சனி, 15 ஜூலை, 2017

இந்தியாவின் முதல் சோலார் ரயில் சேவை தொடக்கம்!

இந்தியாவின் முதல் சோலார் ரயில் சேவை தொடக்கம்!
மின்னம்பலம்: சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் சோலார் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில் இன்று (ஜூலை 15) தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க எரிபொருள்களின் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. டீசல், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களின் உபயோகத்தைக் குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இதுபோல், அதிக பண செலவு, காற்று மாசுபடுதல் ஆகியவற்றைக் குறைக்கவும், டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டை பெருமளவில் குறைக்கும் வகையிலும் சோலார் ரயில் பெட்டிகள் கொண்ட சோலார் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளக்குகள், மின்விசிறிகள், தகவல் காட்சிப்படுத்தப்படும் அமைப்பு ஆகியவை அனைத்தும் முழுக்க முழுக்க ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேணல்களில் இருந்து கிடைக்கும் ஆற்றல் கொண்டு இயக்கப்படும்.
சூரிய ஒளி இல்லாதபோது, ரயிலை இயக்க பேட்டரி அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,” சுற்றுச்சுழலுக்கு இணக்கமாக ரயில்களை மாற்றும் நடவடிக்கையில் இது மிகப் பெரிய பாய்ச்சலாகும். மாற்று எரிசக்தியை அதிகளவு பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சோலார் ரயில்களில் ஆறு பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியின் மீதும் 16 சோலார் பேணல்கள் பொருத்தப்பட்டுள்ளன. "சோலார் ரயில் மூலம், ஒரு ரயில் பெட்டி, ஓராண்டில், 9 டன் கார்பன் - டை - ஆக்சைடு வெளியிடுவது தவிர்க்கப்படும். மேலும், ஆறு பெட்டிகள் கொண்ட ஒரு சோலார் ரயில் மூலம், ஆண்டுக்கு, 21 ஆயிரம் லிட்டர் டீசல் மிச்சப்படுத்தலாம். இதன் மூலம், ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாயைச் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: