செவ்வாய், 4 அக்டோபர், 2016

கர்நாடக சட்டசபை தீர்மானம் : 27 டி எம் சி குடிநீருக்கும் எஞ்சியது கர்நாடக பாசன தேவைக்கும்தான் .. தமிழகத்துக்கு கிடையாது!

Karnataka decides to release Cauvery water to agricultureபெங்களூர்: கர்நாடகாவில் காவிரி தண்ணீரை சேகரித்து வைத்துள்ள நான்கு அணைகளில் மொத்தம் 27 டிஎம்சி தண்ணீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும், பிற தண்ணீரை பாசன தேவைக்கு திறந்துவிடவும் கர்நாடக சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காவிரிக்காக, கடந்த செப்டம்பர் 23ம் தேதி கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கே.ஆர்.எஸ், ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கபினி ஆகிய நான்கு அணைகளிலும் இருப்பு உள்ள, 27.6 டிஎம்சி தண்ணீரை பெங்களூர் நகரம் உள்பட காவிரி பாசன பகுதியிலுள்ள கிராமம் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதையே காரணமாக வைத்துக்கொண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவுகளை மதிக்காமல், தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரையும் கர்நாடகா இதுவரை திறந்து விடவில்லை.


கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுப்ரீம்கோர்ட் கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு தருவதாக எச்சரித்து தினமும் 6 ஆயிரம் கன அடி வீதம், 7 நாட்களுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று கர்நாடக இரு அவைகளின் சிறப்பு கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்தது. அனைத்து உறுப்பினர்களும் பேசிய பிறகு முதல்வர் சித்தராமையா இறுதியில் பதிலளித்து பேசினார். அப்போது காவிரி வழக்கில், கர்நாடக அரசு வக்கீலாக நாரிமனே தொடருவார் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகா எதிர்க்கும் என்றும் கூறினார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது.
அந்த தீர்மானத்தின்படி கர்நாடகாவிலுள்ள காவிரி அணைக்கட்டுகளில் தற்போது மொத்தம் 34 டிஎம்சியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும், பெங்களூர் உள்ளிட்ட காவிரி பாசன பகுதி குடிநீர் தேவைக்காக 27 டிஎம்சி தண்ணீரை இருப்பு வைத்துவிட்டு எஞ்சிய தண்ணீரை பாசனத்திற்கு திறப்பது எனவும் கூறப்பட்டுள்ளது.
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, கேஆர்எஸ் அணையிலிருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க உள்ளதாகவும், அதில் கர்நாடக பாசன பகுதிகளுக்கு போக, வடிந்து ஓடும் தண்ணீர் சுமார் 3 ஆயிரம் கன அடிதான் தமிழகத்திற்குள் செல்லும் எனவும் கூறினார்.
கர்நாடகா, உச்சநீதிமன்றம் கூறிய அளவில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்பதோடு, தனது மாநில விவசாயிகளுக்கு திறக்கும் நீரில் எஞ்சி, வடிந்து ஓடும் தண்ணீர்தான் தமிழகத்திற்கு போகப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. கர்நாடகா தண்ணீரே திறக்காவிட்டாலும், எஞ்சியது, அணைகளிலிருந்து கசிந்து வெளியே ஓடும் தண்ணீர் சுமார் 1500 கன அடியாக இருக்கும் என்றும், எனவே தமிழகத்திற்கு
செல்லும் 3 ஆயிரம் கனஅடி என்பது ஒரு பெரிய விஷயமில்லை என்றும் சித்தராமையாவே நிருபர்களிடம் தெரிவித்தார்.
சுப்ரீம்கோர்ட்டிற்கு கணக்கு காட்டியதும்போலாயிற்று, விவசாயத்திற்கும் தண்ணீரை எடுத்துக்கொள்வது போலாயிற்று என்பது கர்நாடக கணக்கு. இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி செய்திதான்  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: