தன்னிடம் வரும் நோயாளிகளிடம் கட்டாயமாக அவர் காசு வாங்கியதில்லை. மருத்துவம் பார்க்க வருபவர்கள் விருப்பப்பட்டால் இரண்டு ரூபாய் தரலாம் என்றே மருத்துவ சேவையை செய்துள்ளார். இவர் பெற்ற கட்டணம் குறைவானது என்றாலும் நோயாளிகளுக்கு இவர் பார்த்த மருத்துவம் சிறப்பானதாகவே இருந்துள்ளது.
44 வருடங்களாக தொடர்ந்து இந்த மருத்துவ சேவையை எந்தவித தொய்வும் இன்றி இறுதிக்காலம் வரை செய்துவந்துள்ளார் ஜெயச்சந்திரன். அதேபோல இவருக்கு என்று காலநேரம் இல்லை, 24 மணி நேரத்தில் எப்போது வந்து வேண்டுமானாலும் இவரை பார்க்கலாம். காலம் போக போக, இரண்டு ரூபாயாக இருந்த இவரது கட்டணம் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டு ஐந்து ரூபாயாக மாற்றினார்.
jai
இவரிடம் சிகிச்சை பெற வரும் பெரும்பாலான மக்கள் அடித்தட்டு மக்கள்தான். சில பணக்காரர்களும் இவர் மிகவும் ராசியானவர் என்று சிகிச்சை பெற வருவார்களாம். தன்னை பார்க்க வருபவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாலும், பணமாக வேண்டாம் அதற்கு பதிலாக மருந்துகளாக வாங்கி தாருங்கள் ஏழை நோயாளிகளுக்கு உதவும் என்று ஜெயச்சந்திரன் சொல்வாராம். இதுபோன்று தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காக சேவை ஆற்றுவதிலேயே கழித்துவிட்டார். இவர் இதுபோன்று சேவையாற்ற உருதுணையாக உடன் இருந்தவர் அவரது மனைவி வேணி. மனைவி வேணியும் மருத்துவர்தான் அவரது வருமானத்தில் குடும்பம் நடைபெற, இவர் மக்களுக்கு சேவை செய்ய தொடங்கியுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன். அவர்களும் மருத்துவர்களே.
இவரது இத்தனை வருட சேவையாலும், அன்பினாலும் ராயபுர மக்களும், அந்த பகுதியை சுற்றியுள்ள மக்களும் இவரின் பாச வலையில் விழுந்துவிட்டனர். இவருடைய வாழ்நாளில் சுமார் 2000 மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். சமீபமாக இவரு உடல்நிலை சரியின்றி இருந்தார், இன்று இயற்கை எய்தினார். இவருடைய மருத்துவ சேவையில் பயன்பெற்று வந்த அப்பகுதி மக்கள் மீளாத் துயரத்தில் உள்ளனர்.
 nakkeeran

கருத்துகள் இல்லை: