புதன், 5 அக்டோபர், 2016

'ம்ம்ம்... நல்லா இருக்காங்களாம்...' அம்மா பற்றி கேட்டதற்கு பன்னீரு பதில்!

மின்னம்பலம்,காம் :
"முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி தினமும் ஒரு வதந்தி வருவதும் அதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் 'மாண்புமிகு தமிழக முதலமைச்சர், உடல்நிலை தேறி வருகிறார். அதே சிகிச்சை தொடரப்படுகிறது. மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பில் மாண்புமிகு முதலமைச்சர் இருக்கிறார். சிகிச்சைக்காக மேலும் மருத்துவமனையில் தங்கியிருக்க முதலமைச்சர் அறிவுறுத்தப்படுகிறார்' என்று, ஒரு பிரஸ் ரிலீஸ் வெளியிடுவதும் வழக்கமாகிவிட்டது.
முதல்வர் எப்படி இருக்கிறார் என்பது சசிகலா, இளவரசி தவிர வேறு யாருக்கும் தெரியாத ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். இரண்டாவது தளம் வரை அனுமதிக்கப்படும் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ, தம்பிதுரைக்கோகூட முதல்வர் இருக்கும் அறைப்பக்கம் செல்ல அனுமதி இல்லை. அங்குள்ள ஏதாவது ஒரு அறையில்தான் முதல்வர் இருப்பார் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கும். எந்த அறையில் முதல்வர் இருக்கிறார் என்பதைக் கேட்கும் தைரியம்கூட அவர்களுக்கு இல்லை.

சசிகலா ஓய்வெடுக்கும் ஷூட் ரூம் ரிசப்சனுக்கு மட்டுமே அவர்கள் இருவரும் போகலாம். வரலாம். அதுவும் காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே.
இன்று காலை ஷீலா பாலகிருஷ்ணன் சீக்கிரமே மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அதன்பிறகு அமைச்சர்கள் அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர். சரியாக 11.25 மணிக்கு ஓ.பி.எஸ். வந்தார். அவரும் மற்ற அமைச்சருடன் தரை தளத்தில் காத்திருந்தார். சற்று நேரத்துக்குப்பிறகு மேலேயிருந்து வந்த டாக்டர் சிவகுமார் அதாவது, சசிகலா உறவினர் 'உங்களை சின்னம்மா வரச் சொல்றாங்க...' என சொல்லிவிட்டுப் போனார். ஓ.பி.எஸ். அவர் பின்னாலேயே பவ்யமாகப் போனார். அந்த நேரத்தில் டி.ஜி.பி. ராஜேந்திரன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். ஆனால் அதிகாரிகள் யாரையும் அழைக்கவில்லை. பன்னீர் மட்டுமே இரண்டாவது தளத்துக்குப் போனார். 12 மணி அளவில் மேலேபோன ஓ.பி.எஸ். 3.25 மணிக்குத்தான் கீழே இறங்கி வந்திருக்கிறார். ரொம்பவே இறுகிய முகத்துடன் ஓ.பி.எஸ் இருந்தார் என்று சொல்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் 3 மணி நேரத்துக்கும் மேல் ஓ.பி.எஸ்ஸுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அந்த ஆலோசனையின்போது இளவரசி, டாக்டர் சிவகுமார், விவேக் ஆகியோர் மட்டும் உடன் இருந்தார்களாம். என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் மூச் விடவில்லை. கீழே இறங்கி வந்த பன்னீரிடம் மற்ற அமைச்சர்கள் ஆர்வத்துடன் வந்து, ' அம்மா எப்படி இருக்காங்க?' என்று கேட்டார்களாம். 'ம்ம்ம்... நல்லா இருக்காங்களாம்...' என்று, எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் பதில் சொல்லிவிட்டு அமைதியாக இருந்திருக்கிறார். அடுத்தடுத்து, சிலர் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அத்தனை கேள்விக்கும் மௌனமாக மட்டுமே இருந்தாராம் ஓ.பி.எஸ்.
டி.ஜி.பி.ராஜேந்திரனும், ஷீலா பாலகிருஷ்ணனும் அப்போது அங்கேதான் இருந்தார்களாம். அவர்களும் ஓ.பி.எஸ்.ஸிடம் ஏதோ கேட்டார்களாம். அதற்கும் மழுப்பலான பதிலையே சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம் பன்னீர்." என்பதுதான் அந்த போஸ்ட்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து கமெண்ட்டில் கேள்வி ஒன்றையும் போட்டது.

'பன்னீர் மௌனத்துக்கு என்ன காரணம்?'
பதிலை ரிப்ளைசில் போட்டது ஃபேஸ்புக். "உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடந்திருக்கும் என்று சிலர் சொன்னார்கள். அதற்கு பன்னீரிடம் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. வேறு ஏதோ அவரிடம் பேசி இருக்கிறார்கள். அதனால்தான் அவர் எதும் பேசாமல் மௌனமாக கிளம்பிவிட்டார் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஏற்கனவே அப்பல்லோவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் தவிக்கிறார்கள். இதில் பன்னீரின் மௌனம் மற்ற அமைச்சர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது." என்பதுதான் அந்த பதில்.
"எல்லா சந்தேகங்களுக்கும் ஜெயலலிதா எழுந்துதான் பதில் சொல்ல வேண்டும்" என்று அதற்கும் ரிப்ளை போட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: