சனி, 15 ஜூலை, 2017

3,500 ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்

புதுடில்லி: ஜூன் மாதத்தில் மட்டும், 3.500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்களின் அச்சுறுத்தலைப் போக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிங்கி ஆனந்த் கூறியதாவது: கடந்த மாதத்தில் மட்டும், 3,500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், குழந்தைகள் ஆபாச தளங்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், ஜாமர் கருவிகளைப் பொருத்தும்படி, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி பஸ்களில், ஜாமர்களைப் பொருத்துவது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.


பின், நீதிபதிகள் கூறுகையில், 'குழந்தைகள் ஆபாச தளங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, இரண்டு நாட்களில், மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.  தினமலர்

கருத்துகள் இல்லை: