சனி, 8 அக்டோபர், 2016

திருநாவுகரசுவின் அதிமுக(தாய்வீடு ) பாசம்.... நிச்சயம் கூட்டணி மேகங்கள் இடம் மாறுகிறது?

"தேமுதிக-வில் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தபோது அதிமுகமீது மென்மையான போக்கைத்தான் கடைப்பிடித்தார். எப்படியாவது அதிமுக கூட்டணியில் தேமுதிக-வை சேர்த்துவிடத் துடித்தார். நினைத்ததுபோலவே கூட்டணியும் அமைத்தார். சில காலத்துக்குப் பிறகு தேமுதிக-வில் இருந்து விலகி, அதிமுக-விலேயே ஐக்கியமாகிவிட்டார்.
இப்போது திருநாவுக்கரசரையும் திமுக அப்படித்தான் பார்க்கிறது. அதிமுக, பிஜேபி என மாறி காங்கிரஸுக்கு வந்தவர் திருநாவுக்கரசர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆகிவிட்டார் திருநாவுக்கரசர். ஆனாலும் அதிமுக மீதான பாசம் மட்டும் அவருக்கு குறையவே இல்லை என்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கலாம் என ராகுல் காந்திக்கு அப்போது ஐடியா கொடுத்து காய் நகர்த்தியவர் திருநாவுக்கரசர். ஆனால் அது நடக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு திருநாவுக்கரசர் தலைவராக ஆனபிறகும்கூட அதிமுக பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ விமர்சனங்கள் எதுவும் முன்வைக்காமல் தவிர்த்துவந்தார் திருநாவுக்கரசர். ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து தினமும் ராகுலுக்கு அப்டேட் கொடுத்தவரும் திருநாவுக்கரசர்தான்.
நேற்று ராகுல் சென்னைக்கு வருவது மற்ற தலைவர்களுக்குத் தெரியாது என்று சொன்னாலும்கூட, திருநாவுக்கரசருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் வந்து பார்ப்பது சரியாக இருக்கும் என ராகுலை அழைத்தவரே திருநாவுக்கரசர்தான் என்றும்கூட சிலர் சொல்கிறார்கள். ஆக, திருநாவுக்கரசரின் அதிமுக பாசம் திமுக-வை திகைக்கவைத்திருப்பது உண்மைதான்." என்பதுதான் அந்த மெசேஜ்.
அதைத் தொடர்ந்து வைகோவும், கவர்னரும் சந்தித்த போட்டோவை அப்டேட் செய்த ஃபேஸ்புக் அதற்கு ஸ்டேட்டஸ் ஒன்றையும் போட்டது. "அப்பல்லோவில் முதல்வர் நலம் விசாரிக்க வந்த வைகோ, அங்கிருந்த அமைச்சர்களிடம் பேசிவிட்டு நேராகப் போனது கவர்னர் மாளிகைக்குத்தான். கவர்னரைப் பார்த்துவிட்டு வெளியேவந்த வைகோ, 'இது நட்புரீதியான சந்திப்பு. வித்யாசாகர் எனது நெருங்கிய நண்பர். இதில் அரசியல் எதுவுமில்லை. நாங்கள் அரசியல் பேசவும் இல்லை. இடைக்கால முதல்வர் நியமிப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.' என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னாலும், மருத்துவமனைக்கு முதல்வரை பார்க்கப் போனது பற்றியும் சொல்லியிருக்கிறார் வைகோ. ஜெயலலிதா உடல்நிலை பற்றி இருவரும் டிஸ்கசன் செய்ததாகவும் சொல்கிறார்கள்." என்பதுதான் அது.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ஆஃப்லைனில் போவதற்குமுன்பு தட்டிய மெசேஜ் இது.
"ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழகமே அவரது உடல்நிலை பற்றி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர்களிடம் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து தம்பிதுரை பேசியிருக்கிறார். 'தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் அறிவிப்பு சீக்கிரம் வரப்போகுது. பூத் கமிட்டியில் யாரெல்லாம் போடலாம் என்ற லிஸ்ட் உடனடியாகக் கொடுங்க... ' என்று சொல்லியிருக்கிறார். விறுவிறுவென வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். கரூர் மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் தனது தொகுதியில் உள்ள முக்கிய நபர்களின் பட்டியலை தலைமைக்கு அனுப்பிவிட்டாராம்!" மெசேஜை நாம் படித்துவிட்டு நிமிர்ந்தபோது ஆஃப்லைனில் போனது.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: