வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை..! - ரேஸில் முந்துவது யார்?




vikatan,com : முதல்வர் ஜெயலலிதா அப்போலோவுக்குப் போய் 15 நாட்கள் ஆகின்றது. காவிரி பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் முடிவெடுக்கப்படாமல் உள்ளது. ஐ.ஜி. டூ கூடுதல் டி.ஜி.பி. பதவி உயர்வு ஃபைல் முதல்வர் டேபிளில் கடந்த ஜனவரி முதல் தூங்குகிறது. இதுமாதிரி முதல்வர் நேரிடையாக பார்க்கவேண்டிய அரசுப் பணிகள் அப்படியே கிடக்கின்றன. ஆனால், அப்போலோ பெட்டில் படுத்தபடியே ஜெயலலிதா அரசு தொடர்பான சில உத்தரவுகளை பிறப்பித்தார் என்றெல்லாம் மருத்துவமனையில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டன. ஆனால், இதையெல்லாம் பொதுமக்கள் துளிகூட நம்பவில்லை.
அக்டோபர் 6-ம் தேதியன்று மாலை அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் இருந்த கடைசி வரிதான் மத்திய அரசை யோசிக்க வைத்துள்ளது. இன்னும் நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா தங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதை கூர்ந்து கவனித்தனர். அப்போலோ வந்துள்ள எய்ம்ஸ் டாக்டர்களிடம் மத்திய உள்துறை தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. அவர்களும் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான தங்களது கருத்தை உடனே தெரியப்படுத்தினர்.


உடனே, மகாராஷ்டிரா மாநில ஆளுநரும் தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு கிளம்பிப்போகச் சொன்னார்கள். அவரும் தமிழகம் வந்து சேர்ந்துவிட்டார். ராஜ்பவனில் இருந்தபடி, தமிழக தலைமைச் செயலாளரை அழைத்து அரசு நிர்வாகம் குறித்த சில சந்தேகங்களுக்கு பதில் கேட்டறிந்தார். இந்த சூழ்நிலையில், அக்டோபர் 7-ம் தேதியன்று ஆளுநரை சந்திக்க அப்பாயின்மென்ட்டை கேட்டிருக்கிறார் சுவாமி. ஜெயலலிதா உடல்நிலை சரி ஆவதில் காலதாமதம் ஆவதால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அரசு நிர்வாகத்தை சீர்படுத்தவேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
ஆனால், அ.தி.மு.கழகம் தரப்பில், முன்பு எம்.ஜி.ஆர். உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது, பொறுப்பு முதல்வராக நாவலர் நெடுஞ்செழியனை நியமித்தார்கள். அதைபோல், தற்போது அரசு நிர்வாகத்தை கவனிக்க பொறுப்பு முதல்வரை நியமிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
.
இதுபற்றி அ.தி.மு.கழக முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசியபோது,
'' முதல்வர் உடல்நலம் தேறி வருகிற வரையில், அவர் சார்பாக மிக முக்கிய மற்றும் அவசரமான அரசு ஃபைல்களில் கையெழுத்துப்போட யாராவது ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கவேண்டும்.  அந்த ஒருவர் யார் என்பதுதான் இப்போதைய பேச்சு. மூன்று பேர் அல்லது ஐந்து பேர் கொண்ட அமைச்சர் குழுவை போடலாம் என்று முதலில் பேசினோம். அது ஒ.கே. தான். ஆனால், யாராவது ஒருவர்தான் அரசு ஃபைல்களில் கையெழுத்துப்போட முடியும். அந்த ஒருவரை தேர்தெடுப்பதில் சர்ச்சை நீடிக்கிறது. குழுவினர் கூட பல மாவட்டங்களை சேர்ந்தவர்களை போடலாம். ஆனால், கையெழுத்திடும் அதிகாரம் யாரிடம் விடுவது என்கிறபோது.. மீண்டும் ஒ. பன்னீர் செல்வத்தின் பெயர் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையே கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்தமுறை ஸ்பெஷல் முக்கியத்துவம் வழங்க கட்சியின் சீனியர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த வகையில், லிஸ்டில் முதலாவது இருப்பவர்  தம்பித்துரை, இரண்டாவதாக தலைமைச் செயலாளருக்கு நெருக்கமான  அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. மூன்றாவது இருப்பவர்  அமைச்சர் வேலுமணி. நாலவது இருப்பவர்  அமைச்சர் தங்கமணி" என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரைப்பற்றியும் இங்கே பார்க்கலாம்

தம்பித்துரை...முதல்வரின் உடல்நலம் குறித்த விவகாரத்தில் மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. டெல்லிக்கும் தமிழகத்துக்கும் பாலாமாக யாராவது செயல்பட வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தால், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். ஆனால், இவரை டெல்லியில் இருந்து விடுவிடுப்பதில் சில சட்ட சம்பிரதாயங்கள் இருக்கலாம் என்பவர்களும் உண்டு.

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...போயஸ்கார்டனில் இருந்து சசிகலா விரட்டப்பட்டபோது, அந்த இடத்தில் அமர வைக்கப்பட்டவர் பழனிச்சாமி. வரவு, செலவு கணக்குகளில் ஆரம்பித்து அமைச்சர்கள் தரப்பில் மாதம் தரப்படும் கட்சி நிதிகளை சேகரிக்கும் கலெக்ஷன் ஏஜண்ட் ஆகவே செயல்பட்டவர். தான் இல்லாத இடத்தில் உட்கார்ந்து கார்டனின் முழு செலவை அறிந்துவிட்டாரே? என்கிற கோபத்தில் சசிகலா இருக்கிறார். அதனால், சசிகலாவின் ஆதரவு இவருக்கு கிடைப்பது சந்தேகமே.

அமைச்சர் வேலுமணி...யாரையும் அண்ணே...அண்ணே என்று அழைக்கும் பழக்கமுள்ளவர். சசிகலா குடும்பத்தினர் மத்தியில் ஒட்டெடுப்பு வைத்தால், இவருக்கே மெஜாரிட்டி கிடைக்கும். அந்த வகையில், இவரும் ரேஸில் இருக்கிறார்.
அமைச்சர் தங்கமணி: 'கொங்கு மண்டலத்து ஒ.பி.எஸ்' என்றே இவரை கட்சியினர் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு பவயம் காட்டுகிறவர். சகல தரப்பினரையும் திரைமறைவில் சமாளிப்பதில் கைதேர்ந்த அரசியல் தலைவர்.
பொறுத்திருப்போம்..
யார் ரேஸில் ஜெயிக்கப்போவது என்று!

கருத்துகள் இல்லை: