ஞாயிறு, 9 ஜூலை, 2017

மிசாவுக்கு விசா மறுத்த அந்த கருப்பு கண்ணாடி ... வெறும் கண்ணாடி அல்ல!

donashok: அந்த கருப்புக் கண்ணாடிக்கு
ஒரு வரலாறு இருக்கிறது. ! அந்தக்
கண்ணாடி பார்க்காத வெற்றி-தோல்விகள் இல்லை!. அந்தக் கண்ணாடியை துளைத்து கண்களைக் குதறாத துரோகங்கள் இல்லை! அந்தக் கண்ணாடி ஐம்பதாண்டுகளுக்கு அப்பாலும் தெளிவாகப் பார்க்கும் அரசியல் தொலைநோக்கி.!
 ஐந்து மணிநேர தூக்கம்தாண்டி அவை ஐந்து நிமிடம் கூட அசந்ததில்லை. ஆயிரம் ஈட்டிகள் எதிரே வந்தபோதும் அந்தக் கண்ணாடிக்கு சொந்தமான கண்கள் ஒருபோதும் இமைத்ததில்லை. அந்தக் கண்ணில் பயம் தெரிந்ததாகப் பொய்யாகவும் ஒரு சரித்திரமில்லை.
 அந்தக் கண்ணாடி வெறும் கண்ணாடி அல்ல, முயலுக்கும், மானுக்கும், சிறுத்தைக்கும், சிற்றெறும்புக்கும், புலிக்கும், யானைக்கும் வாஞ்சையோடு பகிர்ந்தளித்த சமதர்மச் சிங்கமொன்று வாழும் குகையின் ஜன்னல்கள். தமிழின் ஊற்றுக்கண் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகம் அது. 
தமிழ் தன்னைத்தானே அழகுபார்த்துக் கொள்ளும் கண்ணாடி அது.
அந்தக் கண்ணாடியைத் தாண்டி தமிழின் மீதும், தமிழர் மீதும் ஒருநாளும் வெயில் படிந்ததில்லை. அதற்குள் நுழைந்த புற-ஊதாக்கதிர்கள் கூட தமிழகத்தின் மீது தென்றலாகவே வீசியிருக்கிறது. மிசாவுக்கும் விசா மறுத்த தனியொரு தைரிய நாட்டின் எல்லை அது. அந்தக் கண்ணாடி ஒரு குறியீடு. அந்தக் கண்ணாடி ஒரு சீனப்பெருஞ்சுவர். அந்தக் கண்ணாடி குடை அல்ல, வானம். தான் ஆளும்போது மட்டுமல்லாமல், வீழ்ந்துவிட்டான் என எதிரிகள் நினைத்தபோதும் துளைத்தெடுக்கும் கேள்விகளால் ஐம்பதாண்டுகளாய் அசராமல் ஆட்சி நடத்திய ஒரு திராவிடச் சிங்கத்தின் சின்னம். வாழ்த்துகள் தளபதி மு.க.ஸ்டாலின்! இயற்கை உங்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தியை அழகாகச் சொல்லியிருக்கிறது. அந்தக் கண்ணாடிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்தக் கண்ணாடியே ஒரு வரலாறாகவும் இருக்கிறது. -டான் அசோக்

கருத்துகள் இல்லை: