திங்கள், 10 ஜூலை, 2017

புதுவை காங்கிரஸ் அரசுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நாராயணசாமி

புதுவை காங்கிரஸ் அரசுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது, எங்களை அசைக்க முடியாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை காங்கிரஸ் அரசுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நாராயணசாமி சேதராப்பட்டு: ஊசுடு தொகுதி வட்டார காங்கிரஸ் மற்றும் ஊசுடு தொகுதி தி.மு.க. சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பத்துக்கண்ணு சந்திப்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் அருணகிரி, காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் சேகர்ரெட்டியார், ஜெயக்குமார்ரெட்டியார், தி.மு.க. தொகுதி செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன், விஜயவேணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி. புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேலும் முதியோர்களுக்கும், தியாகிகளுக்கும் பென்சன் உயர்த்தப்பட்டுள்ளது. 20 கிலோ அரிசி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 60 சதவீத நிதி மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால் எங்கள் ஆட்சியில் 95 சதவீத நிதியை செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டு மத்திய திட்ட குழுவிடம் இருந்து 3250 கோடியை கேட்டு பெற்றுள்ளோம். புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ரூ.1850 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரங்கசாமி டெல்லி செல்வதாக கூறி பாதியிலேயே திரும்பி விடுவார். ஆனால் நாங்கள் டெல்லி சென்று மத்திய மந்திரிகள், அதிகாரிகள் ஆகியோர்களை சந்தித்து புதுவைக்கு தேவையான திட்டங்களை பெற்று வருகிறோம். என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அதிகபட்சமாக 10 நாள் கூட சட்டசபை கூட்டம் நடந்ததில்லை.
ஆனால் நாங்கள் 25 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்தி அனைத்து உறுப்பினர்களையும் சுதந்திரமாக பேச விட்டு அவர்களுடைய கோரிக்கைகளை எங்கள் அரசு நிவர்த்தி செய்து வருகிறது. ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த போது அவரது அறையில் குற்றவாளிகள் தான் இருப்பார்கள். முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் என்.ஆர். காங்கிசார் கமி‌ஷன் பெற்றுக்கொண்டு மக்களுக்கு அளித்தனர். பலவழிகளில் ரங்கசாமியுடன் இருந்தவர்கள் லஞ்சம், கமி‌ஷன் பெற்று வந்ததால் தற்போது கமி‌ஷன் பெறுவதற்கு அவர்களது கை ஊறல் எடுக்கிறது. இதனால் குறுக்குவழியில் ஆட்சியை பிடித்து முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என ரங்கசாமி கனவு காண்கிறார்.

அவருடைய கனவு பலிக்காது. எங்களிடம் அவர்கள் வந்து விட்டார்கள், இவர்கள் வந்து விட்டார்கள் என்று ரங்கசாமி வதந்திகளை பரப்புகிறார். வதந்திகளை பரப்புவதே அவர்களுடைய வேலையாக உள்ளது. ஊசுடு தொகுதியில் ஒரு சிலர் ரியல் எஸ்டேட் பணத்தை வைத்துக்கொண்டு பல்வேறு தொகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து இங்கு கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள் எங்களுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று யாரும் எண்ண வேண்டாம்.

எங்களிடம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். எம்.எல்.ஏ. பாலன் சொல்வது போல் தற்போது எங்களுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது எங்களை அசைக்க முடியாது. மக்கள் சக்தியும், காங்கிரஸ் இயக்கமும் இணைந்து புதுவையை முன்னேற்ற மாநிலமாக கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் பேசினார். மாலைமுரசு

கருத்துகள் இல்லை: