வெள்ளி, 7 அக்டோபர், 2016

நக்கீரன் : நீடிக்கும் அப்போலோ மர்மங்கள்!

ஒவ்வொரு நாளும் அப்பல்லோ அறிக்கை வெளியானாலும் ஜெ.வின்
உடல்நிலை என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஜெ.வுக்கு என்ன வியாதி என்பதை பற்றி ஒரு அறிக்கை தருமாறு சென்னை உயர்நீதிமன்றமே கேட்டு உத்தரவு பிறப்பித் துள்ளது. இந்நிலையில் நக்கீரன் டீம் ஜெ.வுக்கு என்ன உடல்நிலை பாதிப்பு, அதற்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்பதை அப்பல்லோ மருத்துவமனையில் பராமரிக்கப் படும் ஆவணங்கள் குறித்து, குறிப்பெடுத்து முழு மெடிக்கல் ஹிஸ்டரியை வாசகர்களுக்கு தருகிறது.
 முதல்நாள் முதலே சுவாசக் கருவி! அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ஜெ.வின் வார்டு MDCCU என குறிப்பிடப்படுகிறது. அதில் ஜெ. படுத்திருக்கும் பெட்டின் எண்தான் 2008. (இது வார்டின் எண் அல்ல) இந்த பெட் எம்.ஜி.ஆர். படுத்திருந்த பெட் என சொல்கிறார்கள் அப்பல்லோ டாக்டர்கள். ஜெ. அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நுரையீரலிலும் சிறுநீர்ப் பாதையிலும் நோய் தொற்று இருப்பதாக கண்டுபிடித்த டாக்டர்கள், அவரது இதயத்துடிப்பு மிக மிகக் குறைவாக (40 முதல்-60 வரை) இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு கழுத்து பகுதி மூலம் (Inotropes) எனப் படும் இதயத்தை வலுப்படுத்தும் மருந்துகளை செலுத்துகிறார்கள். இதயத்தை வேகமாக இயங்கச் செய்யும் PACE MAKER கருவிகளை பொருத்துகிறார்கள்.
மூச்சுவிட சிரமப்பட்டிருந்த ஜெ.வுக்கு எளிய முறையில் செயற்கை சுவாசம் அளிக்கும் கருவியும் பொருத்தப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட முதல் நாளே சிக்கலான நிலையில் இருந்த ஜெ.வை அவசர சிகிச்சைக்கு உட்படுத்திய அப்பல்லோ மருத்துவர்கள் டீம் தொடர்ந்து நடத்திய சோதனைகளில் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக மிக அதிகமாக இருந்ததை கண்டுபிடித்ததோடு, நுரையீரலில் நிமோனியா என்கிற பாக்டீரியா தொற்று காணப்படுவதையும் கண்டுபிடித்தது. அந்த நோய்க்கான படிமங்கள் நிழலாக ஜெ.வின் நுரையீரலில் தெரிகிறது என மெடிக்கல் ரிக்கார்டுகளில் குறிப்பிட்டுள்ளது. அப்பல்லோ டாக்டர்கள் முதலில் இதயத்திற்கு அளிக்கப்பட்ட பேஸ்மேக்கர் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளுடன் ஜெ.வுக்கு சிகிச்சைகளை தொடரும் போது... கல்லீரலும் கிட்னியும் தொடர் சிகிச்சையால் நார்மலாக இருப்பதை தெரிவித்து விட்டு ஜெ.வின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்புகிறார்கள். பரிசோதனை முடிவுகள்! அந்த சோதனைகளில் ஜெ.வின் ரத்தத்தில் நோய் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன என கண்டுபிடிக்கிறார்கள்.

சாதாரணமாக 8,000 முதல் 11,000 வரை இருக்கும் ரத்த வெள்ளை அணுக்கள் ஜெ.வின் ரத்தத்தில் 17,000 வரை இருந்ததை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள் மருந்துகள் மூலம் நோய் தொற்றை கட்டுப்படுத்தி வெள்ளை ரத்த அணுக் களை 11,000 அளவிற்கு கொண்டு வருகிறார்கள். நோய் தொற்றை கட்டுப்படுத்தினாலும் நிமோனியா வால் பாதிக்கப்பட்ட ஜெ.வின் நுரையீரலின் இரண்டு பகுதிகளிலும் பாக்டீரியா பரவி தேன்கூடு போல உள்ள நுரையீரலை மேலும் தடிமனாக்கி யிருப்பது அடுத்த சோதனையில் மருத்துவர்களுக்கு தெரிய வருகிறது. ஆனால் இந்த நோய் தொற்று வயிற்று பகுதிக்கு பரவவில்லை என்பதுடன் இதயம், கிட்னி, கல்லீரல் ஆகியவை நன்றாக இருக்கிறது என கண்டுபிடிக்கிறார்கள்.

டாப்ளர் டெஸ்ட் மூலம் இதயம், நுரையீரல் பகுதிகளில் இயங்கும் ரத்தக் குழாய்கள் நன்றாக இருப்பதை பார்த்து ஆறுத லடைகிறார்கள். ஆனாலும் ஜெ. மூச்சு விடுவதில் மிகவும் சிரமப்படுகிறார். அதனால் அவருக்கு சிறிய அளவிலான செயற்கை சுவாசமும் வலி நிவாரணி மருந்துகளும் அளிக்கப்படுகின்றன. அந்த சிறிய அளவிலான செயற்கை சுவாசக் கருவியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருந்தது. அதே சமயம் இதயத்திற்கு வலு சேர்க்கும் மருந்துகளை யும் கழுத்து நரம்புகள் மூலமாக மருத்துவர்கள் செலுத்துகிறார்கள்.

Meropenem, Targocid, Doxcy ஆகிய மருந்துகள் செலுத்தியபின் மேற்கொள்ளப் பட்ட சோதனைகளில் இதயம், கல்லீரல், கிட்னி ஆகியவை நன்றாக இருக்கிறது. ஆனால் நுரையீரல் தொற்று அதிகமாக இருக்கிறது. அவர் மூச்சுவிட சிரமப்படுகிறார் என குறிப்பிடுகிறார்கள். லண்டன் டாக்டரால் ஏற்பட்ட மாற்றம்! மூச்சுத் திணறலின் அதிகரிப்புதான் ஜெ.வுக்கு Invasive Oxygen Supply எனப்படும் வென்டி லேட்டர் கருவியை பொருத்தும் நிலைக்கு கொண்டு சென்றது. ஜெ.வின் நுரையீரலை நேரடி யாக செயற்கை சுவாசம் அளிக்கும் கருவியுடன் பொருத்திய டாக்டர்களை, அவரது ரத்தத்தில் படர்ந்திருக்கும் நோய் கிருமிகளை சுத்தம் செய்ய ECMO என்கிற செயற்கை ரத்த சுத்திகரிப்பு கருவியை உபயோகிக்கலாம் என்ற விவாதத்திற்கும் கொண்டு செல்கிறது.

இந்த நேரத்தில்தான் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல் வருகிறார். அவர், அப்பல்லோ மருத்துவர்கள் செய்த சிகிச்சை பற்றி ஆய்வு செய்கிறார். நுரையீரலில் ஏற்பட்டுள்ள நிமோனியா நோய் தொற்று ACUTE RESPIRATORY DISTRESS SYNDROME என்கிற பெரியளவிலான நுரையீரல் தொற்றாக மாறி சிக்கலை ஏற்படுத்தியிருப்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்றவாறு நோய் எதிர்ப்பு மருந்துகளை அளிக்கச் சொல்கிறார். அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் தங்கி அளித்த சிகிச்சையால் ஜெ.வின் உடல்நிலை முன்னேறியதாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் கூறுகிறார்கள்.

சிகிச்சையளிக்கும் டீமில் இருக்கும் டாக்டர் கிரிநாத் என்பவர் "இந்த முன்னேற்றம் முழுமையானதல்ல, தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்க வேண்டும்' என்கிறார். சசிகலா நெருக்கடி! டாக்டர்கள் டிஸ்மிஸ்? ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட உடனே ஜெ.வுக்கு எந்தவிதமான தொற்று நோய்கள் வந்துள்ளன. அதற்கு என்னவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்பதை தெரிவிக்க அப்பல்லோ டாக்டர்கள் தயாராக இருந்தார்கள். இதை தங்களது மருத்துவமனை ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால், ஜெ.வுக்கு வயிற்றோட்டம் மற்றும் ஜுரம் என அறிக்கை அளிக்க வைத்தது சசிகலா தரப்புதான். ஜெ.வுக்கு அளிக்கப்படும் அனைத்து உயிர் காக்கும் அறிக்கைகளுக்கும் உறவினர் என்கிற இடத்தில் கையெழுத்திடும் சசிகலா சொல்வதை அப்பல்லோவால் மீற முடிய வில்லை'' என வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள்.

அத்துடன் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சொன்ன புகார்களின் அடிப்படையில் 20 டாக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. இதுபற்றி கேட்டபோது, ""20 நர்சுகளை முழுமையான பணிநீக்கத்திற்கும் 11 டாக்டர்களை தற்காலிக பணிநீக்கத்திற்கும் மருத்துவமனை நிர்வாகம் உட்படுத்தியது'' என வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள்.

ஜெ.வை ஒரு ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கே குறைந்த பட்சம் 3 மணி நேரம் ஆகும் நிலையில், ஜெ.வை சிறுதாவூர் பங்களாவில் மருத்துவ கருவிகளுடன் தங்க வைத்து வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா என சசிகலாவின் உறவினர்கள் கேட்டதற்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல் புன்சிரிப்புடன் சொன்ன பதிலை மருத்துவமனை ஆவணங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

சிறுதாவூர்-சிங்கப்பூர்! அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக் காக வேண்டுமென்றால் ஜெ.வை சிறுதாவூருக்கோ, சிங்கப்பூருக்கோ, அமெரிக்காவுக்கோ கொண்டு செல்லலாம். மருத்துவ காரணங்களை சொல்லி அவரை கொண்டு செல்ல முடியாது. அவரது உடல்நிலையும் இப்போது அதற்கு ஒத்துழைக்கும் சூழலில் இல்லை எனத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

இதன்பிறகுதான், நீண்ட ஆலோசனைகள் நடந்து, ""சசிகலாவின் ஒப்புதலுடன் ஜெ.விற்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என அப்பல்லோ வின் மூன்றாவது மருத்துவ அறிக்கையிலும்... ஜெ. மூச்சு விடுவதற்கு உபயோகிக்கும் கருவியின் உதவியோடு சிகிச்சை பெறுகிறார் என நான்காவது மருத்துவ அறிக்கையையும் வெளியிட்டோம். நான்காவது மருத்துவ அறிக்கைதான் ஜெ.வின் உண்மையான உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கை -

எங்களை காப்பாற்றிய அறிக்கை'' என பெருமூச்சு விடுகிறார்கள் டாக்டர்கள். 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஜெ.வுக்கு பொருத்தியிருக்கும் Invasive Oxygen கருவியை நீக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டார்கள். ஜெ.வுக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரில் செலுத் தப்படும் ஆக்சிஜன் அளவை 100 என்கிற நிலையிலிருந்து படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்தனர். 30 என்கிற அளவுக்கு வரும் வரை ஜெ. உடலில் செலுத்தப்படும் செயற்கை சுவாசத்தை அவர் சமாளித்து வந்தார்.

 30-க்கு மேல் குறைப்பதை ஜெ.வின் உடல் ஏற்கவில்லை. மூச்சு திணறல் மறுபடியும் அதிகமாகிவிட்டது. அதனால் ஜெ.வை செயற்கை சுவாசத் திலிருந்து விடுவிப்பதை விட்டு விட்டதாக ஃபைல்களில் எழுதி வைத்துள்ளார்கள்.
டாக்டர்களிடம் ஜெ.வின் தற்போதைய உடல்நிலை குறித்து கேட்டோம். அப்பல்லோவில் தொடரும் சிகிச்சை! ""மருத்துவமனைக்கு முதல்வர் வந்த சில நாட்களி லேயே முழுமையாக செயற்கை சுவாசக் கருவிகளின் கீழ் வைக்கப்பட்டார். மூச்சுக்குழாயையும் நுரையீரலை யும் இணைக்கும் இந்த வென்டிலேட்டர் கடுமை யான வலியை உருவாக்கும். அதை அவர் உணராமல் இருக்க மயக்க மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது.

ஒரு மனிதர் செயற்கை சுவாசக் கருவியில் இருக்கிறார் என்றாலே அதனை கிரிடிக்கல் என்றுதான் மருத்துவத்துறையில் சொல்வோம்.

முதல்வர் விஷயத்தில் மருத்துவத்தையும் அறிவிப்பை யும் கவனமாகக் கையாள்கிறோம். எங்களின் முழு நேரப் பணியும் முதல்வரைக் காப்பதுதான்'' என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

இதுபற்றி ஜெ.வின் பர்சனல் டாக்டரான டாக்டர் சிவக்குமாரிடம் கேட்டபோது ""ஜெ. நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார்'' எனவும் தெரிவித்தார். ஜெ.வின் உடல்நிலை பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பொன்னையன், ""ஜெ. பூரண நலத்துடன் உள்ளார்'' என தெரிவித்தார். -தாமோதரன் பிரகாஷ் படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக், செண்பகபாண்டியன்  nakkeeran,in

கருத்துகள் இல்லை: