திங்கள், 3 அக்டோபர், 2016

துணை முதல்வர் கோரிக்கை! ஜெயலலிதா உடல் நிலை.. சட்டம் ஒழுங்கு .. காவிரி விவகாரம் ...

கடந்த 22ஆம் தேதி உடல்நலம் குன்றி மருத்துவமனையில்   
அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 12 நாட்கள் ஆகிவிட்டநிலையில், தமிழக அரசு நிர்வாகம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டநிலையில் சட்டமன்றத்தை கூட்டச் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். இந்நிலையில், சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியோ நீதிமன்றம் சென்றுள்ளார். அவர், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் முதல்வரின் உடல்நிலை பற்றிய உண்மை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் எனவும், முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்யவேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அம்சங்களை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள இந்த மனுமீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள் .... இப்போது மருத்துவமனையையே தலைமைச்செயலகமாக மாறிவிட்டது ...  தத்துவம் :உன் நோக்கம் எதுவோ அதுவே உன்னை நோக்கி வரும்... சிம்பிளாக சொன்னா செஞ்ச வினை? 

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு முடியும்நிலையில், நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், உரிய பாதுகாப்புடன் மக்கள் வாக்களிக்கும் வகையில் இந்த தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையமும், ஆளும்கட்சியும் மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் நிரந்தர கவர்னர் இல்லாதநிலையிலும், ஒரு மருத்துவமனையில் பனிரெண்டு நாட்களுக்குமேல் அனுமதிக்கப்பட்டு, செயல்படாத முதல்வரைக் கொண்டதாகவும் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி உரிய முடிவுகளை எடுக்கமுடியாத அரசாக இந்த அரசு உள்ளது. எனவே, முதல்வரின் உடல்நிலை முழுவதும் சீராகும் வரை அந்தப் பொறுப்புக்கு வேறு ஒரு நபரை இந்த அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவமனையில் நடக்கும் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும்வண்ணம் முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்தக் கருத்தை வலியுறுத்தி அனைத்து எதிர்க்கட்சியினர் கேட்டும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல இந்த அரசு செயல்படுவது முறையல்ல. நீங்கள் எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது ஆட்சியில் இல்லாதவராகவோ இருந்தால் இதுபற்றி யாரும் பேசவேண்டிய அவசியமில்லை. ஆளும் முதல்வர், வாக்களித்த மக்களுக்கு உங்கள் விளக்கத்தைத் தரவேண்டியது மிக முக்கியமாகும்.
தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள். இப்போது மருத்துவமனையையே தலைமைச்செயலகமாக மாறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசு தொய்வில்லாமல் செயல்படுவதைப்போல் மக்களை நம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதராகப் பிறந்த அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல்போவதும், பின் குணமடைவதும் இயற்கையான ஒன்று. எனவே, மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் கருத்தில் கொண்டு உரிய அறிவிப்பை இந்த அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்.
லண்டனில் இருந்துவந்த மருத்துவர் மேலும் சிலநாள் ஜெயலலிதா ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்வரின் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனைதான் அதிகாரபூர்வ அறிக்கையைத் தருகிறது. கவர்னர் வித்யாசாகர் தந்த அறிவிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. உரியவர்கள்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும், உண்மை நிலையை ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டால் தொடர்ந்து மக்களிடையே பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
முதல்வர் முழுக்க முழுக்க அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் செயல்படப்போகும் நிலை பற்றி கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தின் ஆளுநராக இருப்பவரும் பொறுப்பு ஆளுநர்தான் என்னும் நிலையில் அரசு நிர்வாகத்தை நடத்திச் செல்வது தொடர்பாக கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.   மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: