வியாழன், 13 ஜூலை, 2017

திலகனை சாகடித்த மோகன்லால் .. பாவனாவை கடத்திய திலீப் ... மலையாள சினிமா ஒரு மாபியாவாகி நீண்ட நாளாகி விட்டது!


செவ்வாய்க்கிழமை ‘இந்துக்களுக்கு’ நல்ல நாள் இல்லை. ஆனாலும் ஜூலை 11 செவ்வாய் அன்றுதான் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டு கொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். “மத்திய சிறைக்கு வரவேற்கிறோம் – வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்” என்ற பதாகைகளுடன் மக்கள் அவரை வரவேற்றனர். உண்மையில் 2016-ம் ஆண்டில் திலீப் நடித்த படத்தின் தலைப்பும் அதுதான்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் – படம் பிடித்து பிரச்சினை வெளியே வந்த பிப் – 2017-க்கு பிறகு நிறைய செய்திகள் – கதைகள்! அவற்றில் அரை உண்மைகளோடு அரை பொய்களும் இருந்ததால் கதையின் விறுவிறுவிப்பைக் கூட்டின.
இந்திய சினிமாக்களில் நாற்பது வயது இயக்குநர்கள் எடுத்தே ஆகவேண்டிய இரு மனைவி – காதல் – முக்கோணக் கதையும், அதிக வருமானத்தை சொத்தாக்கும் கூட்டணி பிரச்சினையும், குற்றத்தை மறைக்கும் பிரபலங்களின் அதிகாரமும், அந்த அதிகாரம் தோற்றுவிக்கும் ஆணாதிக்கமும் இதில் இருக்கின்றன.

திலீப்பின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். ஏனைய மலையாள நடிகர்கள் பலரைப் போல இவரும் அடிப்படையில் ஒரு மிமிக்கிரி – பலகுரல் கலைஞர். மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பலகுரல் கலையால் நிகழ்ச்சி நடத்திய திலீப்புக்கு உறுதுணையாக இருந்தவர் நண்பர் நாதிர்ஷா. இவரும் பாவனா மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
கொச்சி மகாராஜா கல்லூரியில் பட்டம் முடித்த கோபாலகிருஷ்ணன், கொச்சிக்கு அருகே இருக்கும் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர். முதலில் உதவி இயக்குநராக மலையாள திரையுலகில் கால் பதிக்கிறார். ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1992-ல் “என்னோடு இஷ்டம் கொள்ளாமோ” படத்தில் கேமராவிற்கு முன்னால் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றுகிறார்.
1995-ம் ஆண்டில் அவர் நடித்த மனதே(தி?) கொட்டாரம் படத்தில்தான் அவரது பாத்திரத்தின் பெயரான திலீப் அவரது இன்றைய பெயரானது. மஞ்சுவாரியருடன் 1996-ம் ஆண்டில் அவர் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற “சல்லாபம்” திலீப்பை நட்சத்திர கிளப்பில் சேர்த்தது. பிறகு 1996-ல் மஞ்சுவாரியரை மணக்கிறார். அப்போது நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தாலும் ‘குடும்பப் பெண்ணின் இலட்சணப்படி’ நடிப்பிலிருந்து விலகுகிறார் மஞ்சு. திலிப்போ சம்பாதிக்க வேண்டிய ‘புருஷ இலட்சணப்படி’ 130-க்கும் மேற்பட்ட படங்களை முடித்து விட்டார். அவற்றில் பல பெருவெற்றி பெற்ற படங்கள்.
பிறகென்ன? பிரபலம், வருமானம், தயாரிப்பாளர் முதலான அந்தஸ்துகள். 2015-ம் ஆண்டில் மஞ்சு வாரியரை விட்டு பிரிகிறார். 2016-ல் நடிகை காவ்யா மாதவனை மணக்கிறார். காவ்யாவும் பல வெற்றிப்படங்களில் திலீப்போடு ஜோடியாக நடித்தவர்.
இந்த பிரிவு – புதிய மணத்தை வைத்து ஏகப்பட்ட நேரம் அச்சிலும், காட்சியிலும் மலையாள மக்கள் பல வதந்தி, கதைகளை பேசி, கேட்டு, கழித்தனர்.
திலீப்பின் சில படங்களை இயக்கிய இயக்குநர் வினயன், “ திலீப் எனும் நடிகர் தனது முடிவுகளை மறுக்கும் எவரையும் திரைப்படத்துறையில் நீடிக்க முடியாத படி செய்து விடுவார். இத்துறையில் அவரது செல்வாக்கு காரணமாக திரைத்தொழில் சங்கங்கள் பல திலீப் மீதான பல புகார்களை கவனிக்கத் தவறிவிட்டன” என்கிறார்.
வினயன் சொல்வது போல திலீப் எவரையும் ஒதுக்கிவிடும் வல்லமை உடையவரா? மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், அகில இந்திய பிரபலம் அசின், தென்னிந்திய பிரபலம் நயன்தாரா, இன்ன பிற பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நிறுவனங்கள்.. இவர்களையெல்லாம் திலீப் ஓரங்கட்ட முடியுமா என்ன? நிச்சயம் முடியாது. இவர்களெல்லாம் திலிப்பை விட அதிகமோ இல்லை சற்று குறைவாகவோ செல்வாக்கு கொண்டவர்கள்தான்.
ஆயினும் மலையாளத் திரையுலகைப் பொறுத்த வரை திலீப் ஒரு தாதா போன்ற அதிகாரத்தை கொண்டிருந்தார் என்றால் அது மிகையல்ல. “மலையாள சினிமாவின் சில தவறான முன்மாதிரிகள் திலீப்போடு ஆரம்பித்தன. அவரது படத்தில் யார் நாயகி, படக்குழுவினர் எவர் என்பதையெல்லாம் திலீப்தான் முடிவு செய்வார். இதை மலையாள திரையுலகில் ஆரம்பித்து வைத்தது அவர்தான்” என்கிறார் இயக்குநர் ராஜசேனன்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி திரையுலகில்தான் இதெல்லாம் எம்ஜிஆர், ராஜ்கபூர், ராமாராவ், ராஜ்குமார் காலத்திலேயே வந்துவிட்டன. எனினும் மலையாள சினிமாவின் வர்த்தகம் சற்றே சுருங்கியது என்பதால் இந்த மாதிராயான சூப்பர் ஸ்டார் துதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். உலகமயமாக்கம் வந்த பிறகு வளைகுடா, இணைய சந்தைகள் உருவான பிறகு மலையாளமும் ஜோதியில் கலந்து விட்டது. எனினும் இதை துவக்கி வைத்தவர் என்ற முறையில் திலீப் இங்கே குறிப்பிடப்படுவதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
திலிப் அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மலையாள திரையுலகில் அவர் நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று அனைத்து பாத்திரங்களிலும் அடித்து விளையாடியதால் அவரது பிரபலத்தை வைத்து முழு திரையுலகையும் கட்டுப்படுத்தவோ, செல்வாக்கை கூட்டிக் கொள்ளவோ முயன்றார்.
அது வெறுமனே தலைமையை பிடிக்கும் தேர்தல் அல்ல. தொழிலில் யார் ஆதிக்கம் செய்வது என்ற ஏகபோக போட்டி. திரையரங்க வசூலில் தங்களது பங்கை அதிகரிக்க வேண்டுமென்று இவ்வாண்டு ஜனவரியில் வினியோகஸ்தர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, அதை முறியடிக்க திலீப் வினியோகஸ்தர்களுக்கான தனிச் சங்கத்தையே துவக்கி விட்டார். இது அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு  முன்பு நடந்தது.
மலையாள திரை நடிகர்களின் சங்கமான “அம்மா”வின் பொருளாளராக இருக்கும் திலீப், அச்சங்கத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவாராம். ஆரம்பத்தில் பாவனாவுக்கு நேர்ந்த குற்றம் குறித்து பேச்சு வருகையில் இந்த “அம்மா’ சங்கம் திலீப்புக்கு ஆதரவாக பத்திரிகையாளர் கூட்டம் நடத்தியது.
ஆக வெறும் நடிகர் என்று இல்லாமல் அனைத்தும் தழுவிய திரையுலக அதிகாரத்தை வளைக்கும் ‘சாமர்த்தியம்’ திலீப்புக்கு இருந்தது. அதன் பிறகு அவர் தனிப்பட்ட காரணங்களால் பாவனா மீது பகை கொண்டிருக்கிறார். அதில் வணிக, சொத்து காரணங்கள் கூட இருக்கலாம். எனினும் திலீப்போடு ஒப்பிடுகையில் பாவனா வெறும் நடிகர் மட்டுமே. அதுவும் பல நடிகைகளில் ஒருவர். காவ்யா மாதவன் கூட திலிப் சேர்ந்து கொண்டு மஞ்சு வாரியருக்கு துரோகமிழைக்கிறார் என்று பாவனாதான் மஞ்சுவிடம் தெரிவித்தார். அதனால் திலீப் பாவனா மீது ஜன்மப் பகை கொண்டார் என்று அனைவரும் எழுதுகின்றனர்.

பல்சர் சுனி
இவையெல்லாம் சில பொறிகள் மட்டுமே. ஏனெனினல் பாவனாவை பழிவாங்க திலீப் போட்ட திட்டம் போல மற்றவர் போட்டிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. “பல்சர் சுனி” எனும் கூலிப்படை ஆளை பல இலட்சங்களில் விலை பேசி, பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து, நிர்வாணமாக்கி படம் பிடித்து, பாவனாவின் திருமணத்தை நிறுத்துவது என்று மலையாள த்ரில்லர் படக்கதை போல போகிறது விசாரணை உண்மைகள்.
இந்த குற்றம் குறித்து போலீசின் சிறப்பு விசாரணைக் குழுவினர் அமைதியாக திலீப்பை வளைத்திருக்கின்றனர். பல்சர் சுனியோடு திலீப்பும், அவருக்கு நெருக்கமானவர்களும் பேசியது எல்லாம் ஆதாரங்களாக போலீசிடம் இருக்கின்றன. எனினும், ஒரு சதிவலையில் தன்னை சிக்கவைத்து விட்டனர் என்று திலீப் கைதுக்கு பிறகு கூறியிருக்கிறார்.
சற்றே புன்னகையுடன் அவர் காணப்படுவதால் விசாரணையோ இல்லை தீர்ப்போ முற்றிலும் திலீப்புக்கு எதிராகத்தான் வரும் என்று சொல்வதற்கில்லை. மேலதிகமாக குற்றம் நிகழ்த்தப்பட்ட பாவனா கூட நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு என்று அமெரிக்கா போல தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு.
திலீப்பின் குற்றத்தை ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் இழைத்த குற்றமாக கருதும் பலர், இதை பெண்ணிய நோக்கில் பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று வழமையான கருத்துக்களில் பார்க்கின்றனர். இவையெல்லம் இல்லாமல் இல்லை. ஆனால் இவையே பிரதானமாகவோ இல்லை அடிப்படையாகவோ இல்லை. பல்சர் சுனி எடுத்த வீடியோ பதிவு காய்வா மாதவன் நடத்தும் துணிக்கடையில் கொடுக்கப்பட்டது, காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயாருக்கும் குற்றத்தில் பங்கு இருக்கிறது, அவர்களும் கைது செய்ய்யப்படுவார்கள் என்பதை வைத்துப் பார்க்கும் போது இங்கே பெண்ணுக்கு குற்றமிழைத்த கூட்டத்தில் பெண்களும் இருக்கிறார்கள்.
அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்போர் செய்யும் குற்றங்களை அந்த அதிகார மட்டத்தை வைத்தே பரிசீலிக்க வேண்டும். மோனிகா லிவின்ஸ்கியோடு தவறாக நடந்து கொண்ட கிளிண்டன், அந்த பெண்ணுக்கு பெரிய வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். வெள்ளை மாளிகை எனப்படும் இந்த உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட ஒரு கட்டிடத்தின்  தலைவனுக்கு ஒரு பணிப்பண்ணை ஏமாற்றுவது எவ்வளவு எளிது!
நீதிபதி கங்குலி, தெகல்கா தருண் தேஜ்பால், என்று பல வகைகளில் பார்த்தாலும் குறிப்பிட்ட துறைகளில் செல்வாக்கும் அதிகாரமும் இருப்போர் இத்தகைய குற்றங்களை திட்டம் போட்டு செய்கிறார்கள். அல்லது குற்றம் வெளியே வந்த பிறகு அதை சகஜமாக எதிர்கொண்டு தங்களது பெயரை காப்பாற்ற முனைகிறார்கள். இவர்களெல்லாம் வெறும் ஆண்கள் மட்டும் தானா?
இல்லை. திலீப்பின் கதையையே எடுத்துக் கொள்வோம். தொழிலாளர் உரிமைகளுக்கு பெயர் போன ஒரு மாநிலத்தில் திரைப்படம் தொடர்பான அனைத்து சங்கங்களையும் அவர் தீர்மானிக்கிறார். திரைப்படம் தொடர்பான வர்த்த்கம், வினியோகம், தயாரிப்பு போன்றவற்றில் அவர் இருக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து அவர் அத்துறையில் சக்கரவர்த்தி போல அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார். அவரது வர்த்தகத்தோடு தொடர்புடைய அந்த சங்கங்கள் அவரது தவறுகளை துறை ரீதியாக விசாரிக்க கூட இல்லை.
ஆகவே அவரை எதிர்ப்போர் மட்டுமல்ல, எதிர்க்கும்  சங்கங்களும் கூட வலுவலிழக்கின்றனர். எதிர்ப்போரை வீழ்த்துவது மட்டுமல்ல, எதிர்க்கும் சங்கங்களுக்கு போட்டியாக புதுச் சங்கங்களையே உருவாக்குகிறார். இப்பேற்றப்பட்ட நபர் பாவனாவை என்னவெல்லாம் செய்ய தீர்மானிகத்திருப்பார்?
சுருங்கச் சொன்னால் வர்த்தகம் தொரடர்பான முதலாளித்துவத் துறைகளில் இருப்போரை வழிநடத்துவது அல்லது பொறுப்பாக்குவது ஜனநாயகம் அல்ல. பணம் அல்லது வர்த்தகம். அவர் வெற்றிகரமான நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்பாதலேயே அவரது ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் ஏற்கப்படுகின்றன.
பாவனா பிரச்சினையில் ஆரம்பத்தில் திலீப்பை ஆதரித்த அம்மா நடிகர் சங்கம் இப்போது அவரை நீக்கியிருக்கிறது. திலீப் தன்னை எதிர்ப்போரை காலி செய்தது முன்னாடியே அம்மா சங்கத்திற்கு தெரியாமலா இருக்கும்? அகப்படாதவரை அவர் உத்தமர், அகப்பட்ட பிறகு அவர் குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வளவுதான். நாளைக்கே திலீப் விடுதலையானால் அம்மா அவரை இரண்டு பங்கு உச்சத்தில் கொண்டு போய் வைக்கும்.
தற்போது பெண் நடிகைகளுக்குஎன்று தனி அமைப்பெல்லாம் கேரளாவில் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் வர்த்தகம் கொலேச்சும் திரைத்துறையில் ஜனநாயகத்தை கொண்டு வர வழியில்லாத போது யாருக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?
ஒரு சினிமா என்பது தயாரிப்பு, நடிகர் சம்பளம், இலாப பகிர்வு போன்றவற்றோடு சூதாட்டத்தையும் விஞ்சும் விதிகளோடு இயங்கும் துறை என்பதால் சூப்பர் ஸ்டார்களையோ இல்லை பெரும் முதலாளிகளையோ அங்கே எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
ஆரம்ப கால மலையாள சினிமா உலகில் நல்ல படங்கள் வந்தன, நல்ல படைப்பாளிகள் இருந்தனர், என்பதெல்லாம் பழங்கதையாக மாறியதற்கும் திலீப் ஒரு திரைத்துறை தாதாவாக மாறியதற்கும் பெரும் வேறுபாடு இல்லை.
மற்ற துறைகளைப் போலக் கூட சினிமாவைக் கட்டுப்படுத்த முடியாது என்றால் இங்கே திலீப்புகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை: