செவ்வாய், 29 ஏப்ரல், 2014

பிரியங்கா காங்கிரசுக்கு ஆக்சிஜன் கொடுத்துவிட்டார் ! பிரியங்கா அலையில் சிக்கி பாஜக நிச்சயம் பெரும் பாதிப்பை ?


ரேபரேலி: தம்பி ராகுல் காந்தியை விட ரேபரேலி மற்றும் அமேதியில் அக்கா பிரியங்கா காந்திதான் அமர்க்களப்படுத்தி வருகிறார். இரு தொகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பிரியங்கா அலைதான். இந்த அலையில் சிக்கி பாஜகவினர் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். சாதாரணமான கைத்தறிப் புடவை, படு சிம்பிளான தோற்றம், எளிமையான, புத்திசாலித்தனமான பேச்சு, சொல்லும் விஷயத்தை தெளிவாகச் சொல்லுதல், குற்றச்சாட்டுக்களை ஆணித்தரமாக வைத்தல், குற்றச்சாட்டுகளுக்குப் பதிலிளிக்கும்போது தெளிவாக அதை விளக்குதல், அநாகரீகமாக பேசாமல் இருத்தல்.. என ஒரு தெளிவான தலைவருக்கு இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும பிரியங்காவிடம் நிரம்பி வழிவதால் மக்களிடையே ஏகோபித்த ஆதரவை அவர் பெற்று விட்டார்.  பிரியங்காவின் பிரமாதமான பிரசார ஸ்டைல், அவரது தம்பி ராகுல் காந்தியையே இரு தொகுதிகளிலும் ஓரம் கட்டி விட்டது. கூடவே மோடி அலையும் அடிபட்டுப் போய் விட்டது.

பிரியங்கா காந்தியின் பேச்சு படு சிம்பிளாக இருக்கிறது. நிறுத்தி நிதானமாக அழகாக, பொறுப்பாக, பொறுமையாக, பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி அசத்துகிறார். அவரது பேச்சை அத்தனை பொறுமையாகவும், ஆர்வத்துடனும் மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.
தனது பாட்டி இந்திரா காந்தி, அம்மா சோனியா காந்தி போலவே சாதாரணமான புடவையில்தான் பிரசாரத்திற்குப் போகிறார் பிரியங்கா. கைத்தறிப் புடவை, சாதான செருப்பு என அமெரிக்கையான தோற்றத்துடன் அமேதி மற்றும் ரேபரேலியை சுற்றி வருகிறார்.
மற்ற தலைவர்களைப் போல அவர் பாட்டுக்கு மேடை ஏறிப் பேசி விட்டுப் போவதில்லை. மாறாக, தன்னை எல்லோராலும் பார்க்க முடிகிறதா என்று கேட்டுக் கொள்கிறார். பேசுவது கேட்கிறதா என்றும் கேட்கிறார். அதன் பின்னர்தான் பேசவே ஆரம்பிக்கிறார்.
இத்தனைக்கும் கடந்த 8 நாட்களாகத்தான் தம்பி போட்டியிடும் அமேதி, அம்மா போட்டியிடும் ரேபரேலி ஆகிய தொகுதிகளை வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா. ஆனால் எங்கு பார்த்தாலும் பிரியங்கா அலையாக இருக்கிறது. மோடியை ஆளவே காணோம். ராகுல் காந்தியையே ஓரம் கட்டி விட்டார் பிரியங்கா என்கிறார்கள்.
இத்தனை காலமாக மாநிலம் விட்டு மாநிலமாக ஓடி ஓடி ராகுல் பேசி வந்தும் கூட காங்கிரஸால் சாதிக்க முடியாததை இந்த எட்டு நாட்களில் பிரியங்கா சாதித்து விட்டதாக இரு தொகுதிகளிலும் சொல்கிறார்கள்.
இப்போது மோடிக்கு நிகராக தேசிய செய்திகளில் பிரியங்காவின் பெயர்தான் நிற்கிறது. அவரது பேச்சுக்கள் கவனிக்கப்படுகின்றன. அவரது குற்றச்சாட்டுக்கள் கவனிக்ப்படுகின்றன. அவர் தரும் விளக்கம் அனைவராலும் அவதானிக்கப்படுகிறது.
விட்டால் மோடிக்கு மிகக் கடுமையான சவாலாக பிரியங்கா உருவெடுப்பார் என்பதால் பாஜகவினரே தற்போது ராகுலை விட பிரியங்காவையே கடும் சவாலாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
பாஜகவினர் வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அதே வேகத்தில் அதிரடியாக பதில் கொடுக்கிறார் பிரியங்கா. குறிப்பாக மோடி தன்னையும், தனது கணவரையும் கிண்டலடித்தது குறித்து பிரியங்கா கொடுத்த பதில்கள் அனைவரையும் அசத்தி விட்டன.
தற்போது ரேபரேலி மற்றும் அமேதியுடன் நின்றிருக்கிறார் பிரியங்கா. ஆனால் வருங்காலத்தில் அவர் அதைத் தாண்டி வெளியே வந்தால் நிச்சயம் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பலமாக, ஏன் புது வாழ்வாகக் கூட அமையலாம் என்று நம்பப்படுகிறது. அப்போது பாஜக நிச்சயம் பெரும் பாதிப்பை சந்திக்கவும் கூடும்.
மே 16ம் தேதிக்குப் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் பிரியங்காவிடம் கேட்டதற்கு, நான் எதையும் திட்டமிடுவதில்லை என்று புன்னகை பூத்தபடி சொன்னார் பிரியங்கா.
காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் பிரியங்கா குறித்து் கூறுகையில், இந்திராவுக்குப் பிறகு மிகப் பெரிய புத்திசாலி, திறமைசாலி பிரியங்காதான். அதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. நிச்சயம் அவர் மனதில் ஏதாவது திட்டம் இருக்கும். ஆனால் முடிவுகளை அவர் மீது யாரும் திணிக்க முடியாது. அதை அவர் விரும்ப மாட்டார். அவராகவே முடிவெ்டுப்பார். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் என்றார்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் என்கிறார்கள். பிரியங்கா காந்தி, கட்சியில் தீவிரமாக செயல்பட முடிவு செய்து விட்டால், நிச்சயம் ராகுல் போல சொதப்ப மாட்டார். அதிரடியாக செயல்படுவார். அந்த வேகத்தில் நிச்சயம் பாஜக அடிபட்டுப் போய் விடும் என்று காங்கிரஸாரே உறுதிபடச் சொல்கிறார்கள்.
tamil.oneindia.in/


கருத்துகள் இல்லை: