தேவர்
பிலிம்சின் கிளை நிறுவனமான தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்து நான் எழுதி
‘குணசித்திர நடிகை’ – நற்குணமிக்க நடிகை சவுகார் ஜானகி – ‘புன்னகை அரசி’
கே.ஆர்.விஜயா நடித்த ‘‘அக்கா தங்கை’’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
ஏழையாக இருந்து, அதிர்ஷ்டவசமாக ஒரு செல்வந்த நீதிபதிக்கு மனைவியாக
வாழ்க்கைப்பட்ட அக்கா முதன் முதலாக தன் கணவரின் கண்கவர் மாளிகையில் வலது
கால் எடுத்து வைத்து உள்ளே வருகிறாள். அந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு
முதல் நாள் நான் சவுகார்ஜானகியிடம் கூறினேன்:–நான்:– அம்மா! நாளைக்கு எடுக்கப்போறது முக்கியமான சீன்! இப்போ நீங்க கூலி வேலை செஞ்சிப் பிழைப்பு நடத்தின அந்த ஏழை அக்கா இல்லே. ஒரு பெரிய நீதிபதிக்கு வாழ்க்கைப்பட்ட கோடீசுவரி!
அதனால முதல் முதல்லே உங்களுக்குச் சொந்தமான அந்த மாளிகைக்குள்ளே வரும்போது ‘சர்வாலங்கார பூஷிதையா’ அஷ்ட லட்சுமிகளும் ஒண்ணாச் சேர்ந்து உருவான மகாலட்சுமி மாதிரி ஆடை ஆபரணங்கள் ஜொலிக்க ‘மேக்–அப்’ பண்ணிக்கிட்டு வரணும். அதுக்குத் தகுந்த மாதிரி...
சவுகார்:– (குறுக்கிட்டு) புரிஞ்சிக்கிட்டேன். கம்பெனியில கொடுக்குற அந்த ‘கவரிங்’ நகை எல்லாம் வேண்டாம். என்கிட்டே இருக்கிற சொந்த ஒரிஜினல் தங்க வைர நகைகளை... என்பதற்குள் நான் குறுக்கிட்டு...
நான்:– வெரிகுட்! ஒண்ணு ரெண்டு இல்லே... உங்ககிட்டே இருக்கிற அவ்வளவு நகைங்களையும் அள்ளிப் போட்டுக்கிட்டு வந்து அசத்துங்க. ‘மாடர்ன் கெட்அப்’ வேண்டாம். புராதன மேக்கப்ல வாங்க.
சவுகார்:– (சிரித்தபடி) பாருங்க எப்படி வர்றேன்னு...!
மறுநாள் காலை! படப்பிடிப்புத் தளத்திற்குள் பளபளவென்று பவுன் நிற மேனியில் தங்கமும், வைரமும் ‘தகதக’வென்று மின்னி ஜொலிக்க, ஓர் அழகு தேவதை அடிமேல் அடியெடுத்து வைத்து அன்னம்போல – என் எண்ணம்போல வந்து எதிரில் நின்றார்.
அவரைக் கண்ட மாத்திரத்தில், நாற்காலியில் அமர்ந்திருந்த நான் என்னையறியாமலே எழுந்து நின்று அவரை ஏற இறங்கப் பார்த்தேன்.
சந்தேகமே இல்லை. என்னை பிரமிக்கச் செய்த அந்தச் சவுந்தர்ய லட்சுமி, சத்தியமாக சவுகார்ஜானகி – ஜானகியேதான்!
அப்பொழுது என் கையில் தேங்காயும் கற்பூரக்கட்டியும் மட்டும் இருந்திருந்தால், பொருத்தி ஆராதனை செய்திருப்பேன். சவுகார் ஜானகி பிறக்கும்போதே ‘ஈஸ்ட்மேன் கலர்’ அப்பா அம்மாவுக்குப் பிறந்ததால், இவரும் அதே ‘ஈஸ்ட்மேன் கலர்’ செந்நிறமேனி கொண்டவராவார்.
அந்தப் பொன்னிற மேனியில் சொல்லி வைத்தாற்போல ‘நல்லி’ பட்டுப்புடவை உடுத்தி வைர – தங்க நகைகளை வாரிப்போட்டுக்கொண்டு வந்திருந்தார். அவை அனைத்திலும் என் கண்களைக் கவர்ந்தது அவர் கழுத்தில் அணிந்து மார்பில் தொங்கிய அந்த அடர்ந்த காசு மாலை! அதை என் கை விரல்கள் கொண்டு மேலே எடுத்து...
நான்:– அம்மா! நீங்க போட்டிருக்கிற இவ்வளவு நகைங்கள்ளேயும் இந்தக் காசு மாலை ஒண்ணுதான் உங்களை ஒரேயடியா தூக்குது. ரொம்ப அழகா இருக்கு!
சவுகார்:– (புன்னகையுடன்) இது ஏற்கனவே ஆர்டர் கொடுத்து செய்யச்சொல்லி வச்சிருந்தேன். இதை நான் அடிக்கடி போடுறது இல்லை. எப்போவாவதுதான் போட்டுக்குவேன். நேத்து நீங்க சொன்னதுனால இன்னிக்கு இதை எடுத்துப்போட்டுக்கிட்டேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் படப்பிடிப்பு ஆரம்பமாகியது.
அக்காலத்தில் பிரபல கர்நாடகப் பாடகியாக விளங்கியவரும், காலஞ்சென்ற நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான எம்.எல்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட எம்.எல்.வசந்தகுமாரியின் ஒன்றுவிட்ட சகோதரரான ஹெச்.வேணு என்பவர்தான் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
அவர் மின் விளக்கின் ஒளியை சவுகார் ஜானகியின் மீது பாய்ச்சியதுதான் தாமதம். சவுகார் ஜானகி மறைந்துபோய் – அவர் நின்ற அந்த இடத்தில் தேவலோகத்து நடன மாதருள் ஒருவரான அழகி ‘திலோத்தமா’ தோன்றி நின்று மின்னொளி கலந்த தன்னொளியை அரங்கம் எங்கும் பரவச் செய்தாள்.
இந்தக் கண்கவர் காட்சியை இன்றைக்கும் ‘அக்கா தங்கை’ படத்தில் கண்டு களிக்கலாம்.
எனது இனிய சினிமா வாழ்க்கையில் நான் சந்தித்து அன்பு பாராட்டிய பல ‘நாயகி நட்சத்திரங்களில்’ – நான் அறிந்தமட்டில் – ஒரே குணமும் மனமும் கொள்கையும் கொண்டு என் இதயத்தில் இடம் பெற்ற நடிகைகள் இருவர் மட்டுமே.
ஒருவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி! இன்னொருவர் ‘குணசித்திர நட்சத்திரம்’ சவுகார்ஜானகி!
அதே குணம்! அதே மனம்! அதே கொடைத்தன்மை! அதே முன்கோபம்! ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால் அதே ‘சென்டிமென்ட்ஸ்’, அதே ‘சின்ஸிரிட்டி’, அதே ‘சென்ஸிடிவ்னஸ்’, அதே ‘சேரிட்டி!’
என் சினிமா அனுபவத்தில் வேறு எவரிடமும் இந்த இன, மன, குண ஒற்றுமையை நான் கண்டறிந்ததில்லை.
குருவாயூரில் நடைபெறும் ‘துலாபாரம்’ போல ஒரே தராசின் இரு தட்டுகளில் ஒன்றில் சாவித்திரியையும், இன்னொன்றில் சவுகார் ஜானகியையும் அமர்த்தி எடை போட்டால், தராசின் நடுமுள் அங்கும் இங்கும் அசையாமல் அப்படியே நிலையாக நிற்கும். அதனால்தானோ என்னவோ அந்த இருவருமே ஜாதி, மத, இன, வர்க்க வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அன்பு என்ற தேனாலும், பாசம் என்ற பாலாலும் என் இதயத்தை ‘அபிஷேகம்’ செய்து என்னை அகமகிழ வைத்தார்கள் என்று நான் சொன்னால் அது சற்றும் மிகை அல்ல.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 1971–ம் ஆண்டில் சாவித்திரியும், சவுகார் ஜானகியும் சேர்ந்து கலந்து பேசி முடிவு செய்ததுபோல – இருவருமே சொந்தப்படம் எடுக்கத் தொடங்கி, அவர்கள் இருவருடைய இரண்டு படங்களுக்குமே நான் வசனம் எழுதும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.
ஒன்று சாவித்திரி பிக்சர்ஸ் ‘‘பிராப்தம்.’’ மற்றொன்று சவுகார் ஜானகியின் பெயரிலான எஸ்.ஜே. பிலிம்ஸ் ‘‘ரங்க ராட்டினம்.’’
14.4.1971 தமிழ்ப்புத்தாண்டு நாளில் ‘‘பிராப்தம்’’ ரிலீசானது. அதே ஆண்டு 24.12.1971 கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் ‘‘ரங்கராட்டினம்’’ வெளியிடப்பட்டது. இரண்டு படங்களுமே சுமாராகத்தான் போனது. சாவித்திரியின் ‘‘பிராப்தம்’’ பற்றி முன் அத்தியாயத்தில் எழுதியிருக்கிறேன். ‘‘ரங்கராட்டினம்’’ எஸ்.ஜே.பிலிம்ஸின் இரண்டாவது தயாரிப்பு. முதல் படம் கே.பாலசந்தர் இயக்கி, ஜெமினிகணேசன், ரவிச்சந்திரனுடன் சவுகார் ஜானகி தாயாகவும், மகளாகவும் நடித்த ‘‘காவியத் தலைவி!’’ அது நன்றாக ஓடியது.
‘‘ரங்கராட்டினம்’’ படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கி அழகேசன் என்பவர் கதையும், பிரபல தெலுங்கு எழுத்தாளரான ‘ஆச்சார்ய ஆத்ரேயா’ என்பவர் திரைக்கதையும் எழுதி அதற்கு நான் வசனம் எழுதினேன். அவர் ஸ்கிரிப்ட் விஷயத்தில் சவுகாருக்கும் எனக்கும் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அத்துடன்கூட இந்தப்படத்திலும் ஜெமினிகணேசன், ரவிச்சந்திரனுடன் சவுகார்ஜானகி இரட்டை வேஷங்களில் நடித்தார்.
கேட்காமலேயே காசோலைகளாக (செக்) கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த ஜானகியிடம் ஏற்கனவே கைமாற்றும், கடனும் வாங்கியிருந்தவர்கள் (அவர்கள் பெயரைச் சொல்ல நான் விரும்பவில்லை. இப்பொழுது அவர்கள் இல்லை) தயாரிப்பாளரான ஜானகிக்கு உறுதுணையாக இருந்து உண்மையான உள்ளத்துடன் பணிபுரிந்து – இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்ற கடமை உணர்ச்சி இல்லாமல் பட்ட கடனைத் தீர்க்கவேண்டும் என்பதற்காக சும்மா கடனுக்குப் பணியாற்றினார்கள் என்பதை ஆரம்பத்திலேயே நான் அறிந்து கொண்டேன். ஆனாலும் இதை சவுகார் ஜானகியிடம் கூறமுடியாத சங்கடமான நிலையில் நான் இருந்தேன்.
கடனுக்குப் பணியாற்றியவர்களைக் காட்டிக்கொடுக்க எனக்கு மனம் வரவில்லை. சாவித்திரியைப்போலவே, சவுகார் ஜானகியும் தன் சொந்தப்பணத்தைக்கொண்டு ஒரே மூச்சில் தினமும் படப்பிடிப்பு நடத்தி, இந்த ரங்கராட்டினத்தைச் சுற்றிக்கொண்டிருந்தார்.
இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததற்கு இன்னொரு முக்கியமான காரணம். இதே கதை அமைப்பைக்கொண்டு இதே ஜெமினிகணேசனுடன் தேவிகா நடித்து அவருடைய கணவர் எஸ்.எஸ்.தேவதாஸ் இயக்கிய ‘‘வெகுளிப்பெண்’’ இதே ஆண்டில் 5 மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்றது. (இந்தப்படம் நூறு நாட்கள் ஓடி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது)
‘‘வெகுளிப்பெண்’’ படம் வெளிவந்து ஓடிக்கொண்டிருந்த அந்த இடைக்காலத்தில் கூட அந்தச் சாயல் வருவதைத் தவிர்த்து திரைக்கதையிலும், படத்திலும் தேவையான திருத்தங்களைச் செய்து சவுகாரின் ரங்கராட்டினத்தை வெற்றி பெறச் செய்வதில் ஒருவரும் உற்சாகமும், ஊக்கமும் செலுத்தவில்லை. ஆனாலும் ஜானகியம்மாவின் காசோலைப் புத்தகங்கள் (செக் புக்ஸ்) மட்டும் காலியாகிக் கொண்டிருந்தன.
படத்தின் இறுதி உச்சகட்டக் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் அதைக் கவனித்துக்கொண்டு ஒருபுறம் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். ஜானகியம்மா கையில் ஒரு கருப்புப்பெட்டியுடன் (பிரீப் கேஸ்) வந்து என் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தயாரிப்பு நிர்வாகியான கோபால் என்பவர் ஒரு லிஸ்டைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துவிட்டு அருகில் நின்று கொண்டார்.
அம்மா பெட்டியைத் திறந்து உள்ளே இருந்து காசோலைப் புத்தகத்தை எடுத்தார். பெட்டியை மூடினார். அதன் மீது காசோலைப் புத்தகத்தை வைத்துக்கொண்டார். பேனாவை எடுத்தார். மூடியைத் திறந்தார். கோபால் கொடுத்த – யார் யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்ற அந்தப் பட்டியலைப்பார்த்துப் பார்த்து செக்குகளை எழுதிக் கையெழுத்திட்டு தயாரிப்பு நிர்வாகியிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
நான் அதை வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். காசோலைகள் எழுதிக்கொடுக்கும் அந்தக் காரியத்தில் தயாரிப்பாளரான சவுகார் ஜானகி ஓர் ‘இயந்திரகதி’யில் இயங்கிக்கொண்டிருந்ததைக் கவனித்த எனக்கு சாவித்திரியின் நினைவு வந்தது. அவரும் இதையேதான் – இப்படியேதான் செய்வார்! செய்தார்!
எழுதிக்கொண்டே இருந்தவர் என்னிடம் ஒரு காசோலையை நீட்டி ‘‘இது உங்களுக்கு’’ என்றார். அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு இரண்டாக மடித்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.
சவுகார்:– என்ன வாங்கி அப்படியே பாக்கெட்டுல வச்சிட்டிங்க? பேலன்ஸ் அமவுண்டு சரியா இருக்கான்னு பார்க்கவேண்டாமா?
நான்:– வேண்டியதில்லைம்மா. அது சரியாகவே இருக்கும். புன்னகையுடன் இன்னொரு செக் எழுதி அதையும் என்னிடம் நீட்டினார். சவுகார் ஜானகியும் சாவித்திரியைப் போலவே ‘டென்ஷன் பார்ட்டி’ என்பதால் ஏதோ ஞாபக மறதியாக இன்னொரு ‘செக்’ கொடுக்கிறார் போலிருக்கிறது என்று எண்ணி:–
நான்:– அம்மா! இப்போதானே எனக்கு ‘செக்’ கொடுத்திங்க? நீங்க ஏதோ டென்ஷனா இருக்கீங்க போலிருக்கு...
சவுகார்:– (ஆங்கிலத்தில்) நோ ஐயேம் ஆல்ரைட்! தட் ஈஸ் யுவர் பேலன்ஸ் – அண்ட் திஸ் ஈஸ் பார் யுவர் கயிண்ட் கோ – ஆபரேஷன்! பிளீஸ் ஸி திஸ் செக்!
(‘‘இல்லே – நான் நல்லாத்தான் இருக்கேன். அது உங்க பாக்கித்தொகை. இது உங்க அன்பான ஒத்துழைப்புக்காக. தயவு செய்து இந்த செக்கைப் பாருங்க)
பார்த்தேன்! திகைத்தேன்! மலைத்தேன்! ஒன்றல்ல – இரண்டல்ல, பத்தாயிரம் ரூபாய் அந்த செக்கில் எழுதப்பட்டிருந்தது! அது உதவித்தொகை அல்ல – உபரித்தொகை. அதாவது ‘போனஸ்’ போல! அந்தப் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள காசு மாலைக்குப் பதிலாக இன்று ரொக்கமாகக் கொடுத்துவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டு...
நான்:– தேங்யூம்மா. கொடுத்ததைக் கொடுத்தீங்க. கேஷா கொடுத்திருக்கக்கூடாதா?
சவுகார்:– கேஷா கொடுத்தா அதை என்ன செய்வீங்க?
நான்:– நீங்க அன்பளிப்பா கொடுத்திங்கன்னு சொல்லி என் மிஸஸ்கிட்டே கொடுப்பேன். அவுங்க எதுக்காவது யூஸ் பண்ணிக்குவாங்க...
சவுகார்:– ஐயேம் ஸாரி. எங்கிட்டே கேஷ் இல்லே என்று கூறியபடி என் கையிலிருந்த அந்த இன்னொரு செக்கை வெடுக்கென்று வாங்கிக்கொண்டார் – அல்ல, பறித்துக்கொண்டார்!
இரவு வீடு திரும்பிய நான் வழக்கம்போல ஜானகியம்மா கொடுத்த பாக்கித்தொகைக்கான செக்கை மாதாவின் படத்தின் அடியில் வைத்து வணங்கினேன். வழக்கம்போல என் இல்லத்தரசி அதை எடுத்துப்பார்த்து இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அவர் கையாலேயே பீரோவில் வைத்தார்.
நான் சினிமாவுக்கு வந்த அன்று முதல் இன்று வரையில் – யார் என்ன – எதை – எவ்வளவு கொடுத்தாலும் என் கையால் பீரோவில் வைக்கமாட்டேன். கொண்டு வந்து மாதாவின் படத்தின் அடியில் வைத்துவிடுவேன். அதை என் மனைவிதான் எடுத்து அவருடைய கையால் பீரோவில் வைத்துப் பிறகு அதை என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பார்.
சவுகார்ஜானகி எனக்குக் கொடுத்த இரண்டாவது ‘செக்’ பற்றிய விஷயத்தை என் மனைவியிடமும் கூறினேன். அதற்கு அவர்:–
மனைவி:– அந்த இன்னொரு செக்குல ஜானகியம்மா எவ்வளவு ரூபாய் எழுதியிருந்தாங்க?
நான்:– பத்தாயிரம் ரூபாய்!
மனைவி:– (திகைத்து) பத்தாயிரமா? மாதாவே! ஏங்க? எதை வாங்கிக்கிறது? எதை வாங்கக்கூடாதுன்னு, இதுகூடவா உங்களுக்குத் தெரியாது? செக்கா இருந்தா என்னங்க? அக்கவுண்ட்ல போட்டு கேஷாக்கிக்கவேண்டியதுதானே? தானாக வந்த செக்கை வீணா கோட்டை விட்டுட்டிங்களே.
மறுநாள் – அன்றைக்கு படப்பிடிப்பு இல்லை. காலை 10 மணி. அழைப்பு மணியோசை கேட்டு வெளியில் சென்று பார்த்தேன். எஸ்.ஜே. பிலிம்ஸ் தயாரிப்பு நிர்வாகி (புரொடக்ஷன் மானேஜர்) கோபால், ‘‘அம்மா, இதை உங்ககிட்டே கொடுக்கச் சொன்னாங்க’’ என்று புடைப்பான ஒரு கவரை என்னிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.
திறந்து பார்த்தேன். புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய் கொண்ட ஒரு கட்டு இருந்தது. கண்களில் ஒற்றிக்கொண்டு மாதாவின் படத்தின் அடியில் வைத்துவிட்டு மனைவியைக் கூப்பிட்டு விஷயத்தை விளக்கி எடுத்துக் கொள்ளும்படி கூறினேன்.
அவ்வளவுதான். என் அகமுடையாள் முகத்தின் அகலமும் நீளமும் ஓர் அங்குலம் அதிகமாகிவிட்டது. அந்தப் பத்தாயிரம் ரூபாயில் அப்படியே பத்து சவரனில் தங்கச் சங்கிலி வாங்கிக்கொண்டார். இன்றைக்கும் அதைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.அந்த ஒரே ஒரு தங்கச் சங்கிலிக்கு மட்டும் ‘சவுகார் செயின்’ என்று நாங்கள் பெயர் வைத்திருக்கிறோம்.
‘வள்ளல் தன்மை’ என்பது வசதியை வைத்து வருவது அல்ல. அது வம்ச வழியாக வருவது. சங்க இலக்கிய காலத்தில் ஏராளமான புரவலர்கள் இருந்தும்கூட ‘வள்ளல்கள்’ என்று ஏழே ஏழு வள்ளல்களை மட்டும்தான் நமது தமிழ்ச் சமுதாயம் தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த கால நினைவுகள் கற்கண்டு கலந்த கரும்புச்சாற்றைவிட இனிப்பானவை!
நான் எழுதிய ‘சினிமா நிஜமும் நிழலும்’ என்ற நூல் வெளியீட்டு விழா 26.10.2001 அன்று நடைபெற்றது. என் அன்புச் சகோதரர் ஏவி.எம்.சரவணன் இந்த விழாவை நடத்தி வைத்தார். அந்த விழாவில் கலந்து கொண்டு ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா நூலை வெளியிட்டு, அதன் முதல் பிரதியை ‘குணச்சித்திர நட்சத்திரம்’ சவுகார் ஜானகி பெற்றுக்கொண்டு என்னைச் சிறப்பித்தனர்.
அதன் நினைவாக விழா மேடையில் ஓர் அடி உயரத்திற்கு கெட்டி வெள்ளியை உருக்கி வார்த்தெடுத்த அழகொளிமிக்க என் அன்னை வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதாவின் சொரூபத்தை (விக்ரகம்) அதன் அடியில் ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, அதன் ஒளியுடன் கூடி, எங்கள் அன்பிற்கினிய சகோதரி சவுகார்ஜானகி நான் – என் இல்லத்தரசி எங்கள் இருவருடைய கரங்களிலும் வழங்கினார்.
மாதாவே அங்கு எழுந்தருளியதைப் போன்ற மகிழ்ச்சி வெள்ளம் எங்கள் மனதில் பெருகியது. நான் மேனி சிலிர்த்து மெய் மறந்து போனேன்.
மறுநாள் காலை சரவணன் என்னை தொலைபேசியில் அழைத்து ‘‘அந்த வெள்ளி மாதா விக்ரகத்தை சவுகார் ஜானகி எங்கு வாங்கினார் என்று கேட்டுச் சொல்லுங்கள். எனக்கு அதுபோல் ஒன்று வேண்டும்’’ என்று கேட்டார்.
நான் அம்மாவை தொலைபேசியில் அழைத்து அதைப்பற்றிக் கேட்டேன்.
அதற்கு அவர் ‘‘அது வாங்கியது அல்ல – ஆர்டர் கொடுத்து செய்யச் சொன்னேன்’’ என்றார்.
இவர் வாழ்க்கையில் எந்த ஒரு பொருளையுமே வாங்குவது இல்லை. ஆர்டர் கொடுத்துச் செய்வதுதான் வழக்கம்.
சவுகார் ஜானகியை நாங்கள் ஒரு சினிமா நட்சத்திரமாக எண்ணுவது இல்லை. எங்கள் குடும்பத்தில் அவரும் ஓர் உறுப்பினர். நானும் அவரும் பிறந்தது ஒரே 1931–ம் ஆண்டு. அவரைவிட 3 மாதங்கள் 3 நாட்கள்தான் நான் மூத்தவன். என்னை ‘பிரதர்’ என்று அன்புடன் அழைப்பார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12 அவருடைய 83–வது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இப்பொழுது பெங்களூரில் ‘செட்டில்’ ஆகி இருக்கும் அவரை தொலைபேசியில் அழைத்தேன். (இதே டிசம்பர் 6–ந்தேதி சாவித்திரியின் பிறந்த நாள்)
சவுகார்:– ‘‘பிரதர்! இப்போ நான் மகாராஷ்டிரா ஷிர்டி சாய்பாபா கோவில்லேருந்து பேசுறேன். பிறந்த நாளுக்காக இங்கே வந்திருக்கேன். உங்களுக்காகவும், உங்க குடும்பத்துக்காகவும் பாபாகிட்டே பிரார்த்தனை பண்ணிக்கிறேன். எனக்காக நீங்க ‘பிரே’ பண்ணிக்குங்க. அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க.’’
சவுகார் ஜானகி மகளின் பெயர் யக்ஞபிரபா! ‘யக்ஞம்’ என்றால் யாகம் – ‘பிரபை’ என்றால் ஒளி! யாகத்தில் பிறந்த ஒளி என்று பொருள். .dailythanthi.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக