திங்கள், 10 ஜூலை, 2017

பத்மநாபசாமி கோவில் ரகசிய நிலவறையை உடனே திறக்கவேண்டும்.. கம்யுனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன்!

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் ரகசிய நிலவறையை
உடனே திறக்கவேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் அச்சுதானந்தன் வலியுறுத்தி உள்ளார். பத்மநாபசாமி கோவில் ரகசிய நிலவறையை உடனே திறக்கவேண்டும்: அச்சுதானந்தன் திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற பத்மநாப சாமி கோவில் உள்ளது. இங்கு உள்ள ரகசிய நிலவறைகளில் தங்கம், வைரம், வைடூரியம் போன்ற விலைமதிக்கமுடியாத புதையல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி வக்கீல் கோபால் சுப்பிரமணியம் என்பவர் கோர்ட்டு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் இந்த பொக்கி‌ஷத்தை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள 6 நிலவறைகளில் ‘பி’ நிலவறை என்று பெயரிடப்பட்டுள்ள பெரிய நிலவறையை தவிர மற்ற 5 நிலவறைகளும் திறக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடந்தது. 
‘பி’ நிலவறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை இந்த நிலவறை மட்டும் திறக்கப்படவில்லை.  கேரளா மன்னர்களும் நம்பூதிரிகளும் பழங்குடி மக்களையும் குடியானவர்களையும் அடிமைகளாக பண்ணைகளில் வேலை வாங்கினார்கள். உற்பத்தி பொருட்கள் விற்பனை மூலம்  பண்டமாற்றாக பெறப்பட்ட தங்கம் தான் இந்த திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில்  உள்ள  தங்கம் எனப்படுவது. இது ஒன்றும் கடவுளே நேரில் வந்து விவசாயம் செய்து சம்பாதித்து அல்ல.  மக்கள் சுரண்டி சேர்த்த கொடூர சொத்து ..
இதற்கிடையில் பத்மநாப சாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளில் உள்ள விலை மதிக்கமுடியாத 8 வைரங்கள் மாயமாகி இருப்பதாக வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளார். மேலும் ‘பி’ நிலவறையை திறந்து அதில் உள்ள பொக்கி‌ஷங்களையும் கணக்கெடுத்தால்தான் இந்த பணி நிறைவுபெறும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதைதொடர்ந்து ‘பி’ நிலவறையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருடன் ஆலோசித்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். ‘பி’ நிலவறையை சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சில நாட்களில் திருவனந்தபுரம் வர உள்ளார். மன்னர் குடும்பத்தினருடனும், கோவில் தந்திரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்திய பிறகு இந்த நிலவறை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘பி’ நிலவறையை திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்யாவர்மா என்பவரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் ‘பி’ நிலவறையை திறந்து அதில் உள்ள பொக்கி‌ஷங்களை கணக்கெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பற்றி கேரள முன்னாள் முதல்-மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவருமான அச்சுதானந்தன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மன்னர் ஆட்சிமுறையும் முடிவுக்கு வந்துவிட்டது. அதனால் மன்னர் என்று கூறிக்கொண்டு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் பத்மநாபசாமி கோவிலுக்கு உரிமைகொண்டாட முடியாது.

‘பி’ நிலவறையை திறக்க மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ‘பி’ நிலவறை பலமுறை திறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ஏற்கனவே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் ‘பி’ நிலவறையை கோர்ட்டு உத்தரவுபடி உடனே திறக்க நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதுபற்றி கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி மன்னர் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி ‘பி’ நிலவறையை திறப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலவறையை திறப்பதால் எந்த ஐதீக மீறலும் ஏற்படாது என்றார். இதற்கிடையில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராணி லெட்சுமி பாய் கூறும்போது ‘பி’ நிலவறையை திறப்பது தவறு இல்லை. இந்த அறையை திறக்கக்கூடாது என்று கோவில் தொடர்பான எந்த ஆவணத்திலும் கூறப்படவில்லை. இத வி‌ஷயத்தில் பிடிவாதம் பிடிப்பது மேலும் சந்தேகங்களை அதிகரிக்கும் என்றார்  மாலைமலர்

கருத்துகள் இல்லை: